ETV Bharat / health

டைப் 2 சர்க்கரை நோய்க்கு தீர்வாகும் ஸ்டெம் செல் சிகிச்சை! புதிய ஆய்வு சொல்வது என்ன?

சர்க்கரை நோயை பொறுத்தவரை இதுவரை நாம் செய்து வந்தது வெறும் மேலாண்மை மட்டுமே. அதாவது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது தான் நம் வேலையாக இருந்தது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : February 24, 2026 at 12:43 PM IST

3 Min Read
Choose ETV Bharat

இன்று நம்மிடையே இருக்கும் மிகப் பெரிய கவலைகளில் ஒன்று நீரிழிவு நோய். ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே வந்த இந்த நோய், இன்று வயது வித்தியாசம் இன்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வாட்டி வதைக்கிறது.

காலையில் எழுந்தவுடன் மாத்திரை, சாப்பிடுவதற்கு முன்பு இன்சுலின் ஊசி எனப் பலரது வாழ்க்கை இந்த மருந்துகளையே சுற்றிச் சுழல்கிறது. "இனி வாழ்நாள் முழுவதும் இனிப்பை தொட முடியாது, தினமும் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்" என்ற எண்ணமே பலரை மனதளவில் சோகத்தில் ஆழ்த்தி விடும்.

இப்படிப் பலரது வாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ள சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வே இல்லையா? என்று ஏங்குபவர்களுக்கு, சீன ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு ஒரு மிகப் பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.

ஸ்டெம் செல் சிகிச்சை: நீரிழிவு நோயைப் பொறுத்தவரை இதுவரை நாம் செய்து வந்தது வெறும் மேலாண்மை (Management) மட்டுமே. அதாவது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது தான் நம் வேலையாக இருந்தது. ஆனால், சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக 'ஸ்டெம் செல்' (Stem Cell) சிகிச்சையைப் பயன்படுத்தி, டைப் 2 சர்க்கரை நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

ஸ்டெம் செல்கள் என்பது நம் உடலில் உள்ள ஒரு விந்தையான செல்கள். இவை உடலில் எந்த ஒரு செல்லாகவும் மாறும் தன்மை கொண்டவை. இந்த செல்களை ஆய்வகத்தில் வளர்த்து, இன்சுலினை சுரக்கும் கணையச் செல்களாக (Pancreatic Cells) மாற்றி, அவற்றை நோயாளியின் உடலில் செலுத்தி இந்த சாதனையை செய்துள்ளனர். இதன் மூலம் அந்த நோயாளிக்கு மீண்டும் இயற்கையாகவே இன்சுலின் சுரக்க ஆரம்பித்துள்ளது.

இன்சுலின் ஊசிக்கு விடை கொடுக்கும் காலம்: இந்தச் சிகிச்சையை பெற்றுக் கொண்ட நோயாளி, இப்போது இன்சுலின் ஊசி போடுவதையோ அல்லது சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் உட்கொள்வதையோ முற்றிலும் நிறுத்திவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வழக்கமாக நாம் எடுக்கும் சிகிச்சைகள், கணையம் சரியாக வேலை செய்யாத போது அதற்கு வெளியிலிருந்து இன்சுலினை வழங்குகின்றன. ஆனால், இந்த ஸ்டெம் செல் சிகிச்சை நேரடியாகப் பாதிக்கப்பட்ட கணையச் செல்களைப் புதுப்பிக்கிறது அல்லது மாற்றுகிறது.

இது ஒரு உடைந்த பொருளை ஒட்டுப் போட்டுப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, புதிய பாகத்தை மாற்றி அமைப்பது போன்றது. இதனால் அந்த நோயாளியின் உடல் தானாகவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறனை மீண்டும் பெற்றுள்ளது.

சாதாரண சிகிச்சைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? சாதாரண சிகிச்சையில் நாம் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் மூலம் சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க போராடுகிறோம். இது நோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்துமே தவிர, நோயின் மூல காரணத்தை (Root Cause) சரி செய்யாது.

ஆனால் ஸ்டெம் செல் சிகிச்சை என்பது வேரிலேயே மருந்து வைப்பது போன்றது. உடலில் இன்சுலின் சுரக்காததற்குக் காரணமான அந்தச் செல்களை மீண்டும் உருவாக்குவதே இதன் நோக்கம். மேலும் சர்க்கரை நோயால் ஏற்படும் சிறுநீரகக் கோளாறு, இதய நோய் மற்றும் நரம்புப் பாதிப்புகள் போன்ற பக்கவிளைவுகளையும் இது பெருமளவு குறைக்கும்.

டைப் 1 மற்றும் டைப் 2 இரண்டுக்கும் பொருந்துமா? சீனா இதற்கு முன்பே 'டைப் 1' சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணுக்கு இது போன்ற ஸ்டெம் செல் சிகிச்சையை வழங்கி வெற்றி கண்டிருந்தது. அந்தப் பெண்ணின் உடலில் இருந்தே கொழுப்பு செல்களை எடுத்து, அவற்றை இன்சுலின் சுரக்கும் செல்களாக மாற்றி மீண்டும் அவர் உடலில் செலுத்தினர். இப்போது டைப் 2 சர்க்கரை நோயிலும் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

டைப் 1 மற்றும் டைப் 2 ஆகிய இரண்டும் வெவ்வேறு பாதிப்புகள் என்றாலும், ஸ்டெம் செல் தொழில்நுட்பம் இரண்டையுமே குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பது மருத்துவ உலகத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், இது இன்னும் ஒரு சில நோயாளிக்கு மட்டுமே செய்து பார்க்கப்பட்ட ஆரம்பகட்ட வெற்றி தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எதிர்காலம் எப்படி இருக்கும்? இந்த ஒரு வெற்றி மட்டுமே ஒட்டுமொத்த சர்க்கரை நோய்க்கான நிரந்தரத் தீர்வு என்று இப்போதே கூறி விட முடியாது. இந்தச் சிகிச்சை முறை பாதுகாப்பானதா? நீண்ட காலத்திற்கு இது வேலை செய்யுமா? மற்ற எல்லா உடல்வாகு கொண்டவர்களுக்கும் இது பொருந்துமா? என்பதை அறிய இன்னும் பல பெரிய அளவிலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.