இளைஞர்களின் சிந்தனை திறனை மந்தமாக்கும் 'பாக்கெட் உணவுகள்' - இந்தியாவில் நிலை என்ன?
18-34 வயதுடைய இந்திய இளைஞர்களில் 44 சதவீதம் பேர் தினமும் அல்லது வாரத்தின் பெரும்பாலான நாட்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்கின்றனர்.

Published : February 26, 2026 at 12:25 PM IST
காலையில் அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் ஒரு பிஸ்கட் பாக்கெட், மதிய உணவுக்குப் பிறகு ஒரு குளிர்பானம், மாலைப் பசியைத் தீர்க்க ஒரு நூடுல்ஸ் அல்லது சிப்ஸ் என இன்று நம் இளம் வயதினரின் அன்றாட உணவுப் பட்டியலில் இவை தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துவிட்டன.
'ருசியாக இருக்கிறது', 'வேலை மிச்சம்' என்று நாம் நினைக்கும் இந்த 'அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகள்' (Ultra-Processed Foods - UPF), வெறும் உடல் பருமனை மட்டும் தருவதில்லை, அது மெல்ல மெல்ல இளைஞர்களின் சிந்தனைத் திறனையும், மன உறுதியையும் சிதைத்து வருவதாக புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
வாஷிங்டனை சேர்ந்த 'சேப்பியன் லேப்ஸ்' (Sapien Labs) அமைப்பு, உலகளாவிய மனநலத் திட்டத்தின் கீழ் வெளியிட்ட 'குளோபல் மைண்ட் ஹெல்த் 2025' என்ற அறிக்கை, இந்திய இளைஞர்களின் எதிர்காலம் குறித்த அதிர்ச்சி தகவல்களை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
இந்த ஆய்வு 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள 85 நாடுகளில் நடத்தப்பட்டது. இதில் குறிப்பாக 18 முதல் 34 வயதுடைய இளைஞர்களிடம் ஒரு நாளைக்கு எத்தனை முறை பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்கிறார்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதன் முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளன. உலகளவில் இணையத்தை பயன்படுத்தும் 18-34 வயதுடைய இளைஞர்களில் 41 சதவீதம் பேர் கடுமையான மனநலச் சவால்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, 55 வயதிற்கு மேற்பட்டவர்களை விட, இளைஞர்கள் தங்கள் அன்றாட வேலைகளைத் திறம்படச் செய்ய முடியாமல் முடங்கிப்போகும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
இந்திய இளைஞர்களின் நிலை? இந்தியாவைப் பொறுத்தவரை, முதியவர்களை விட இளைஞர்கள் இந்தப் பழக்கத்திற்கு அதிக அடிமையாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது. 18-34 வயதுடைய இந்திய இளைஞர்களில் 44 சதவீதம் பேர் தினமும் அல்லது வாரத்தின் பெரும்பாலான நாட்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்கின்றனர்.
ஆனால், 55 வயதிற்கு மேற்பட்டவர்களில் வெறும் 11 சதவீதம் பேர் மட்டுமே இத்தகைய உணவுகளை உட்கொள்கிறார்கள். அதாவது, முதியவர்களை விட நான்கு மடங்கு அதிகமான இளைஞர்கள் பாக்கெட் உணவுகளை நாடுகிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில், உலகிலேயே அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான சந்தை வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியிருப்பதை 'லான்செட்' (The Lancet) இதழும் உறுதிப்படுத்தியுள்ளது.
உடல்நலத்தைத் தாண்டி மனநல பாதிப்பு: பொதுவாக சிப்ஸ், குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றால் சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் மட்டுமே வரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த உணவுகளில் சேர்க்கப்படும் சுவையூட்டிகள், நிறமூட்டிகள் மற்றும் ரசாயனங்கள் (Additives) மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கின்றன.
இந்த ஆய்வின்படி, அடிக்கடி இத்தகைய உணவுகளை உண்பவர்களுக்கு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போவது மற்றும் தேவையற்ற மனக்கவலை ஏற்படுவது, ஒரு வேலையில் கவனத்தைச் செலுத்த முடியாமல் போவது, சவால்களை எதிர்கொள்ளும் மன வலிமை குறைந்து போவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
இளைஞர்களின் மனநல பாதிப்பில் 15 முதல் 30 சதவீதம் வரை இந்தப் பதப்படுத்தப்பட்ட உணவுகளே காரணமாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இது எப்படி நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது? நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது இளைஞர்களின் உழைப்பையும், புத்திசாலித்தனத்தையும் நம்பியே இருக்கிறது. ஆனால், இளைஞர்களின் உணவுப் பழக்கம் அவர்களின் மனநலத்தைச் சிதைக்கும்போது, அது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனையும் பாதிக்கும்.
தீர்வு என்ன?
- எச்சரிக்கை லேபிள்கள்: பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளில் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகமாக இருப்பதை உணர்த்தும் தெளிவான எச்சரிக்கை குறியீடுகள் இருக்க வேண்டும்.
- விளம்பரக் கட்டுப்பாடு: குழந்தைகளையும் இளைஞர்களையும் கவரும் வகையில் இத்தகைய உணவுகளை விளம்பரப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- வரி விதிப்பு: ஆரோக்கியமற்ற உணவுகள் மீது கூடுதல் ஜிஎஸ்டி (GST) வரி விதிப்பதன் மூலம் அவற்றின் நுகர்வைக் குறைக்கலாம்.
- பள்ளிச் சூழல்: பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சத்தான உணவுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, நம் பாரம்பரியமான சத்தான உணவுகளுக்குத் திரும்புவதே, உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு ஒரே வழியாகும்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

