ETV Bharat / health

முருங்கை இலை பொடி: தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வயிற்று உப்பசம், கேஸ் போன்ற தொல்லைகள் இருப்பவர்கள் தொடர்ந்து முருங்கை இலை பொடி சாப்பிட்டு வரும்போது, வயிறு லேசான உணர்வையும், ஜீரண மண்டலம் நல்ல புத்துணர்ச்சியையும் பெறுவதை உணர முடியும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : May 7, 2026 at 12:56 PM IST

3 Min Read
Choose ETV Bharat

முன்னெல்லாம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முருங்கை மரம் இருக்கும். அம்மாக்களும் பாட்டிகளும் சமையலில் ஏதாவது ஒரு வகையில் முருங்கையைச் சேர்த்துவிடுவார்கள். ஆனால் இன்று அடுக்குமாடி குடியிருப்புகளிலும், நேரமில்லாத ஓட்டத்திலும் முருங்கை இலைகளை வாங்கி ஆய்ந்து சமைப்பது என்பது ஒரு பெரிய சவாலாகவே மாறிவிட்டது.

இந்த இடைவெளியை நிரப்ப வந்ததுதான் முருங்கை இலை பொடி. வெளிநாடுகளில் இதனை 'மொரிங்கா' என்று கொண்டாடுகிறார்கள். பலரும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரிலோ அல்லது இட்லி பொடிக்கு மாற்றாகவோ இதனை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இப்படி, முருங்கை இலையை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? பார்க்கலாம் வாங்க..

