ETV Bharat / health

கண்டுகொள்ளப்படாத ஆண்களின் மன அழுத்தம்: அறிகுறிகளும் தீர்வுகளும்!

மன அழுத்தத்தின் தீவிரத்தால் உயிரை மாய்த்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : October 7, 2026 at 12:46 PM IST

3 Min Read
Choose ETV Bharat

வாழ்க்கை பயணத்தில் சோர்வும் கவலையும் இயல்பாக வந்து போகும் விஷயங்கள்தான். ஆனால், அந்த சோர்வு நம்மை விட்டு விலகாமல் தொடர்ந்து அலைக்கழித்தால், அது வெறும் மனக்கவலை மட்டுமல்ல, 'மன அழுத்தம்' (Depression) என்னும் மனநலப் பாதிப்பாகவும் இருக்கலாம்.

பொதுவாக மன அழுத்தம் என்றால் பெண்களை அதிகம் பாதிக்கும் ஒன்று என்ற எண்ணமே பரவலாக இருக்கிறது. ஆனால், ஆண்களையும் இது பெருமளவில் பாதிக்கிறது என்பதே நிதர்சனம்.

நமது சமூகத்தில் "ஆண்கள் அழக்கூடாது", "ஆண்கள் எப்போதும் மன உறுதியோடு இருக்க வேண்டும்" என்ற தவறான நம்பிக்கைகள் காலம் காலமாக பதிய வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, பெரும்பாலான ஆண்கள் தங்களுக்குள் இருக்கும் மன அழுத்தத்தை வெளியே சொல்ல முடியாமல், தங்களுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்கிறார்கள்.

வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும், இந்த மன அழுத்தம் அவர்களின் நடத்தை, உணர்வுகள் மற்றும் உடலளவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஒரு ஆண் திடீரென மாறுபட்ட சுபாவத்துடன் நடந்துகொண்டால், அவருக்குள் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

இந்நிலையில், ஆண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தின் அறிகுறிகள், அதை அடையாளம் காணும் முறைகள் மற்றும் அதிலிருந்து மீண்டு வருவது எப்படி என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஆண்களும் மன அழுத்தமும்: ஒரு பார்வை

அமெரிக்க மனவியல் அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, லட்சக்கணக்கான ஆண்கள் தினமும் மன அழுத்தம் அல்லது பதற்றத்தால் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களோடு ஒப்பிடும்போது ஆண்களுக்கு மன அழுத்தம் கண்டறியப்படும் வீதம் குறைவாக இருந்தாலும், மன அழுத்தத்தின் தீவிரத்தால் உயிரை மாய்த்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.

இதற்கு முதன்மையான காரணம், ஆண்கள் தங்கள் பாதிப்பை வெளியே சொல்லாமல் மறைப்பதே ஆகும். மன அழுத்தம் என்பது ஒருவரது சிந்தனை, உணர்வுகள், உடல்நலம் மற்றும் அன்றாட செயல்பாடுகள் என அனைத்தையும் பாதிக்கக்கூடிய ஒரு சீர்கேடாகும்.

ஆண்களிடம் தென்படும் முக்கிய அறிகுறிகள்

மன அழுத்தம் என்பது நபருக்கு நபர் வேறுபடக்கூடியது. பெண்களுக்கு அழுவது அல்லது மிகுந்த சோகம் முதன்மை அறிகுறியாக இருக்கும் என்றால், ஆண்களுக்கு அது முற்றிலும் வேறு விதமாக வெளிப்படும்.

நடத்தை மாற்றங்கள்

மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஒரு ஆண், அதை மற்றவர்களிடமிருந்து மறைப்பதற்காகவும், சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ முயலும்போதும் சில ஆபத்தான பழக்கங்களை நோக்கி நகர்கிறார்கள்.

  • மனக்கவலையை மறப்பதற்காக அதிகளவில் மது அருந்துவது அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது.
  • சிறிய விஷயங்களுக்கும் சட்டென்று கோபப்படுவது, எரிச்சலடைவது மற்றும் குடும்பத்தினரிடம் சீறுவது.
  • குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசுவதைத் தவிர்த்து, தனிமையிலேயே இருப்பது.
  • ஓய்வே இல்லாமல், எப்போதும் வேலையிலேயே மூழ்கியிருப்பது.
  • திவேகமாக வாகனம் ஓட்டுதல், கட்டுப்பாடற்ற சூதாட்டம் போன்ற ஆபத்தான காரியங்களில் ஈடுபடுவது.
  • இயல்பான விருப்பங்கள் குறைவது மற்றும் அது சார்ந்த செயல்பாடுகளில் சிக்கல்கள் ஏற்படுவது.

