இளைஞர்களிடையே அதிகரிக்கும் வெரிகோஸ் வெய்ன்ஸ் - அறிகுறிகள் என்னென்ன? தடுப்பது எப்படி?
வேலை நிமித்தமாக ஒரே இடத்தில் பல மணி நேரம் தொடர்ந்து அமர்ந்திருப்பது அல்லது ஒரே இடத்தில் அசையாமல் நின்றுகொண்டே இருப்பது நரம்புகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Published : July 5, 2026 at 3:03 PM IST
இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் நமது அன்றாட பழக்கவழக்கங்களால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்று, முந்தைய தலைமுறையினருக்கு வயதான காலத்தில் மட்டுமே அதிகம் காணப்பட்ட 'வெரிகோஸ் வெய்ன்ஸ்' (Varicose Veins) எனப்படும் நரம்பு சுருட்டல் தற்போது இளைஞர்களிடமும், நடுத்தர வயதினரிடமும் வேகமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் பாதியளவு பேர் 35 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பது கவலைக்குரிய விஷயமாகும். ஆரம்பத்திலேயே இதை கவனித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அந்த வகையில், இந்த நரம்பு சுருட்டல் பாதிப்பு ஏன் ஏற்படுகிறது, இதன் அறிகுறிகள் மற்றும் இதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வெரிகோஸ் வெய்ன்ஸ் என்றால் என்ன?
நமது கை, கால்களில் உள்ள ஆழமான நரம்புகளும், மேற்புற நரம்புகளும் உடலில் உள்ள ரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு கொண்டு செல்லும் பணியை செய்கின்றன. இந்த நரம்புகளுக்குள் ரத்தம் மேல்நோக்கி செல்லும்போது, அது மீண்டும் கீழ்நோக்கி இறங்காமல் தடுப்பதற்காக 'வால்வு' (Valve) போன்ற ஒரு அமைப்பு இருக்கும்.
இந்த வால்வு அமைப்பில் ஏதேனும் கசிவு ஏற்பட்டாலோ அல்லது அது சரியாக செயல்படாமல் போனாலோ, ரத்தம் மேல்நோக்கி செல்ல முடியாமல் கீழ்நோக்கியே தங்கிவிடுகிறது. இவ்வாறு நரம்புகளிலேயே ரத்தம் தேங்குவதால், அந்த நரம்புகளின் மீது கடுமையான அழுத்தம் உண்டாகிறது. இதன் காரணமாக நரம்புகள் தடித்து, சுருண்டு, நீல நிறத்தில் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன. இதையே மருத்துவர்கள் 'வெரிகோஸ் வெய்ன்ஸ்' என்று அழைக்கிறார்கள்.
பாதிப்பை அதிகரிக்கும் முக்கிய காரணங்கள்
அமெரிக்க இதய சங்கத்தின் (American Heart Association) ஆய்வுகளின்படி, வெரிகோஸ் வெய்ன்ஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு இரண்டு முக்கிய பழக்கவழக்கங்கள் காரணமாக அமைகின்றன.
- தொடர்ந்து அமர்ந்திருப்பது அல்லது நிற்பது: வேலை நிமித்தமாக ஒரே இடத்தில் பல மணி நேரம் தொடர்ந்து அமர்ந்திருப்பது அல்லது ஒரே இடத்தில் அசையாமல் நின்றுகொண்டே இருப்பது நரம்புகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் கால்களில் உள்ள தசைகளின் இயக்கம் குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் தடைபடுகிறது.
- உடல் பருமன் (Obesity): அதிக உடல் எடையை கொண்டிருப்பவர்களுக்கு, அவர்களின் முழு எடையின் அழுத்தமும் கால்களில் உள்ள நரம்புகளின் மீது விழுகிறது. இந்த தொடர் அழுத்தத்தால் நரம்புகள் பலவீனமடைந்து எளிதில் சுருண்டுவிடுகின்றன.
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான ரத்த ஓட்டத்தை வழங்குவதற்காக, தாயின் உடலில் ரத்தத்தின் அளவு 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இந்த உபரி ரத்தம் நரம்புகளில் கூடுதல் அழுத்தத்தை உருவாக்குகிறது.
மேலும், கர்ப்ப காலத்தில் சுரக்கும் 'புரோஜெஸ்ட்டிரோன்' (Progesterone) ஹார்மோன் நரம்புகளின் சுவர்களை தளர செய்கிறது. இதனால் நரம்புகளில் உள்ள வால்வுகள் சரியாக மூட முடியாமல் ரத்தம் தேங்க தொடங்குகிறது. பிரசவத்திற்கு பிறகு 60 சதவீத பெண்களுக்கு இந்த பிரச்சனை தானாகவே சரியாகிவிடுகிறது. ஆனால், மீதமுள்ள 40 சதவீத பெண்களுக்கு இந்த பாதிப்பு தொடர்ந்து நீடிக்கிறது.
அறிகுறிகள் என்னென்ன?
'மாயோ கிளினிக்' (Mayo Clinic) அமைப்பின் தகவல்படி, வெரிகோஸ் வெய்ன்ஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு கீழ்க்காணும் அறிகுறிகள் தென்படும்:
- கால்களில் உள்ள நரம்புகள் தடித்து, சுருண்டு, புடைத்து வெளியே தெரிவது.
- கால்களில் தொடர்ந்து வீக்கம், வலி அல்லது எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படுவது.
- கால்கள் எப்போதும் கனமாக இருப்பது போன்ற ஒரு அசௌகரியம் தோன்றுவது.
- நரம்புகள் சுருண்ட பகுதிகளில் கடுமையான அரிப்பு ஏற்படுவது மற்றும் அந்த இடத்து சர்மம் கருமை நிறமாக மாறுவது.
என்ன செய்வது?
வெரிகோஸ் வெய்ன்ஸ் பாதிப்பில் மரபணுக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. பெற்றோரில் யாருக்கேனும் இந்த பாதிப்பு இருந்தால், பிள்ளைகளுக்கும் இது ஏற்படுவதற்கான வாய்ப்பு 60 சதவீதம் வரை உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, முறையான வாழ்வியல் மாற்றங்கள் மூலம் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியும்.
- நடைப்பயிற்சி: அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் ஒரு மணி நேரம் தொடர்ந்து அமர்ந்திருந்த பிறகு, சில நிமிடங்கள் எழுந்து அங்குமிங்கும் நடக்க வேண்டும்.
- கால்களை அசைத்தல்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ நிறுவனத்தின் (Johns Hopkins Medicine) அறிவுரைப்படி, நீண்ட நேரம் உட்காரவோ அல்லது நிற்கவோ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், ரத்த ஓட்டம் சீராக இருக்க அவ்வப்போது கால்களை நீட்டி மடக்குவது அல்லது பாதங்களை அசைப்பது நல்லது.
- தினசரி உடற்பயிற்சி: தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி் கொள்ள வேண்டும். இது உடல் எடையைக் குறைப்பதுடன் ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.
- ஆரோக்கியமான உணவு முறை: துரித உணவுகள், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்து, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களை முழுமையாக கைவிட வேண்டும்.
கால்களில் நரம்புகள் சுருள்வது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அதை சாதாரண வலி என்று அலட்சியப்படுத்தாமல், ஆரம்ப கட்டத்திலேயே தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது எதிர்கால பாதிப்புகளைத் தடுக்கும்.
ஆய்வு:
ahajournals.org/doi/10.1161/circulationaha.113.008331
https://www.hopkinsmedicine.org/health/conditions-and-diseases/varicose-veins

