புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தும் இதய நோய் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
சுமார் 3.8 லட்சம் நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களுக்கு இதயம் தொடர்பான மரணங்கள் ஏற்படும் வாய்ப்பு 2.46 மடங்கு அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

Published : January 6, 2026 at 10:40 AM IST
புற்றுநோய் பாதிப்பு என்பது இன்றைய காலத்தில் உடல் ரீதியான சவாலாக மட்டுமல்லாமல், உயிருக்கே ஆபத்தான ஒரு சூழலாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், அண்மைக்கால மருத்துவ ஆய்வுகள் புற்றுநோயை விட அதன் பின்னணியில் உருவாகும் 'இதய நோய்கள்' நோயாளிகளுக்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கூறுகின்றன.
மருத்துவம் புற்றுநோயை குணப்படுத்துவதில் பெரும் முன்னேற்றங்களை கண்டுள்ளது. இருப்பினும், புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் புற்றுநோயின் தீவிரத்தால் உடலின் இதயம் மற்றும் ரத்த நாளங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
சமீபத்திய 'அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்' (Journal of the American Heart Association) ஆய்வின்படி, புற்றுநோயாளிகள் புற்றுநோயை தாண்டி இதய நோயால் உயிரிழக்கும் அபாயம் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக இளம் வயதினர் மற்றும் ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியப்பட்டவர்கள் இந்த இதய நோய் அபாயத்திற்கு அதிகம் ஆளாகின்றனர்.
புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கான தொடர்புகள்: சுமார் 3.8 லட்சம் நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களுக்கு இதயம் தொடர்பான மரணங்கள் ஏற்படும் வாய்ப்பு 2.46 மடங்கு அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், புற்றுநோய் கண்டறியப்பட்ட முதல் 10 ஆண்டுகளில் இதயம் சார்ந்த பாதிப்புகள் பெரிய அளவில் தெரிவதில்லை. ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, புற்றுநோயால் பாதிக்கப்படாதவர்களுடன் ஒப்பிடும்போது, புற்றுநோயாளிகளின் இதய ஆரோக்கியம் மிக வேகமாக சரிந்து மரண விகிதம் அதிகரித்தது தெரியவந்துள்ளது.
காரணம் என்ன? புற்றுநோயாளிகளுக்கு ஏன் இதய நோய் வருகிறது என்பதற்கு பின்னால் சில உயிரியல் காரணங்கள் உள்ளன என்கிறது ஆய்வு.
- புரதங்களின் மாற்றம்: புற்றுநோய் பாதிப்பால் உடலில் வீக்கத்தை உண்டாக்கும் புரதங்கள் மற்றும் ரத்தம் உறைவதை கட்டுப்படுத்தும் புரதங்களின் செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
- சிகிச்சையின் பக்கவிளைவுகள்: புற்றுநோய்க்காக அளிக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவை புற்றுநோய் செல்களை அழிக்கும் அதே வேளையில் இதய தசைகளையும், ரத்த நாளங்களையும் பலவீனப்படுத்துகின்றன.
- பொதுவான காரணிகள்: புகைபிடித்தல், அதிக உடல் எடை (BMI), உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்றவை புற்றுநோய் மற்றும் இதய நோய் ஆகிய இரண்டுக்கும் பொதுவான ஆபத்து காரணிகளாக இருக்கின்றன.
யார் அதிக ஆபத்தில் உள்ளனர்? இளம் வயதினர்: வயது முதிர்ந்தவர்களை விட, இளம் வயதில் புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
குறிப்பிட்ட புற்றுநோய் வகைகள்: லிம்போமா (Lymphoma), மார்பக புற்றுநோய், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் உள்ளவர்களுக்கு இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பாதுகாப்பாக இருப்பது எப்படி? புற்றுநோய் நோயாளிகள் இதயம் சார்ந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகும் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக பரிசோதிக்க வேண்டும். சத்தான உணவு, உடற்பயிற்சி மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்ப்பது மூலம் இதய பாதிப்பை 90% குறைக்க முடியும்.
புற்றுநோய் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போதே, அவர்களின் சிறுநீரக செயல்பாடு மற்றும் ஹார்மோன் மாற்றங்களை கண்காணித்து இதய நோய் வராமல் தடுக்க மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

