உடலில் இந்த இடங்களில் திடீர் வலி ஏற்படுகிறதா? கொலஸ்ட்ரால் அளவை செக் பண்ணுங்க!
தண்டுவடத்திற்கு ரத்தம் வழங்கும் தமனிகளில் கொழுப்பு படிந்தால், அது கடுமையான முதுகுவலியை உண்டாக்குகிறது. இது நரம்பு பாதிப்பு மற்றும் உடல் இயக்க குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும்.

Published : January 6, 2026 at 1:13 PM IST
நமது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது, அது நேரடியாக அறிகுறிகளை வெளிப்படுத்தாது. ஆனால், ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து, ரத்த ஓட்டம் தடைபடும்போது உடல் சில வலி சமிக்ஞைகளை அனுப்பும். பல நேரங்களில் நாம் கால்களில் ஏற்படும் தசைப்பிடிப்பு அல்லது முதுகுவலியை சாதாரண உடல் சோர்வு என்று அலட்சியப்படுத்துகிறோம்.
ஆனால், இவை தமனிகள் தடிமனாவதன் (Atherosclerosis) வெளிப்பாடாக இருக்கலாம். "கெட்ட கொலஸ்ட்ரால்" (LDL) ரத்த நாளங்களை சுருக்கும்போது, இதயம், கால்கள் மற்றும் முதுகு தண்டுவடத்திற்கு செல்லும் ஆக்சிஜன் குறைகிறது. இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடே வலியை உண்டாக்குகிறது.
இந்த அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகளிலிருந்து காக்க உதவும். இந்நிலையில், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் தோன்றும் அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால் எப்படி வலியை உண்டாக்குகிறது? LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் ரத்த நாளங்களின் சுவர்களில் படிந்து ஒரு மெழுகு போன்ற அடுக்கை உருவாக்குகிறது. இதனால் ரத்த நாளங்கள் குறுகி, கடினமாகின்றன.
திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காதபோது 'இஸ்கீமியா' (Ischaemia) என்ற நிலை ஏற்பட்டு வலி தூண்டப்படுகிறது. மேலும், தமனிகளில் ஏற்படும் வீக்கம் நரம்பு முனைகளைத் தூண்டி, வலியின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் வலி ஏற்படும் முக்கிய இடங்கள்:
கால்கள் மற்றும் பாதங்கள்: கொலஸ்ட்ரால் பாதிப்பின் முதல் அறிகுறி பெரும்பாலும் கால்களில் தான் தெரியும். நடக்கும்போதோ அல்லது படிக்கட்டுகளில் ஏறும்போதோ கால்களில் தசைப்பிடிப்பு, வலி அல்லது ஒருவித அசௌகரியம் ஏற்படலாம்.
ரத்த ஓட்டம் குறைவதால் கால்களில் மரத்துப்போதல் (Numbness) அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். மேலும், ஒரு கால் மற்றொரு காலை விடக் குளிர்ச்சியாக இருப்பதும் ரத்த ஓட்டத் தடையின் அறிகுறியாகும்.
நெஞ்சுப் பகுதி (Angina): இதயத் தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும்போது நெஞ்சு வலி அல்லது ஒருவித அழுத்தம் ஏற்படும் என்கிறது மயோ கிளீனிக். இது 'ஆஞ்சினா' (Angina) என்று அழைக்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது மன அழுத்தத்தின் போதோ இந்த வலி அதிகரித்தால், அது உடனடியாக மருத்துவக் கவனிப்பு தேவைப்படும் ஒரு தீவிர அறிகுறியாகும்.
முதுகுப் பகுதி: தண்டுவடத்திற்கு ரத்தம் வழங்கும் தமனிகளில் கொழுப்பு படிந்தால், அது கடுமையான முதுகுவலியை உண்டாக்குகிறது. இது நரம்பு பாதிப்பு மற்றும் உடல் இயக்க குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும். முதுகுவலியை வெறும் எலும்பு பிரச்சனையாக மட்டும் பார்க்காமல், இதய ஆரோக்கியத்தோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியது அவசியம்.
வயிறு மற்றும் அக்குள் பகுதிகள்:
- வயிறு: உணவருந்திய பிறகு வயிற்றில் வலி ஏற்பட்டால், அது குடல் பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்துள்ளதை குறிக்கலாம்
- அக்குள்: அரிதாக, கைகளுக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது அக்குள் பகுதியில் வலி அல்லது அசௌகரியம் உண்டாகலாம்.
இதை தடுப்பது எப்படி?
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளவும். நிறைவுற்ற கொழுப்பு (Saturated fats) மற்றும் 'டிரான்ஸ் ஃபேட்' உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
குடும்பத்தில் இதய நோய் பின்னணி இருப்பவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது ரத்த பரிசோதனை செய்து கொலஸ்ட்ரால் அளவை கண்காணிப்பது அவசியம். வலி என்பது உடலில் ஏற்படும் அசெளகரியங்களின் சமிஞ்கையாகும். கால்களிலோ, நெஞ்சிலோ அல்லது முதுகிலோ விவரிக்க முடியாத வலிகள் ஏற்பட்டால், அதை சாதாரண வலி என நினைத்து நிராகரிக்க கூடாது.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்

