சிறுவயதிலே பூப்படையும் பெண்கள் - பிராய்லர் கோழி தான் காரணமா? உண்மை என்ன?
தெருவில் இறங்கி ஓடிப்பிடித்து விளையாடிய காலம் போய், மொபைல் போன், டிவி என ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது. உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும் போது,அது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை தூண்டி, முன்கூட்டியே பூப்படைய வைக்கிறது.

Published : August 5, 2026 at 7:00 AM IST
அப்படியே ஒரு பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்னால் பின்னோக்கி சென்று பாருங்கள். உங்கள் வீட்டில் ஒரு பெண் பிள்ளை 13 அல்லது 14 வயதை நெருங்கிவிட்டால் போதும்..வீட்டில் உள்ள பெரியவர்கள் எல்லாம் ஒன்றாக கூடி ரகசியமாக பேச தொடங்கிவிடுவார்கள். "பொண்ணு சீக்கிரம் பெரிய மனுஷி ஆயிடுவா போலிருக்கே, அதுக்குள்ள இவ்வளவு வளந்துட்டா" என்று அக்கம் பக்கத்தினர் பேசும் காலமெல்லாம் ஒரு காலம்.
ஆனால், இந்த இடைப்பட்ட 10 ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இன்று 5 வகுப்போ அல்லது 6ம் வகுப்போ படிக்கும் சிறுமிகளுக்கே மாதவிடாய் தொடங்கிவிடுகிறது. "எல்லாம் இந்த பிராய்லர் கோழியை சாப்பிடுறதால தான் இப்படி ஆகுது" என்று போகிற போக்கில் ஒரு காரணத்தை சொல்லிவிட்டு நாம் கடந்துபோய்விடுகிறோம்.
ஆனால், உண்மையில் சிக்கன் மட்டும்தான் இதற்கு காரணமா? அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் மருத்துவ காரணங்கள் இருக்கின்றனவா?
என்ன இந்த 'ப்ரிகோஷியஸ் பியூபர்ட்டி'?
வழக்கமாக 10 முதல் 16 வயதுக்குள் நடக்க வேண்டிய பூப்படைதல் நிகழ்வு, 8 வயதிற்கும் முன்பாகவே நடப்பதை மருத்துவ உலகில் 'ப்ரிகோஷியஸ் பியூபர்ட்டி' (Precocious Puberty) என்று கூறுகிறார்கள்.
முந்தைய தலைமுறையோடு ஒப்பிடும்போது, தற்போதைய தலைமுறை பெண் குழந்தைகளிடம் 3 முதல் 4 ஆண்டுகள் முன்னதாகவே இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் அதிகமாக இருந்த இந்த நிலை, இப்போது இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரவி வருவது தான் பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
வெறும் 'சிக்கன்' மட்டும்தானா காரணம்?
சுற்றுவட்டாரத்தில் பலரும் சொல்வது போல பிராய்லர் கோழிகளில் ஊசி போடப்படுவதால் தான் ஹார்மோன் மாற்றம் ஏற்படுகிறது என்பதில் பகுதி உண்மையே தவிர, அதுமட்டுமே முழுமையான காரணம் இல்லை என என்கிறார் பெங்களூரு காவேரி மருத்துவமனையின் குழந்தை நல நிபுணர். அவர் கூறும் பிற காரணங்கள் இதோ..
- மாறிப்போன உணவுமுறை: சத்தான பாரம்பரிய உணவுகளை மறந்து, பாக்கெட் உணவுகள், நொறுக்கு தீனிகள் , மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குழந்தைகள் அதிகம் உண்பது.
- உடற்பயிற்சியின்மை மற்றும் உடல் பருமன்: தெருவில் இறங்கி ஓடிப்பிடித்து விளையாடிய காலம் போய், மொபைல் போன், டிவி என ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது. உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும் போது, அது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை தூண்டி, முன்கூட்டியே பூப்படைய வைக்கிறது.
- ஹார்மோன் மற்றும் சுரப்பி பிரச்சனைகள்: பிட்யூட்டரி , அட்ரீனல் சுரப்பிகள் அல்லது கருப்பையில் ஏற்படும் சில நுட்பமான மாற்றங்கள்.
