ETV Bharat / health

கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவது ஏன்? அக்னிவேஷ் மரணம் காட்டும் அபாயம் - மாரடைப்புக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் இதோ!

கார்டியாக் அரெஸ்ட் மாரடைப்பை விட மிக ஆபத்தானது. சில நிமிடங்களிலேயே உயிரிழப்பு ஏற்படலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : January 9, 2026 at 3:30 PM IST

2 Min Read
Choose ETV Bharat

49 வயதே ஆன, ஆரோக்கியமான ஒரு நபர், ஒரு விபத்திலிருந்து மீண்டு வரும் வேளையில் திடீரென உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், வியாழக்கிழமை அன்று தனது மகன் அக்னிவேஷ் அகர்வால் (49) மறைந்த செய்தியை வெளியிட்டார். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில், ஸ்கீயிங் விபத்தில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை பெற்று வந்த அக்னிவேஷ், குணமடைந்து வரும் வேளையில் திடீரென ஏற்பட்ட 'கார்டியாக் அரெஸ்ட்' காரணமாக உயிரிழந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

"கார்டியாக் அரெஸ்ட்" (Cardiac Arrest) மற்றும் "மாரடைப்பு" (Heart Attack) ஆகிய இரண்டையும் நாம் ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவற்றுக்கு இடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

மகன் அக்னிவேஷுடன் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் (கோப்புப்படம்)
மகன் அக்னிவேஷுடன் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)

மாரடைப்பு vs கார்டியாக் அரெஸ்ட் - என்ன வித்தியாசம்?

மாரடைப்பு: இதை ஒரு குழாயில் ஏற்படும் அடைப்பு அல்லது 'பிளம்பிங்' (Plumbing) பிரச்சினை என்று சொல்லலாம். இதய தசைகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகளில் கொழுப்பு அல்லது ரத்த உறைவு காரணமாக அடைப்பு ஏற்படும் போது மாரடைப்பு நிகழ்கிறது. ரத்தம் செல்லாத அந்தப் பகுதி தசை மெல்ல மெல்ல செயலிழக்கத் தொடங்கும் என்கிறது NIH ஆய்வு.

நெஞ்சு வலி, அழுத்தம், அதிகப்படியான வேர்வை, தாடை அல்லது இடது கையில் வலி, குமட்டல் ஆகியவை அறிகுறியாக இருக்கும். மாரடைப்பின் போது இதயம் பொதுவாக துடித்து கொண்டே இருக்கும். நோயாளி சுயநினைவோடு இருப்பார். உடனடியாகச் சிகிச்சை அளித்தால் தசைகள் அழியாமல் காப்பாற்ற முடியும்.

கார்டியாக் அரெஸ்ட்: இதை இதயத்தின் செயல்பாட்டில் ஏற்படும் மின்சாரக் கோளாறு (Electrical problem) என்று சொல்லலாம். இதயத்தின் சீரான துடிப்புக்கு அதன் மின்சார சிக்னல்கள் மிக முக்கியம். இந்த மின் சுற்றில் கோளாறு ஏற்படும் போது, இதயம் துடிப்பதை அப்படியே நிறுத்திவிடும். இதனால் மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது நின்று விடும் என Harvard Health ஆய்வுத்தளத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

எந்த முன்னெச்சரிக்கையும் இருக்காது. நபர் திடீரென மயங்கி விழுவார், நாடித்துடிப்பு இருக்காது, சுவாசம் நின்றுவிடும். இது மாரடைப்பை விட மிக ஆபத்தானது. சில நிமிடங்களிலேயே உயிரிழப்பு ஏற்படலாம்.

இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதா? ஆம். ஒருவருக்கு ஏற்படும் தீவிரமான மாரடைப்பு, இதயத்தின் மின்சார அமைப்பை சிதைத்து இதய முடக்கத்தை (Cardiac Arrest) ஏற்படுத்தலாம். ஆனால், கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கு மாரடைப்பு மட்டுமே காரணம் அல்ல. இதய துடிப்பு சீரற்ற நிலை (Arrhythmia), இதயத்தின் அமைப்புரீதியான கோளாறுகள் அல்லது தீவிர அதிர்ச்சி ஆகியவற்றாலும் இது ஏற்படலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)

உயிரைக் காக்கும் முதலுதவி (CPR)

'கார்டியாக் அரெஸ்ட்' ஏற்பட்ட ஒருவருக்கு உடனடியாகச் செய்ய வேண்டியது:

  • CPR : ஆம்புலன்ஸ் வரும் வரை நோயாளியின் நெஞ்சின் நடுப்பகுதியில் பலமாக அழுத்தம் கொடுத்து ரத்த ஓட்டத்தைத் தூண்ட வேண்டும் என்கிறது American Heart Association தளத்தில் வெளியான ஆய்வு.
  • Defibrillation: மருத்துவக் கருவிகள் மூலம் இதயத்திற்கு மின் அதிர்வு கொடுத்து மீண்டும் துடிக்க வைப்பது.

இதய நோய்கள் குறித்த தெளிவான புரிதல் ஒவ்வொருவருக்கும் அவசியம். "நேரம் என்பது தசை" (Time is Muscle) என்கிறார்கள் மருத்துவர்கள். அறிகுறிகளைக் கண்டறிந்து செயல்படுவதும், அவசர கால முதலுதவிகளைத் தெரிந்து வைத்திருப்பதும் மட்டுமே ஒரு உயிரைத் தக்கவைக்க உதவும்.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவ ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.