ETV Bharat / health

கீமோதெரபியால் குறையும் ரத்த தட்டணுக்கள்: பப்பாளி இலை சாறு உதவும் என டாடா மையம் ஆய்வு தகவல்!

பப்பாளி இலையில் உள்ள 'கார்பைன்' மற்றும் 'குவெர்சிடின்' போன்ற இயற்கை வேதிச்சேர்மங்கள் உடலில் ரத்த தட்டணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றன.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : July 5, 2026 at 11:00 AM IST

3 Min Read
Choose ETV Bharat

புற்றுநோய்க்கான சிகிச்சைகளில் முதன்மையானது கீமோதெரபி. ஆனால், இந்த சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு பக்கவிளைவாக ரத்த தட்டணுக்களின் (Platelets) எண்ணிக்கை வேகமாக குறைய தொடங்கும். மருத்துவ உலகில் இது 'த்ரோம்போசைட்டோபீனியா' என்று அழைக்கப்படுகிறது.

இதனால் உடலில் ரத்தக்கசிவு ஏற்படுதல், அடுத்த கட்ட கீமோதெரபி சிகிச்சையை தள்ளிப்போட வேண்டிய கட்டாயம் மற்றும் கூடுதல் மருத்துவ செலவுகள் என நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இந்நிலையில், இந்தியாவில் பரவலாக கிடைக்கும் பப்பாளி இலையின் சாறு, இந்த ரத்த தட்டணுக்கள் குறைபாட்டிற்கு மிக சிறந்த, மலிவான தீர்வாக அமையும் என்பதை மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மையத்தின் (TMC) ஆராய்ச்சியாளர்கள் தங்களது புதிய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

பாரம்பரியமாக டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த பப்பாளி இலை, இப்போது புற்றுநோய் மருத்துவத்திலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு

அமெரிக்க மருத்துவ சங்கத்தின் (ASCO) சர்வதேச இதழான 'ஜேசிஓ குளோபல் ஆன்காலஜி' (JCO Global Oncology) என்ற இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. புற்றுநோய் சிகிச்சையில் பப்பாளி இலை சாற்றின் (Carica Papaya Leaf Extract - CPLE) நன்மைகளை நிரூபிக்கும் உலகின் முதல் 'ஃபேஸ் 3 ரேண்டமைஸ்டு கிளினிக்கல் ட்ரையல்' ஆய்வு இதுவாகும்.

ஆய்வில் தெரியவந்தது என்ன?

டாடா மெமோரியல் மையத்தின் இரைப்பை குடல் மருத்துவப் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் 2020 மார்ச் முதல் 2024 அக்டோபர் வரை இந்த விரிவான ஆய்வை நடத்தினர். இதில் மொத்தம் 219 நோயாளிகள் பங்கேற்றனர். இவர்களில் 198 நோயாளிகளின் தரவுகள் முழுமையாக பகுப்பாய்வு செய்யப்பட்டன.

  • வேகமான குணமடைதல்: வழக்கமான சிகிச்சையுடன் பப்பாளி இலை சாற்றை எடுத்துக்கொண்ட நோயாளிகளில், கூடுதலாக 30 சதவீதத்தினர் வெறும் 4 நாட்களுக்குள் தங்களது ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை மீண்டும் பழைய நிலைக்கு பெற்றனர்.
  • சிகிச்சை தாமதமாவது தவிர்ப்பு: கீமோதெரபிக்கு பின் ரத்த தட்டணுக்கள் மிக கடுமையாக குறைந்த நோயாளிகளில் (Grade 2 CIT), பப்பாளி இலை சாற்றை உட்கொள்ளாதவர்களில் 43% பேருக்கு அடுத்தகட்ட சிகிச்சையை தள்ளிப்போடவோ அல்லது மருந்தின் அளவை குறைக்கவோ வேண்டியிருந்தது. ஆனால், பப்பாளி இலை சாற்றை சாப்பிட்டவர்களில் வெறும் 25% பேருக்கு மட்டுமே இந்த நிலை ஏற்பட்டது.
  • வயதானவர்களுக்கு அதிக பலன்: குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், நோய் தணிப்பு சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் இரண்டு முறைக்கும் மேலாக கீமோதெரபி எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கு இந்த சாறு மிகச் சிறந்த பலனைத் தந்துள்ளது.

ஏன் பப்பாளி இலை?

பப்பாளி இலையில் உள்ள 'கார்பைன்' மற்றும் 'குவெர்சிடின்' போன்ற இயற்கை வேதிச்சேர்மங்கள் உடலில் ரத்த தட்டணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. மேலும், அவை தட்டணுக்களின் சவ்வுகளை சேதமடையாமல் பாதுகாக்கின்றன. இதற்கு முன்பே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 228 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்விலும், பப்பாளி இலை சாறு ரத்த தட்டணுக்களை கணிசமாக உயர்த்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மிகக் குறைந்த செலவில் தீர்வு

புற்றுநோய் சிகிச்சையின் போது ரத்த தட்டணுக்களை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் மற்ற மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் மிகவும் செலவு குறைந்தவை அல்ல. ஆனால், இந்த ஆய்வின்படி பப்பாளி இலை சாற்றின் 10 நாட்களுக்கான சிகிச்சைச் செலவு வெறும் 10 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 955 ரூபாய்) மட்டுமே. இது வசதி வாய்ப்புகள் குறைவாக உள்ள ஏழை எளிய புற்றுநோய் நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

எதிர்காலத்தில் தான் பயன்படுமா?

இந்த ஆய்வு இந்தியாவில் உள்ள இரண்டு முக்கிய மருத்துவ மையங்களில் மட்டுமே நடத்தப்பட்டதால், இதன் முடிவுகள் அனைத்து வகையான சூழல்களுக்கும் பொருந்துமா என்பதை அறிய கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. பப்பாளி இலை சாற்றால் நோயாளிகளுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றாலும், இது புற்றுநோயாளிகளின் ஒட்டுமொத்த வாழ்நாளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிய இன்னும் நீண்ட கால கண்காணிப்பு அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், இந்தியாவில் பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஆயுர்வேத முறையான பப்பாளி இலை சாறுக்கு, இப்போது நவீன மருத்துவ உலகம் அறிவியல் பூர்வமான சான்றை வழங்கியிருப்பது புற்றுநோய் மருத்துவத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

ஆய்வு:

https://ascopubs.org/doi/10.1200/GO-25-00386

இதையும் படிங்க:

காரில் வைக்கும் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர்: ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் ஆபத்து!

பலாப்பழம் சாப்பிட்டா இவ்வளவு நன்மைகளா? பெண்களுக்கான ஸ்பெஷல் லிஸ்ட்!

உடல் பருமன் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு அபாயம் குறைகிறதா? தி லான்செட் ஆய்வு சொல்வது என்ன?