- பிற தீவிர மருத்துவக் காரணங்கள்: அரிதாக சில குழந்தைகளுக்கு மரபணு குறைபாடுகள், மூளை அல்லது தண்டுவட பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கதிர்வீச்சுகளின் தாக்கம் காரணமாகவும் இது நிகழலாம்.
ஆபத்துகள் என்னென்ன?
8 அல்லது 9 வயதில் ஒரு சிறுமிக்கு மாதவிடாய் வரும்போது, அந்த பிஞ்சு உடலாலும் மனதாலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
- மனவியல் ரீதியான பயம்: விளையாடும் வயதில் திடீரென உடலில் ஏற்படும் ரத்தப்போக்கை கண்டு குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்ற தாழ்வு மனப்பான்மையும், பள்ளிக்கு செல்ல தயக்கமும், மன அழுத்தமும் அவர்களை முடக்கிவிடுகிறது.
- எதிர்கால உடல்நலக் கோளாறுகள்: மிக சிறிய வயதிலேயே மாதவிடாய் தொடங்கும் குழந்தைகளுக்கு, வருங்காலத்தில் உடல் பருமன், PCOS (சினைப்பை நீர்க்கட்டி), தைராய்டு பிரச்சனைகள் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் சிறிதளவு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்!
திடீரென ஒரு நாளில் மாதவிடாய் வருவதற்கு முன்பாகவே, குழந்தையின் உடலில் சில மாற்றங்கள் தோன்றும். அவற்றை பெற்றோர்கள், குறிப்பாக தாய்மார்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்:
- 8 முதல் 10 வயதுக்குள் முகத்தில் பருக்கள் தோன்றுதல்.
- மார்பக வளர்ச்சித் தொடங்குதல்.
- அக்குள் மற்றும் பெண் உறுப்புகளில் முடி வளர்ச்சி ஏற்படுதல்.
இந்த அறிகுறிகளை கண்டால் பதற்றப்படாமல், உடனடியாக ஒரு நல்ல மகப்பேறு மருத்துவரையோ அல்லது குழந்தைகள் நல மருத்துவரையோ அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டால், பெற்றோர்கள் பயப்படாமல் அவர்களை அரவணைக்க வேண்டும்.
- "இது பயப்பட வேண்டிய விஷயம் இல்லை, எல்லாப் பெண்களுக்கும் நடப்பதுதான்" என்பதை அன்பாக புரியவையுங்கள்.
- மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள், பேட்களை பயன்படுத்தும் முறை ஆகியவற்றை கூச்சப்படாமல் சொல்லி கொடுங்கள்.
- குழந்தையின் மனதில் எந்தவிதத் தாழ்வு மனப்பான்மையும் வராதவாறு அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் பாதுகாப்பான உணர்வையும் தாருங்கள்.
- உணவு முறையிலும் பழக்கவழக்கத்திலும் செய்ய வேண்டிய மாற்றங்கள்
ஹார்மோன்களை சீராக வைத்திருக்கவும், இந்த சிக்கலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் சில எளிய வழிமுறைகள்:
| உணவில் சேர்க்க வேண்டியவை | தவிர்க்க வேண்டியவை |
| மீன், முட்டை, சுண்டல், பருப்பு வகைகள் போன்ற இயற்கை புரத உணவுகள் | பிட்சா, பர்கர், பாக்கெட் உணவுகள் மற்றும் அதிக கொழுப்புள்ள ஜங்க் ஃபுட்ஸ் |
| கீரைகள், அத்திப்பழம், மாதுளை, எள், வெல்லம் போன்ற இரும்புச்சத்து (Iron) மிகுந்த உணவுகள் | நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து டிவியோ, போனோ பார்க்கும் சோம்பேறித்தனம் |
| தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் ஓடிப்பிடித்து விளையாடுதல் அல்லது உடற்பயிற்சி | இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருப்பது / தூக்கமின்மை |
ஆய்வு:
https://academic.oup.com/aje/article/194/8/2270/8090265?login=false
https://www.niddk.nih.gov/health-information/weight-management/take-charge-health-guide-teenagers

