ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் 15 நிமிட போஸ்ட்-மீல் பழக்கம்! என்ன தெரியுமா?
சாப்பிடும் போது அல்லது சாப்பிட்ட உடனே அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். செரிமானத்திற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மிதமான அளவில் தண்ணீர் குடிப்பது நல்லது.

Published : July 5, 2026 at 4:58 PM IST
உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் நாம் சாப்பிடும் உணவுக்கு எந்த அளவு முக்கியத்துவம் தருகிறோமோ, அதே அளவு முக்கியத்துவத்தை சாப்பிட்ட பிறகு நாம் செய்யும் செயல்களுக்கும் தர வேண்டும். பொதுவாக, நாம் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் காட்டும் அக்கறையை, சாப்பிட்டு முடித்த அடுத்த சில நிமிடங்களில் காட்டுவதில்லை.
ஆனால், நாம் சாப்பிட்டு முடித்த முதல் 15 நிமிடங்கள் நமது உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்திற்கும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கும் மிக முக்கியமான நேரமாகும். இந்த குறுகிய கால இடைவெளியில் நாம் செய்யும் சில எளிய வாழ்வியல் மாற்றங்கள், சர்க்கரை நோய் மற்றும் இதயம் சார்ந்த பாதிப்புகள் வராமல் நம்மை பாதுகாக்கும். உணவுக்கு பிந்தைய இந்த 15 நிமிட பழக்கவழக்கங்கள் எவ்வாறு நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ரத்த சர்க்கரை அதிகரிப்பும் அதன் பாதிப்புகளும்
பலருக்கு காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்த பரிசோதனையில் சர்க்கரையின் அளவு சரியாக இருக்கலாம். ஆனால், சாப்பிட்ட பிறகு அவர்களின் சர்க்கரை அளவு மிக வேகமாக உயரக்கூடும். இவ்வாறு சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பது, நீண்ட கால அடிப்படையில் இதய நோய்கள் மற்றும் உடலின் முக்கிய உறுப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்த வழிவகுக்கும்.
உலகளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதில் பலருக்கு தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதோ அல்லது அதற்கு முந்தைய நிலையான 'ப்ரீடயாபடீஸ்' இருப்பதோ தெரிவதில்லை. எனவே, சாப்பிட்டவுடன் சர்க்கரை அளவு எகிறாமல் பார்த்து கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமன்றி, ஆரோக்கியமாக இருக்கும் அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும்.
சாப்பிட்ட பின் செய்ய வேண்டியவை (முதல் 15 நிமிடங்கள்)
சாப்பிட்டு முடித்தவுடன் நமது உடல் உணவை செரிமானம் செய்யும் பணிகளை தொடங்குகிறது. இந்த நேரத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிகள்:
10 முதல் 15 நிமிடங்கள் வரை மிதமான வேகத்தில் நடப்பது.
- சாப்பிட்ட உடனே படுக்கைக்கு செல்லாமல் நேராக நிமிர்ந்து அமர்ந்திருப்பது அல்லது நிற்பது.
- தாகத்திற்கு ஏற்ப தேவையான அளவு மட்டும் மிதமாகத் தண்ணீர் குடிப்பது.
- சாப்பிட்ட உடனேயே கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்ப்பது.
- மன அழுத்தத்தை தரும் வேலைகளில் இருந்து சில நிமிடங்கள் தள்ளி நின்று உடலையும் மனதையும் ஓய்வாக வைத்திருப்பது.
ஓடக் கூடாது, மெதுவாக நடக்க வேண்டும்
சாப்பிட்ட பிறகு நடப்பது என்பது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு எளிய வழியாகும். நாம் மெதுவாக நடக்கும்போது, நமது கால்களில் உள்ள தசைகள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை (சர்க்கரையை) ஆற்றலாக பயன்படுத்த தொடங்குகின்றன.
இதனால் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வது தடுக்கப்படுகிறது. இது சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் (Insulin Resistance) உள்ளவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.
ஆனால், இந்த நேரத்தில் ஓடுவதோ அல்லது கடுமையான பயிற்சிகள் செய்வதோ கூடாது. சாப்பிட்ட உடனே கடுமையான வேலைகளை செய்யும்போது, செரிமான மண்டலத்திற்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தசைகளை நோக்கி திருப்பப்படுகிறது. இதனால் வயிற்று வலி, பிடிப்பு அல்லது வாந்தி போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். எனவே, மெதுவான நடைப்பயிற்சியே சிறந்தது.
நிமிர்ந்த நிலை செரிமானத்திற்கு உதவும்
சாப்பிட்ட உடனேயே சோபாவிலோ அல்லது படுக்கையிலோ படுக்கும் வழக்கம் பலருக்கு உண்டு. இது முற்றிலும் தவறான ஒரு பழக்கமாகும். சாப்பிட்ட உடனே படுப்பதால், வயிற்றில் உள்ள அமிலம் மேல்நோக்கி வந்து நெஞ்செரிச்சல், அசிடிட்டி மற்றும் எதுக்களித்தல் (Acid Reflux) போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். சாப்பிட்ட பிறகு நேராக நிமிர்ந்து அமர்வது அல்லது நடப்பது, புவிஈர்ப்பு விசையின் காரணமாக உணவு எளிதாக செரிமான பாதைக்கு செல்ல வழிவகுக்கும்.
தண்ணீர், மன அழுத்தம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம்
சாப்பிடும்போது அல்லது சாப்பிட்ட உடனே அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். செரிமானத்திற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மிதமான அளவில் தண்ணீர் குடிப்பது நல்லது.
அதேபோல், சாப்பிட்டு முடித்த உடனே கடுமையான கணினி வேலைகளுக்கோ, மன அழுத்தம் நிறைந்த சூழலுக்கோ திரும்புவது உடலின் ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கும். மன அழுத்தம் ஏற்படும்போது சுரக்கும் ஹார்மோன்கள் ரத்த சர்க்கரை அளவை மறைமுகமாக உயர்த்தக்கூடும். எனவே, சாப்பிட்ட பிறகு சில நிமிடங்கள் மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியம்.
இந்த எளிய 15 நிமிட பழக்கவழக்கங்கள் டைப்-2 சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் பிசிஓடி பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாகும். முறையான தூக்கம், ஆரோக்கியமான உணவு மற்றும் வாராந்திர உடற்பயிற்சிகளோடு சேர்த்து, இந்த சிறிய நடைமுறையையும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றி கொண்டால், நீண்ட காலத்திற்கு சர்க்கரை நோய் மற்றும் இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

