ETV Bharat / health

வெப்பநிலை உயர்வால் குறையும் ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் எதிர்கொள்ளும் அதிகப்படியான வெப்பம், பிறக்கப்போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை மறைமுகமாகத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : February 25, 2026 at 12:30 PM IST

3 Min Read
Choose ETV Bharat

உலகம் வெப்பமயமாகி வருவது என்பது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சனை மட்டுமல்ல, அது மனித இனத்தின் பிறப்பு விகிதத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது என்பதை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

பொதுவாக ஒரு சமூகத்தில் எத்தனை ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள் என்ற பாலின விகிதம், அந்த சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் சமநிலையைத் தீர்மானிக்கிறது. ஆனால், தற்போதைய ஆய்வின்படி, கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் எதிர்கொள்ளும் அதிகப்படியான வெப்பம், பிறக்கப்போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை மறைமுகமாகத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இந்தியாவை மையப்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மாறிவரும் காலநிலை மாற்றத்தால் மனித இனத்தின் எதிர்காலக் கட்டமைப்பு எப்படியெல்லாம் மாறக்கூடும் என்பதை எச்சரிக்கிறது.

வெப்பமும் ஆண் குழந்தைப் பிறப்பும்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை மற்றும் லீவர்ஹுல்ம் மக்கள் தொகை அறிவியல் மையம் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன. ஆப்பிரிக்காவின் 33 நாடுகள் மற்றும் இந்தியாவில் நிகழ்ந்த சுமார் 50 லட்சம் பிறப்புகளைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் கண்டறியப்பட்ட பொதுவான உண்மை என்னவென்றால், வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸைத் தாண்டும்போது, ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைகிறது. அதாவது, வெப்பம் அதிகரிக்கும்போது பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்கிறது அல்லது ஆண் கருவின் பிழைப்புத் திறன் குறைகிறது. இது ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா என இரு இடங்களிலும் நடந்தாலும், இதற்கான காரணங்கள் வெவ்வேறு விதமாக இருக்கின்றன.

ஆப்பிரிக்காவில் இயற்கை மாற்றங்கள்: ஆப்பிரிக்காவின் சப்-சஹாரா பகுதிகளில், ஒரு பெண் கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் (First Trimester) அதிக வெப்பநிலையை எதிர்கொண்டால், அவருக்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு குறைகிறது. இதற்கு முக்கியக் காரணம் 'கருப்பை வெப்ப அழுத்தம்' (Maternal Heat Stress) ஆகும்.

பொதுவாக பெண் கருவை விட ஆண் கருவானது வெப்பம் மற்றும் வெளிப்புற அழுத்தங்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது. கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் மற்றும் போதிய கல்வியறிவு இல்லாத தாய்மார்கள் மத்தியில் இந்த பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. வெப்பம் அதிகரிக்கும் போது, இயல்பாகவே ஆண் கருக்கள் சிதைந்து போவதால், அங்கு ஆண் குழந்தைகளின் பிறப்பு குறைகிறது என இந்த ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் மாறுபட்ட சூழல்: இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஆய்வு முடிவுகள் சற்றே மாறுபட்டு தகவல்களை அளிக்கின்றன. இந்தியாவில் பொதுவாக ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் (Son Preference) சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

இதன் காரணமாகச் சட்டவிரோதக் கருக்கலைப்புகள் சில இடங்களில் நடந்து வருகின்றன. ஆனால், ஆக்ஸ்போர்டு ஆய்வுப்படி, இந்தியாவில் இரண்டாவது மூன்று மாதக் காலத்தில் (Second Trimester) அதிக வெப்பம் நிலவும்போது, ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைகிறது. இது குறிப்பாக வட மாநிலங்களில், ஏற்கனவே குழந்தைகள் பெற்றுக்கொண்ட வயதான தாய்மார்கள் மற்றும் ஆண் குழந்தைகள் இல்லாத குடும்பங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

சமூகக் காரணிகளும் வெப்பமும்: இந்தியாவில் வெப்பம் அதிகரிக்கும்போது ஆண் குழந்தைகளின் பிறப்பு குறைவதற்கு ஒரு சுவாரஸ்யமான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கிறார்கள். கடுமையான வெயில் காலங்களில், மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதோ அல்லது ஸ்கேன் மற்றும் கருக்கலைப்பு போன்ற சேவைகளைப் பெறுவதோ தற்காலிகமாகக் குறைய வாய்ப்புள்ளது.

அதாவது, அதிக வெப்பம் நிலவும் காலங்களில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள், பாலினத் தேர்வை அடிப்படையாகக் கொண்ட கருக்கலைப்புகளைத் தற்காலிகமாகக் குறைக்கின்றன. இதன் விளைவாக, ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து, பாலின சமநிலை தற்காலிகமாக மேம்படுவது போல் ஒரு தோற்றம் உருவாகிறது. இது இயற்கையான உயிரியல் மாற்றம் என்பதை விட, சமூகக் காரணிகளால் ஏற்படும் மாற்றம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இயற்கைக்கும் மனித இனப்பெருக்கத்திற்கும் இடையிலான பிணைப்பு மிக நெருக்கமானது என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. "யார் பிறக்க வேண்டும், யார் பிறக்கக் கூடாது என்பதை வெப்பநிலை தீர்மானிக்கிறது" என்று ஆய்வாளர் டாக்டர் ஜாஸ்மின் அப்தெல் கானி கூறுவது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.