பிரபல நிறுவன சீரக தூளில் பூச்சிக்கொல்லி? உங்கள் வீட்டில் இந்த பாக்கெட் இருக்கானு செக் பண்ணுங்க!
குறிப்பிட்ட பேட்ச் (Batch No. E080668761) சீரகத்தூள் அனைத்தையும் சந்தையில் இருந்து உடனடியாக திரும்ப பெற எவரெஸ்ட் நிறுவனத்திற்கு FSSAI உத்தரவிட்டுள்ளது.

Published : October 5, 2026 at 12:43 PM IST
இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு செல்பவர்களுக்கும், நேரமின்மையால் தவிப்பவர்களுக்கும் கடைகளில் கிடைக்கும் மசாலாப் பொடிகள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே இருக்கின்றன. மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா என எல்லாமே சட்டென்று பாக்கெட்டுகளில் கிடைப்பதால் சமையலும் ஈசியாகிறது, உணவும் சுவையாக அமைகிறது.
ஆனால், நமது வேலையை சுலபமாக்கும் இந்த மசாலாப் பொடிகள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை என்பதை பற்றி யோசிக்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை. ஏற்கனவே பல மசாலாப் பொருட்களின் தரம் குறித்து கேள்விகள் எழுந்து வரும் நிலையில், "தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகத்தூள் மட்டும் அதற்கு என்ன விதிவிலக்கா?" என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
'எவரெஸ்ட்' நிறுவனத்தின் பாக்கெட் சீரகத்தூளில் உடலுக்கு ஆபத்தான பூச்சிக்கொல்லி மருந்து அதிகளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு உணவு பாதுகாப்புத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
FSSAI continues to enforce strict regulatory compliance to safeguard consumer health across the country: 1️⃣ Licence Suspended: FSSAI licence of M/s Creative Bakers and Confectioners Pvt. Ltd. has been suspended with immediate effect due to severe hygiene deficiencies. (1)2 https://t.co/i4yy2phThN
— FSSAI (@fssaiindia) October 4, 2026
எவரெஸ்ட் சீரகத்தூள் விற்பனைக்கு கட்டுபாடு ஏன் - என்ன நடந்தது?
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு வாரியம் (FSSAI) சந்தையில் இருக்கும் உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில், கோவாவில் உள்ள ஒரு விடுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட எவரெஸ்ட் நிறுவனத்தின் பாக்கெட் சீரகத்தூள் மாதிரி ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
அந்த பரிசோதனை அறிக்கையில், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்தின் மூலக் கூறுகளான 'அஸாக்சிஸ்ட்ரோபின்' (Azoxystrobin) மற்றும் 'தியாமெதோக்சாம்' (Thiamethoxam) ஆகியவை அளவுக்கு அதிகமாக கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, உணவு பாதுகாப்புச் சட்டம் 2006-ன் கீழ் இந்த சீரகத்தூள் "பாதுகாப்பற்றது" என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட பேட்ச் (Batch No. E080668761) சீரகத்தூள் அனைத்தையும் சந்தையில் இருந்து உடனடியாக திரும்ப பெற எவரெஸ்ட் நிறுவனத்திற்கு FSSAI உத்தரவிட்டுள்ளது.
பெருங்காயத்தூள் சர்ச்சை: தொடரும் மசாலாப் பொருட்களின் பயம்!
சீரகத்தூள் மட்டுமல்ல, சமீபத்தில் எவரெஸ்ட் மற்றும் எல்.ஜி (LG) ஆகிய பிரபல நிறுவனங்களின் பெருங்காயத்தூள் தயாரிப்புகளிலும் தரக்கட்டுப்பாட்டு பிரச்சனைகள் மற்றும் கலப்படங்கள் இருப்பது கண்டறியப்பட்டுத் தடைகளும் சர்ச்சைகளும் உருவானது நினைவிருக்கலாம்.
வேலைக்கு செல்லும் அவசரத்தில் நாம் நம்பி வாங்கும் பெருங்காயத்தூள் முதல் சீரகத்தூள் வரை அனைத்து மசாலாப் பொருட்களிலுமே இதுபோன்ற ரசாயன அபாயங்கள் தொடர்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிலேயே சீரகத்தூள் அரைப்பது எப்படி?
கடைகளில் வாங்கப்படும் மசாலா தூள்களில் ரசாயனங்களின் அபாயம் இருப்பதால், வார இறுதி நாட்களில் லேசாக நேரம் ஒதுக்கி வீட்டிலேயே சுத்தமான சீரகத்தூள் தயாரித்து வைப்பது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது.
தேவையான பொருட்கள்:
தரமான முழுச் சீரகம் - 250 கிராம்
செய்முறை:
கடையில் வாங்கி வந்த சீரகத்தில் இருக்கும் தூசி, கல் அல்லது சிறு குச்சிகளை முதலிலேயே சுத்தமாக நீக்கிவிட வேண்டும்.
- ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் சீரகத்தை சேர்க்க வேண்டும்.
- எண்ணெய் எதுவும் சேர்க்காமல், சீரகம் லேசாக சூடேறி நறுமணம் வரும் வரை 2 முதல் 3 நிமிடங்கள் வரை வறுக்க வேண்டும். (சீரகம் கருகிவிடக் கூடாது, லேசான சூடு ஏறினால் போதுமானது).
- வறுத்த சீரகத்தை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆறவிட வேண்டும்.
- நன்றாக ஆறின பிறகு, மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக்கொண்டால் சுத்தமான சீரகத்தூள் தயார்.
புதியதாகவும் மணமாகவும் இருக்க சில எளிய டிப்ஸ்:
- ஒரே அடியாக மாதக்கணக்கிற்கு அரைத்து வைப்பதை தவிர்த்து, 2 அல்லது 3 வாரங்களுக்கு தேவையான அளவை மட்டும் அவ்வப்போது அரைத்து பயன்படுத்துவது நல்லது.
- அரைத்த சீரகத்தூள் முற்றிலும் சூடு ஆறின பிறகே, சுத்தமான மற்றும் ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைக்க வேண்டும்.
- சமைக்கும்போது ஈரமான கரண்டிகளையோ அல்லது கைகளையோ பாட்டிலுக்குள் வைக்க கூடாது.
- சீரகத்தூள் பாட்டிலை நேரடி வெயில் படாத, சமையலறையின் குளிர்ந்த பகுதியில் வைப்பது அதன் சுவையையும் மணத்தையும் நீண்ட நாட்களுக்கு காக்கும்.
பாக்கெட் மசாலாக்கள் நமது நேர மிச்சத்திற்கு உதவினாலும், சாத்தியமான வரை வீட்டிலேயே அரைத்து பயன்படுத்துவதே நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாக்கும் சிறந்த வழி.