  • முருங்கை பொடியில் இல்லாத சத்துக்களே இல்லை என்று சொல்லலாம். நாம் அன்றாடம் ஓடி ஓடி வேலை செய்வதற்கு தேவையான வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பி சத்துக்கள் இதில் கொட்டி கிடக்கின்றன. இது தவிர எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் ரத்த சோகை வராமல் தடுக்கும் இரும்புச்சத்து இதில் அபரிமிதமாக உள்ளது. ஒரு ஸ்பூன் பொடியை உணவில் சேர்ப்பது என்பது ஒரு முழுமையான சத்து மாத்திரையை சாப்பிடுவதற்குச் சமம்.
  • காலையில் வேலைக்கு கிளம்பும் போதே பலருக்கும் ஒருவிதமான சோர்வு வந்துவிடுகிறது. முருங்கை பொடியில் உள்ள இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து இயற்கை முறையில் ஆற்றலை வழங்குகிறது. காபி, டீ குடித்தால் கிடைக்கும் தற்காலிக சுறுசுறுப்பை விட, இந்தப் பொடி நாள் முழுவதும் சோர்வின்றி செயல்பட வைக்கும் ஒரு எனர்ஜி பூஸ்டராக இருக்கும்.
  • சீதோஷ்ண நிலை மாறும் போதெல்லாம் நமக்குச் சளி அல்லது காய்ச்சல் வந்துவிடுகிறது. முருங்கையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்துகின்றன. அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் தங்கள் அன்றாட உணவில் முருங்கை பொடியைச் சேர்த்து வந்தால், உடல் உட்புறமாகவே ஒரு வலுவான பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கிக் கொள்ளும்.
  • இன்றைய உணவு கலாச்சாரத்தால் பலருக்கும் செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் பெரிய தலைவலியாக இருக்கிறது. முருங்கையில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து குடல் இயக்கத்தை மென்மையாக்குகிறது. வயிற்று உப்பசம், கேஸ் போன்ற தொல்லைகள் இருப்பவர்கள் தொடர்ந்து இதனைச் சாப்பிட்டு வரும்போது, வயிறு லேசான உணர்வையும், ஜீரண மண்டலம் நல்ல புத்துணர்ச்சியையும் பெறுவதை உணர முடியும்.
  • சர்க்கரை நோய் என்பது இப்போது பொதுவான ஒரு பிரச்சனையாகிவிட்டது. முருங்கை இலை பொடி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இன்சுலின் சுரப்பை இயற்கையாகவே தூண்டக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு என்பதால், சர்க்கரை நோயாளிகள் இதனை உணவில் ஒரு மருந்தாக இல்லாமல் உணவாகவே தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.
  • உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ரால் தான் இதய நோய்களுக்கு முக்கிய காரணம். முருங்கை பொடியை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க முடியும். இதய தமனிகளில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து, ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க இது உதவுகிறது. இளவயதிலேயே இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நினைப்பவர்களுக்கு முருங்கை ஒரு சிறந்த தேர்வாகும்.
  • விலை உயர்ந்த கிரீம்கள் கொடுக்காத பொலிவை முருங்கை பொடி கொடுக்கும். இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுத்து இளமையை தக்கவைக்கின்றன. ரத்தத்தை சுத்தப்படுத்துவதால் முகப்பருக்கள் மறைந்து, சருமம் உள்ளிருந்து ஜொலிக்க ஆரம்பிக்கும். தலைமுடி உதிர்வை தடுத்து அதன் வளர்ச்சியையும் இது தூண்டுகிறது.
  • நினைவாற்றல் குறைபாடு அல்லது வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு முருங்கை ஒரு நல்ல தீர்வாகும். மூளை செல்களின் சிதைவை தடுத்து, மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் பண்புகள் இதில் உள்ளன. இது மன அழுத்தத்தை குறைத்து மனதை ஒருநிலைப்படுத்த உதவுவதால், மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை உட்கொள்வது நல்லது.
  • தினமும் நாம் சுவாசிக்கும் காற்று மற்றும் உண்ணும் உணவின் வழியாகப் பல நச்சுக்கள் உடலுக்குள் செல்கின்றன. முருங்கையில் உள்ள குளோரோபில் ரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்துகிறது. கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதில் இதற்கு நிகர் எதுவுமில்லை. வாரம் ஒருமுறை உடலைச் சுத்தப்படுத்தும் டிடாக்ஸ் உணவாக இதைப் பயன்படுத்தலாம்.
  • பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் வரும் மனநிலை மாற்றங்கள், உடல் வலி போன்றவற்றை முருங்கை பொடி பெருமளவு குறைக்கிறது. குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்க இது உதவுகிறது. எலும்பு தேய்மானம் வராமல் தடுக்க தேவையான கால்சியத்தை இது வழங்குவதால், எல்லா வயது பெண்களுக்கும் இது ஒரு மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவாகும்.

முருங்கை பொடி செய்வது எப்படி?

முதலில் முருங்கை மரத்திலிருந்து சுத்தமான இலைகளைப் பறித்துக் கொள்ளவும். பிறகு இலைகளைப் பிரித்து எடுத்து, தண்ணீரில் அலசி நிழலிலேயே காய வைக்க வேண்டும். முக்கியமாக வெயிலில் வைக்கக் கூடாது, அப்படி வைத்தால் சத்துக்கள் போய்விடும்.

இலைகள் நன்றாகக் காய்ந்து, கையில் எடுத்து உடைத்தால் மொறுமொறுவென்று சத்தம் வர வேண்டும். இந்த நிலையில் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியைச் சலித்து ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தலாம். சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் பொடியும், கொஞ்சம் நெய்யும் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி தான்.

ஆய்வு:

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC10301989/

https://pubmed.ncbi.nlm.nih.gov/38055069/

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC10773919/

இதையும் படிங்க:

சாமந்திப்பூவில் புரதச்சத்து! புதிய ஆய்வு சொல்வது என்ன?

ஆஸ்துமாவுக்கு காரணமாகும் மன அழுத்தம்! உலக ஆஸ்துமா தினம் சொல்வது என்ன?

ஒரு வயதிற்கு முன்பே 'மொபைல்' பார்க்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு - எச்சரிக்கும் எய்ம்ஸ் ஆய்வு!