டைப் 2 நீரிழிவை கட்டுப்படுத்தும் Ozempic மருந்துகள் - ஒரு வாரத்திற்கான விலை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவிலும் டிசம்பர் 12ம் தேதி டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஓசெம்பிக் மருந்தை டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

Published : December 15, 2025 at 12:08 PM IST
சமீப காலமாக, சுகாதாரத் துறையில் ஒரு மருந்து பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதுதான், டைப் 2 சர்க்கரை நோய்க்கு (Type 2 Diabetes) சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் ஓசெம்பிக் (Ozempic). இது நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதுடன், எதிர்பாராத விதமாக எடை குறைப்புக்கும் உதவுவதால், சர்வதேச அளவில் அதிக கவனம் பெற்றது.
இப்போது, இந்தியாவிலும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த மருந்தை டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் (Novo Nordisk) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுகம், இந்தியாவில் நீரிழிவு மற்றும் உடல் பருமன் சிகிச்சையில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
ஓசெம்பிக் என்றால் என்ன? ஓசெம்பிக் என்பது செமாக்ளூடைடு (Semaglutide) என்ற வேதிப்பொருளைக் கொண்ட ஒரு ஊசி மருந்தாகும். இது GLP-1 ரிசெப்டர் அகோனிஸ்ட் (GLP-1 Receptor Agonist) எனப்படும் மருந்துகளின் வகையைச் சார்ந்தது. இந்தியாவில் இது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்து ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
எப்படி வேலை செய்கிறது?
- இது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது.
- இது செரிமான செயல்முறையை மெதுவாக்கி, சாப்பிட்ட பிறகு வயிறு நிரம்பிய உணர்வை அதிக நேரம் நீடிக்கச் செய்கிறது. இதனால், பசி குறைந்து, மக்கள் குறைவாகச் சாப்பிடுகிறார்கள், இது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
- இது இருதயம் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், இருதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்தியாவில் விலை மற்றும் டோஸேஜ் விவரங்கள்?
நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் ஓசெம்பிக் மருந்தை வாரத்திற்கு ஒருமுறை செலுத்திக்கொள்ளும் வகையில், பேனா போன்ற வடிவில் இந்த ஊசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
- 0.2 மி.கி டோஸ், மாதத்திற்கு ரூபாய், 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், வாரத்திற்கு 2 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 0.5 மி.கி. மாதத்திற்கு 10,170 ரூபாய்க்கும் வாரத்திற்கு 2,542 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 1 மி.கி. மாதத்திற்கு 11,175 ரூபாய்க்கும் வாரத்திற்கு 2,794 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு பேனா வடிவ மருந்திலும் நான்கு வாரங்களுக்கான டோஸ்கள் இருக்கும்.
எடை இழப்புக்கு தடை! உலகளவில், ஓசெம்பிக் பிரபலமடைந்ததற்கு முக்கியக் காரணம் அதன் எடை குறைப்பு பலன்கள்தான். ஆனால், இந்தியாவில் தற்போது இது நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை அளிக்க மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு எடை குறைப்பு என்பது ஒரு கூடுதல் நன்மையே . அமெரிக்காவில், இந்த மருந்தின் அதிக வீரியம் கொண்ட பதிப்பான வெகோவி (Wegovy) எடை குறைப்புக்காகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் ஓசெம்பிக்-கின் பயன்பாடு நீரிழிவு கட்டுப்பாட்டுக்கு மட்டுமே.
நீரிழிவு அல்லாத ஒருவர் உடல் எடையைக் குறைக்க இந்த ஊசியைப் பயன்படுத்த விரும்பினால், அது "ஆஃப்-லேபல்" (Off-Label Use) அதாவது, அரசு மற்றும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படவில்லை என்பதை குறிக்கிறது. எனவே, எந்தவொரு காரணத்திற்காகவும் இந்த ஊசியைப் பயன்படுத்துவதற்கு முன்பு கண்டிப்பாக ஒரு மருத்துவரை அணுகுவது அவசியம். சுயமாக மருந்து எடுத்துக்கொள்வது தீவிரமான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
மற்ற நாடுகளில் கடும் கட்டுப்பாடு? ஓசெம்பிக் மருந்து சில நாடுகளில் தடை செய்யப்படவில்லை, ஆனால் அதன் எடை இழப்பு பயன்பாட்டிற்கான பரிந்துரைகள் (Off-Label Use) கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன அல்லது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
தடைகளுக்கான முக்கியக் காரணம்:
ஓசெம்பிக் (நீரிழிவு மருந்து) எடை குறைப்புக்கு பிரபலமடைந்ததால், அதன் தேவை உலகளவில் அதிகரித்தது. இதனால், டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவையான மருந்து கிடைக்காத பற்றாக்குறை ஏற்பட்டது.
நீரிழிவு நோயாளிகளின் சிகிச்சையை உறுதி செய்வதற்காக, பெல்ஜியம் போன்ற சில நாடுகள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு, நீரிழிவு இல்லாதவர்களுக்கு எடை இழப்புக்காக ஓசெம்பிக்கை பரிந்துரைப்பதைத் தற்காலிகமாகத் தடை செய்துள்ளன.
பொதுவான பக்க விளைவுகள்: பெரும்பாலான பக்க விளைவுகள் செரிமானம் தொடர்பானவை:
- குமட்டல்
- வயிற்றுப்போக்கு
- வாந்தி
- வயிற்று வலி
- மலச்சிக்கல்
தீவிரமான பக்க விளைவுகள்:
- கணைய அழற்சி
- ரத்தச் சர்க்கரைக் குறைவு
- சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் நீரிழப்பு
- பித்தப்பை பிரச்சனைகள்
- கண் பார்வை மாற்றங்கள்
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்துவது இந்த அபாயங்களை அதிகரிக்கும்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

