ஆண்களை குறிவைக்கும் புற்றுநோய் - தாமதமாகும் கண்டறிதலால் அதிகரிக்கும் ஆபத்து!
உடம்பில் ஏதேனும் சிறு கட்டி அல்லது வலி தோன்றினாலும் வேலை பளு அல்லது பயம் காரணமாக ஆண்கள் உடனே மருத்துவரிடம் செல்வதில்லை.

Published : July 8, 2026 at 4:00 PM IST
உடல்நல குறைவு என்று வரும் போது "இதெல்லாம் சரியாயிடும்" என்று அலட்சியப்படுத்துவது நம்ம ஊர் ஆண்களிடம் இருக்கும் ஒரு பொதுவான குணம். இந்த சின்ன அலட்சியம், புற்றுநோய் போன்ற பெரிய பாதிப்புகள் உடலில் தீவிரமடையும் வரை வெளியே தெரியாமல் போக செய்துவிடுகிறது. பெண்கள் பொதுவாக தங்களின் உடல் மாற்றங்களை கவனித்து உடனடியாக மருத்துவரை அணுகும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.
ஆனால், ஆண்கள் பெரும்பாலான நேரங்களில் தீவிரமான அறிகுறிகள் தோன்றும் வரை மருத்துவமனைக்கு செல்வதை தள்ளி போடுகிறார்கள். இதனால், ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தக்கூடிய நோய்கள் கூட, முற்றிய நிலைக்கு சென்ற பின்பே தெரிய வருகின்றன. இதை நாம் சாதரணமாக கடந்து செல்லக்கூடியதாக இல்லை, சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று இதை தரவுகளுடன் நிரூபித்துள்ளது.
தாமதமாகும் பரிசோதனையும் அதன் ஆபத்துகளும்
புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, அது உடலின் மற்ற இடங்களுக்கு பரவுவதற்கு முன்பே கண்டறிவது தான் சிகிச்சை முறைகளை எளிதாக்கும். ஆனால், பெண்களை விட ஆண்களுக்கு புற்றுநோய் அதன் தீவிர கட்டத்தை எட்டிய பிறகே கண்டறியப்படுவதாக அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி சங்கத்தின் இதழான 'கேன்சர் எபிடெமியாலஜி, பயோமார்க்கர்ஸ் & ப்ரிவென்ஷன்' (Cancer Epidemiology, Biomarkers & Prevention) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் 2015 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில், இனப்பெருக்க உறுப்புகள் சாராத 20 வகையான புற்றுநோய் பாதிப்புகளை ஆராய்ந்ததில் இந்த அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது. இதில் 16 வகையான புற்றுநோய்கள் ஆண்களுக்கு அது பக்கத்தில் இருக்கும் திசுக்கள் அல்லது நிணநீர் முனைகளுக்கு பரவிய பிறகே கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், 17 வகையான புற்றுநோய்கள் உடலின் மற்ற உறுப்புகளுக்கு தீவிரமாக பரவிய பிறகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆண்களை அதிகம் பாதிக்கும் குறிப்பிட்ட புற்றுநோய்கள்
ஆய்வின்படி, சில குறிப்பிட்ட புற்றுநோய்கள் ஆண்களுக்கு மிக மோசமான முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகின்றன.
- வாய் புற்றுநோய்: ஆரம்ப கட்டத்தை தாண்டி பக்கத்து திசுக்களுக்கு பரவிய நிலையில் கண்டறியப்பட ஆண்களுக்கு 151% கூடுதல் வாய்ப்பு உள்ளது. உடலின் மற்ற பாகங்களுக்கு பரவிய நிலையில் கண்டறியப்பட 134% கூடுதல் வாய்ப்பு உள்ளது.
- உமிழ்நீர் சுரப்பி புற்றுநோய்: இது தீவிரமடைந்த நிலையில் கண்டறியப்பட ஆண்களுக்கு 93% கூடுதல் வாய்ப்பு உள்ளது.
- பிற புற்றுநோய்கள்: தொண்டை, தைராய்டு, வயிறு மற்றும் தோல் புற்றுநோய் போன்றவையும் ஆண்களுக்கு மிகவும் தாமதமாகவே கண்டறியப்படுகின்றன. தைராய்டு புற்றுநோய் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவிய நிலையில் கண்டறியப்பட ஆண்களுக்கு 128% கூடுதல் வாய்ப்பு உள்ளது.
இருப்பினும், இதற்கு விதிவிலக்காக சிறுநீர்ப்பை மற்றும் குரல்வளை புற்றுநோய்கள் மட்டும் ஆண்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்படுவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
காரணம் என்ன?
இந்த தாமதத்திற்கு பின்னால் எந்தவொரு உயிரியல் காரணமும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். மாறாக, ஆண்களின் அன்றாட பழக்கவழக்கங்களும் சமூக சூழலுமே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
- மருத்துவமனைக்கு செல்வதை தள்ளிப்போடுதல்: உடம்பில் ஏதேனும் சிறு கட்டி அல்லது வலி தோன்றினாலும் வேலைப் பளு அல்லது பயம் காரணமாக ஆண்கள் உடனே மருத்துவரிடம் செல்வதில்லை.
- தவறான புரிதல்: புற்றுநோயின் ஆரம்பக்கட்ட எச்சரிக்கை அறிகுறிகளை சாதாரண உடல்நல குறைவு என்று நினைத்து ஆண்கள் அலட்சியப்படுத்துகிறார்கள்.
- வழக்கமான பரிசோதனைகள் இல்லாமை: பெண்கள் மகப்பேறு சார்ந்த தேவைகள் அல்லது தடுப்பு பராமரிப்பு சேவைகளுக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வதால், அவர்களுக்கு சிறு மாற்றங்கள் இருந்தாலும் மருத்துவர்களால் எளிதில் கண்டறிய முடிகிறது. ஆனால் ஆண்களுக்கு அத்தகைய வாய்ப்புகள் குறைவு.
- மருத்துவர்களின் பார்வை: சில நேரங்களில், ஆண்கள் தங்களின் அறிகுறிகளை விவரிக்கும் முறையும், அதை மருத்துவர்கள் புரிந்துகொண்டு பரிசோதிக்கும் விதமும் கூட நோய் கண்டறிதலை தாமதப்படுத்தலாம்.
நாம் செய்ய வேண்டியது என்ன?
புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்துவதற்கும், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஆண்கள் தங்களின் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
- உடலில் தோன்றும் விவரிக்க முடியாத கட்டிகள், ஆறாத புண்கள் அல்லது தொடர் எடை குறைவு போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்த கூடாது.
- குறிப்பிட்ட வயதுக்கு மேல், வருடத்திற்கு ஒருமுறை வழக்கமான முழு உடல் பரிசோதனை செய்வதை கடமையாக கொள்ள வேண்டும்.
- வேலை மற்றும் குடும்ப பொறுப்புகளை தாண்டி, உடல் ஆரோக்கியமே முதன்மையானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆய்வு:

