பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 7ல் ஒருவர் 45 வயதுக்குட்பட்டவர் - இளம் வயதினரை எச்சரிக்கும் ICMR!
இந்தியாவில் 45 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே பக்கவாதம் ஏற்படும் விகிதம் 14% ஆக உயர்ந்துள்ளது.

Published : February 25, 2026 at 4:33 PM IST
இந்தியாவில் பக்கவாதம் என்பது வயதானவர்களுக்கு மட்டுமே வரும் பாதிப்பு என்ற பிம்பம் தற்போது உடைந்துவிட்டது என்றே சொல்லலாம். சமீபத்திய தேசிய பக்கவாத பதிவகத்தின் (National Stroke Registry) தரவுகள், இந்தியாவில் 45 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே பக்கவாதம் ஏற்படும் விகிதம் 14% ஆக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டுகின்றன.
அதாவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு ஏழு நோயாளிகளில் ஒருவர் 45 வயதுக்கும் குறைவான இளைஞராக இருக்கிறார். சுமார் 35,000 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சராசரி வயது 59 ஆக இருந்தாலும், முன்பை விட இப்போது இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இளைய தலைமுறை ஏன் பாதிக்கப்படுகிறது? இளைஞர்களிடையே பக்கவாதம் அதிகரிக்க மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுவது ரத்த அழுத்தம் (Hypertension) தான். ஆய்வில் பங்கேற்ற நோயாளிகளில் முக்கால்வாசி பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, சர்க்கரை நோய், புகைப்பிடித்தல், புகையிலை பயன்பாடு மற்றும் மதுப்பழக்கம் ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன என்கிறது NIH ஆய்வு.
இன்றைய காலகட்டத்தில் நகர்ப்புற வாழ்க்கை முறை, உடற்பயிற்சியற்ற சோம்பேறித்தனமான அன்றாட நடவடிக்கைகள், சத்து குறைவான ஜங்க் உணவுகள் மற்றும் அதீத மன அழுத்தம் ஆகியவை இளைஞர்களின் ரத்த நாளங்களை இளமையிலேயே வலுவிழக்கச் செய்கின்றன. வயதானவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோய்கள் இப்போது 30 மற்றும் 40 வயதிலேயே இளைஞர்களுக்கு வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
அறிகுறிகள்? அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் பணியிடத்தில் நிலவும் கடுமையான மன அழுத்தம் ஆகியவை பக்கவாதத்திற்கு வித்திடுகின்றன. போதிய தூக்கமின்மை, நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்வது மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளைப் பின்பற்றாதது ஆகியவை உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சிதைக்கின்றன.
இவை தவிர, தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் (Sleep Apnoea) மற்றும் உடல் பருமன் போன்ற புதிய காரணிகளும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. சிலருக்கு மரபணு ரீதியிலான ரத்த உறைதல் பிரச்சனைகளும், ரத்த நாளங்களில் ஏற்படும் அலர்ஜிகளும் பக்கவாதத்தை உண்டாக்குகின்றன. இது போன்ற நுணுக்கமான பிரச்சனைகள் ஒரு காலத்தில் அரிதாக இருந்தன, ஆனால் இப்போது பரவலாகக் காணப்படுகின்றன.
பக்கவாதத்தை கண்டறியும் 'FAST': பக்கவாதம் ஏற்பட்டால் முதல் 4.5 மணி நேரம் என்பது மிக முக்கியமானது. இதனை 'பொற்காலம்' (Golden Hour) என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் 20% நோயாளிகள் மட்டுமே இந்த நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்து சேருகிறார்கள். கிட்டத்தட்ட 40% மக்கள் அறிகுறிகள் தெரிந்த 24 மணி நேரத்திற்குப் பிறகுதான் சிகிச்சைக்கு வருகிறார்கள்.
இந்தத் தாமதம் மூளையில் சரிசெய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீர்செய்யும் சிகிச்சைகள் (Thrombolysis) சரியான நேரத்தில் கிடைத்தால் மட்டுமே ஒருவரை ஊனம் அல்லது உயிரிழப்பில் இருந்து காப்பாற்ற முடியும். ஆனால் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பலர் இது சாதாரண தலைவலி அல்லது மயக்கம் என்று நினைத்து நேரத்தைக் கடத்திவிடுகின்றனர்.
பக்கவாதத்தின் அறிகுறிகளை எளிதாகக் கண்டறிய 'FAST' என்ற முறையைப் பின்பற்றலாம். முகம் ஒருபுறமாக கோணலாக மாறுதல் (Face), கைகளைத் தூக்க முடியாமல் பலவீனம் அடைதல் (Arm), பேசுவதில் குழப்பம் அல்லது நாக்கு குழறுதல் (Speech) ஆகிய அறிகுறிகள் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் அவசர சிகிச்சை எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும் (Time).
ஒவ்வொரு நிமிடமும் மூளையில் லட்சக்கணக்கான செல்கள் இறக்கக்கூடும் என்பதால், வேகமான செயல்பாடு மட்டுமே ஒருவரைப் பழைய நிலைக்குக் கொண்டு வரும். சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்தால் மூன்றே மாதங்களில் பாதிப்புக்குள்ளானவர்கள் குணமடைய வாய்ப்புள்ளது, இல்லையெனில் வாழ்நாள் முழுவதுமான ஊனம் ஏற்படக்கூடும்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

