வெயில் காலத்திலும் சளி, இருமலா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்களை சாப்பிடுங்க!
தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வைட்டமின் பி6 முக்கிய பங்காற்றுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு இந்த வைட்டமின் மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Published : May 5, 2026 at 12:27 PM IST
பொதுவாக நாம் சுவையான உணவை தேடி ஓடுகிறோமே தவிர, அந்த உணவு நம் உடலுக்கு தேவையான வலிமையை தருகிறதா என்பதை பற்றி யோசிப்பதில்லை. பருவநிலை மாறும் போதோ அல்லது அலுவலகத்தில் சக ஊழியருக்கு சளி பிடிக்கும்போதோ, நாமும் எளிதில் நோய்வாய்ப்படுகிறோம் என்றால், நம் உடலின் தற்காப்பு அரண் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம்.
நம்மை சுற்றியுள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் கவசமாக 'நோய் எதிர்ப்பு மண்டலம்' செயல்படுகிறது. இந்த மண்டலம் சரியாக இயங்க வேண்டுமென்றால், அதற்கு சரியான ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக வைட்டமின்கள் மிகவும் அவசியம். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
சிட்ரஸ் பழங்கள்:
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதில் வைட்டமின் சி முதன்மையான இடத்தை பிடிக்கிறது. இது குறித்து நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் (NIH) வெளியிட்டுள்ள ஆய்வின்படி, வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்கள் மிக எளிதாகத் தொற்று நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த வைட்டமின் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, கிருமிகளை அழிக்கும் திறனை மேம்படுத்துகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி போன்ற பழங்களில் இது கொட்டிக் கிடக்கிறது. பழங்கள் மட்டுமல்லாது, காய்கறிகளான கீரை வகைகள் மற்றும் குடைமிளகாயிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவற்றை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு ஒரு உடனடி பாதுகாப்பை வழங்கும்.
தற்காப்பை பலப்படுத்தும் வைட்டமின் பி6
தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வைட்டமின் பி6 முக்கிய பங்காற்றுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு இந்த வைட்டமின் மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இது பெரும்பாலும் புரத சத்து நிறைந்த உணவுகளில் அதிகம் காணப்படுகிறது.
நீங்கள் அசைவ உணவு உண்பவராக இருந்தால் சிக்கன் மூலமாகவும், சைவப் பிரியராக இருந்தால் வாழைப்பழம், உருளைக்கிழங்கு மற்றும் கொண்டைக்கடலை போன்ற உணவுகள் மூலமாகவும் இந்த சத்தை பெறலாம். அன்றாட உணவில் இந்த மாற்றங்களை செய்வது உடலின் உள் கட்டமைப்பை வலிமையாக்கும்.
வைரஸை எதிர்க்கும் வைட்டமின் இ
வைட்டமின் இ என்பது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இது உடலில் உள்ள செல்கள் சேதமடையாமல் பாதுகாப்பதோடு, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்குதலை முறியடிக்கிறது. ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அதிலிருந்து விரைவாக மீண்டு வருவதற்கு வைட்டமின் இ, ஜிங்க் மற்றும் செலினியம் ஆகிய சத்துக்கள் தேவைப்படுவதாக 'ScienceDirect' ஆய்வுத்தளம் குறிப்பிடுகிறது.
சூரியகாந்தி விதைகள், வேர்க்கடலை மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடுவதன் மூலம் இந்த சத்தை எளிதாக பெறலாம். மேலும், கீரை வகைகளிலும் வைட்டமின் இ கணிசமாக உள்ளது.
கண்களுக்கும் உடலுக்கும் வைட்டமின் ஏ
வைட்டமின் ஏ என்றாலே கண் பார்வைக்கு மட்டும்தான் நல்லது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இதில் உள்ள வீக்கத்தை குறைக்கும் பண்புகள் (Anti-inflammatory properties) நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
பால், தயிர், முட்டை போன்ற தினசரி உணவுகளிலும், சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களிலும் இது அதிகம் உள்ளது. காய்கறிகளை பொறுத்தவரை கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, புரோக்கோலி மற்றும் கீரைகளை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் ஏ சத்தை நாம் தாராளமாக பெற முடியும் என clevelandclinic ஆய்வு தெரிவிக்கிறது.
சூரிய ஒளி வைட்டமின்
மற்ற வைட்டமின்கள் உணவின் மூலம் கிடைப்பதை போல, வைட்டமின் டி சூரிய ஒளியின் மூலமே பெருமளவு கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு செல்கள் முறையாக வளர்வதற்கும், அவற்றின் செயல்பாட்டிற்கும் வைட்டமின் டி, வைட்டமின் சி, ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் புரதம் ஆகியவை மிகவும் முக்கியமானவை என The Nutrition Source தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலை நேரத்தில் பத்து முதல் முப்பது நிமிடம் மிதமான வெயிலில் இருப்பது உங்கள் எலும்புகளை உறுதிப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் சுறுசுறுப்பாக வைக்கும். உணவில் மீன், முட்டை மற்றும் பால் போன்றவற்றை மிதமான அளவில் சேர்த்துக் கொள்வதும் கூடுதல் பலனை தரும்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

