பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ஆபத்து! கவனிக்க வேண்டிய 'நைட் ஷிப்ட்' உடல்நலப் பிரச்சனைகள்!
இரவு நேர பணியால் உடலின் வளர்சிதை மாற்றத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் ரத்தத்தில் உள்ள இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் அளவுகளில் ஏற்றத்தாழ்வுகள் உருவாகின்றன.

Published : April 8, 2026 at 12:16 PM IST
இன்று பலருக்கு வேலை நேரம் என்பது காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை என்பதாக மட்டும் இருப்பதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் வருகையால், நம்மில் பலரும் இரவு நேரங்களில் வேலை செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறோம்.
இஷ்டப்பட்டோ அல்லது குடும்ப சூழ்நிலைக்காகவோ இரவு நேரப் பணியை தேர்வு செய்தாலும், அது நம் அன்றாட வாழ்வின் சமநிலையை சற்றே மாற்றிவிடுகிறது. பகலில் தூங்குவது, இரவு முழுக்க கண் விழித்திருப்பது என்பது நம் உடலின் இயற்கை சுழற்சிக்கு மாறானது. இதனால் ஆரம்பத்தில் பெரிய பாதிப்புகள் தெரியாவிட்டாலும், நீண்ட கால அடிப்படையில் சோர்வு, மன அழுத்தம் மற்றும் செரிமானக் கோளாறுகள் போன்றவை ஏற்பட தொடங்குகின்றன.
தூக்கமின்மையும் அதன் பாதிப்புகளும்:
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க ஆழ்ந்த உறக்கம் மிகவும் அவசியம். பகல் முழுவதும் உழைத்து கலைத்து போன உடலுக்கு இரவு நேர தூக்கம் தான் சிறந்த ஓய்வை தருகிறது. இந்த ஓய்வின் மூலமே நம் உடல் மீண்டும் புத்துயிர் பெறுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், இரவு நேரங்களில் வேலை செய்பவர்கள் இயற்கையாகவே ஆழ்ந்த உறக்கத்தை இழக்கிறார்கள். இதனால் நாளடைவில் அவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது. இது வெறும் உடல் சோர்வோடு நின்றுவிடாமல், கவனக்குறைவு மற்றும் எரிச்சல் போன்ற மனநல பாதிப்புகளுக்கும் வழிவகுக்கிறது என்று NIH ஆய்வுதளத்தில் வெளியான ஆய்வு கட்டுரை கூறுகிறது.
பெண்களுக்கான கூடுதல் கவனம்
இரவு நேரப் பணியில் இருக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக Night shift work and breast cancer risk – 2023 update of epidemiologic evidence என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.
பகல் நேரப் பணியில் இருக்கும் பெண்களோடு ஒப்பிடும்போது, வாரம் ஒருமுறை இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு கூட இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். உடலின் ஹார்மோன் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. எனவே, இப்பணியில் இருக்கும் பெண்கள் தங்கள் உடல்நலத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
மன அழுத்தமும் தனிமையும்
இரவு நேரங்களில் வேலை செய்பவர்கள் சமூக வாழ்க்கையிலிருந்து சற்றே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். மற்றவர்கள் தூங்கும் போது இவர்கள் வேலை செய்வதும், மற்றவர்கள் விழித்திருக்கும் போது இவர்கள் தூங்குவதுமாக இருப்பதால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செலவிட நேரம் கிடைப்பதில்லை.
இதனால் ஏற்படும் ஒட்டரித்தனம் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. இந்த மன அழுத்தம் காரணமாக செரிமான கோளாறுகள், தலைவலி மற்றும் மனச்சோர்வு போன்றவை ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
இதய ஆரோக்கியம் மற்றும் வைட்டமின் டி
நமது ரத்த நாளங்கள் தங்களை சரி செய்து கொள்ளும் பணியை தூக்கத்தில் தான் மேற்கொள்கின்றன. ஆனால் இரவு முழுவதும் விழித்திருக்கும் போது ரத்த ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு, அது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.
உலக சுகாதார நிறுவனம் (WHO), அதிக வேலைப்பளு மற்றும் இரவு நேரப் பணிகளால் இதய பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது என்கிறது. அதேபோல், பகல் நேரத் தூக்கத்தால் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி இவர்களுக்கு கிடைப்பதில்லை. இது எலும்புகளின் வலிமையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், உடலில் கால்சியம் சத்து குறைவதற்கும் காரணமாகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
நீண்ட கால உடல்நலப் பாதிப்புகள்
இரவு நேர பணியால் உடலின் வளர்சிதை மாற்றத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் ரத்தத்தில் உள்ள இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் அளவுகளில் ஏற்றத்தாழ்வுகள் உருவாகின்றன. ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் போன்ற நீண்ட கால பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, உடல்நலத்தில் ஏதேனும் சிறிய மாற்றம் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
நைட்- ஷிப்ட் பார்ப்பவர்களுக்கான டிப்ஸ்:
- வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் ஒரு மிதமான சுடுநீரில் குளியல் போடுவது மனதிற்கும் உடலுக்கும் இதமான ஓய்வைத் தரும். உங்கள் பணி நேரத்திற்கு ஏற்ப உணவு நேரத்தை சரியாக திட்டமிடுங்கள். தினமும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை பழக்கப்படுத்தி கொண்டால் உடல் அந்த முறைக்கு எளிதில் பழகிவிடும்.
- உணவில் புரோட்டீன் சத்து நிறைந்த முட்டை, புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். பசியோடு தூங்க செல்வது நல்லதல்ல, பசி இல்லையென்றாலும் ஒரு கிளாஸ் பால் குடித்துவிட்டுத் தூங்கினால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.
- வேலையின் போது காபி, டீ மற்றும் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு, பழச்சாறுகளை அருந்துவது புத்துணர்வைத் தரும் என்று University of St. Augustine Health Sciences தளத்தில் வெளியான ஆய்வு கட்டுரை பரிந்துரைக்கிறது.
- தினமும் உடற்பயிற்சி அல்லது யோகா செய்வதன் மூலம் உடலையும் மனதையும் வலிமையாக வைத்து கொள்ள முடியும். வார விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடுங்கள். இது உங்களின் மன அழுத்தத்தை குறைத்து மீண்டும் புத்துணர்ச்சியுடன் வேலைக்கு செல்ல உதவும்.
| இதையும் படிங்க: குறைமாத குழந்தையாக பிறந்தவர்கள் கவனத்திற்கு! பிற்காலத்தில் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் - ஆய்வில் தகவல்! |
பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

