ETV Bharat / health

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 23,357 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு முழுவதும் ’தாய் கேர்’ என்ற பெயரில் கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் அமைப்பதற்காக 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பிரநிதித்துவ படம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பிரநிதித்துவ படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 5, 2026 at 4:58 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 23,357 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை குறித்து நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் குறித்து இந்த செய்தியில் காணலாம்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

  • தமிழ்நாட்டில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. இவற்றில் 53 சதவீதத்திற்கு மேற்பட்ட பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களில் எண்ணிக்கையை அதிகரித்து மருத்துவத் தேவைகளுக்காக மக்கள் சொந்தமாக செலவிடும் தொகையை குறைக்கும் நோக்கத்தில் ’தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1000 நடமாடும் ’முதியோர் சிகிச்சை மையம்’ தொடங்கப்படும். ஒவ்வொரு நடமாடும் சிகிச்சை மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், மற்றும் ஒரு இயன்முறை மருத்துவர் பணியில் இருப்பர். இந்த திட்டத்திற்காக 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
  • தமிழ்நாடு முழுவதும் ’தாய் கேர்’ என்ற பெயரில் கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்த திட்டத்திற்காக 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு சிறப்பு மருத்துவப் பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், அரசு ’மையம் - கிளை’ (Hub and Spoke) மருத்துவமனைகள் வகையிலான தொலை மருத்துவப் பராமரிப்பு அமைப்பு உருவாக்கப்படும். தொலை மருத்துவ வலையமைப்பை உருவாக்குவதற்கு திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 18.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனை, மாநில முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகவும், உயர் சிகிச்சை மருத்துவமனையாகவும் மாற்றப்படும். நோயாளிகளின் முதல் தொடர்பு மையமாக, ஐந்து மண்டல புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் நிறுவப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக, திருத்த வரவு, செலவு திட்ட மதிப்பீடுகளில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட்- எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

தொற்று அல்லாத நோய்கள் மற்றும் புற்றுநோயாளிகளின் தொடர் சிகிச்சைக்கு தடையற்ற மருந்து விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மருந்துகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு திருத்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 100 கோடி ரூபாய் உயர்த்துகிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 23,357 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.