உணர்வுப்பூர்வமான மாற்றங்கள்

ஆண்கள் தங்களின் சோகத்தை வெளியே காட்ட தயங்குவதால், அவர்களின் மன அழுத்தம் பின்வரும் உணர்வுகளாக உருவெடுக்கிறது,

  • எப்போதும் ஒருவித படபடப்பும் எரிச்சல் உணர்வும் நீடித்திருப்பது.
  • மன அமைதியின்மை மற்றும் விரக்தி மேலோங்குவது.
  • பிடிமானமோ அல்லது ஆர்வமோ இல்லாமல் போவது.
  • தீவிரமான நிலையில், தற்கொலை எண்ணங்கள் உருவாவது.

உடல் ரீதியான மாற்றங்கள்

மன அழுத்தத்திற்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மூளையில் உள்ள வேதிப்பொருட்களின் சமநிலையின்மையால் சில உடல்நல கோளாறுகளும் தோன்றும்,

  • தலைவலி மற்றும் நெஞ்சு பகுதியில் இறுக்கம் ஏற்படுவது.
  • முதுகு வலி, கை மற்றும் கால் மூட்டு வலிகள்.
  • செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்று உபாதைகள்.
  • அதிகப்படியான சோர்வு மற்றும் எப்போதும் ஆற்றல் இழப்பது போன்ற உணர்வு.
  • தூக்கமின்மை அல்லது அளவுக்கு அதிகமாகத் தூங்குவது.
  • பசியின்மை அல்லது அளவுக்கு அதிகமாக உண்பதால் உடல் எடையில் மாற்றம் ஏற்படுவது.

ஆண்களின் மன அழுத்தம் ஏன் எளிதில் கண்டறியப்படுவதில்லை?

  • வெளிப்படையாக பேச தயங்குவது: "ஆண்கள் பலவீனத்தை காட்டக்கூடாது" என்ற சமூக அழுத்தத்தால், மனக்கஷ்டத்தை வெளியே சொல்ல ஆண்கள் தயங்குகிறார்கள்.
  • தவறான கணிப்பு: ஆண்கள் வெளிப்படுத்தும் கோபத்தை அவர்களின் இயல்பான குணம் என்று நினைக்கிறார்களே தவிர, அது மன அழுத்தத்தின் அறிகுறி என்பதைப் பலரும் உணர்வதில்லை.
  • உடல் உபாதைகளை மட்டுமே கூறுவது: மருத்துவரை அணுகும்போது கூட, மனக்கவலையை கூறாமல் தலைவலி, தூக்கமின்மை போன்ற உடல் ரீதியான பிரச்சனைகளை மட்டுமே கூறுவதால் சரியான பாதிப்பு கண்டறியப்படாமல் போகிறது.

மன அழுத்தத்திலிருந்து மீண்டு வர என்ன செய்வது?

  • வழக்கமான உடற்பயிற்சி: தினமும் நடைபயிற்சி அல்லது எளிய உடற்பயிற்சிகளை செய்வது மூளையில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி மனநிலையை சீராக்கும்.
  • திட்டமிட்ட நாளாந்த முறை: தினசரி வேலைகளை அட்டவணைப்படுத்திச் செய்வது மனதிற்கு தெளிவை தரும்.
  • மனம் விட்டுப் பேசுதல்: நம்பிக்கைக்குரிய நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ மனதைத் திறந்து பேசுவது பாரத்தை குறைக்கும்.
  • மதுவை தவிர்த்தல்: மன அழுத்தத்தை குறைக்க மதுவை ஒரு தீர்வாகப் பயன்படுத்தாமல் முற்றிலும் தவிர்ப்பது நலம் தரும்.
  • யோகா மற்றும் தியானம்: மனதை ஒருமுகப்படுத்தும் யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் பதற்றத்தை குறைக்க உதவும்.

ஆய்வு:

https://jamanetwork.com/journals/jamapsychiatry/fullarticle/1733742

https://www.cdc.gov/nchs/products/databriefs/db303.htm

https://jamanetwork.com/journals/jamapsychiatry/fullarticle/1733742

இதையும் படிங்க:

மதுவை விட நினைத்தாலும் முடியாதது ஏன்? பின்னணியில் இருக்கும் உளவியல் காரணம் பற்றி தெரியுமா?

மார்பக புற்றுநோய் சுய பரிசோதனை: கட்டியை தாண்டி பெண்கள் கவனிக்க வேண்டிய 5 முக்கிய அறிகுறிகள்!