அச்சத்தை ஏற்படுத்தும் நெஞ்சு வலி: உண்மையான காரணம் இதுவாக கூட இருக்கலாம்!
நுரையீரலை சுற்றியுள்ள உறையில் வீக்கம் ஏற்பட்டாலோ அல்லது நிமோனியா போன்ற தொற்று ஏற்பட்டாலோ நெஞ்சு வலி வரும்.

Published : February 25, 2026 at 2:42 PM IST
இன்றைய உலகில், உடல்நலம் குறித்த அச்சம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக, "நெஞ்சு வலி" என்று ஒருவருக்கு தோன்றினால், அடுத்த நொடியே அது மாரடைப்பாக இருக்குமோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்கிறது. இணையத்தில் தேடினால், சிறிய அறிகுறியை கூட பெரிய ஆபத்தாக காட்டி நம்மை பயமுறுத்திவிடும். ஆனால், எதார்த்தத்தில் நெஞ்சு வலி ஏற்படுவதற்கு இதயத்தைத் தாண்டி ஏராளமான காரணங்கள் நம் அன்றாட வாழ்க்கை முறையிலேயே ஒளிந்துள்ளன.
நாம் உண்ணும் உணவு முறை, அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும் விதம், உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தம் என ஒவ்வொன்றும் ஒருவித நெஞ்சு வலியை உண்டாக்கலாம். மாரடைப்பு என்பது உயிருக்கு ஆபத்தானது என்றாலும், மற்ற காரணங்களால் ஏற்படும் நெஞ்சு வலிகள் முறையான புரிதல் மற்றும் எளிய சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடியவை.
எப்போது பயப்பட வேண்டும், எப்போது நிதானமாகச் செயல்பட வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்க உதவும். அந்த வகையில் மாரடைப்பைத் தவிர்த்து நெஞ்சு வலி உண்டாக வேறு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன என்பதை தெளிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் (GERD): இரைப்பையில் உள்ள அமிலம் மீண்டும் உணவுக்குழாய்க்குள் ஏறுவதால் (GERD) நெஞ்சு வலி ஏற்படுகிறது. காரமான உணவுகள், முறையற்ற நேரங்களில் சாப்பிடுவது மற்றும் சாப்பிட்ட உடனே படுப்பது போன்ற பழக்கங்களால் இது உண்டாகிறது என்கிறது clevelandclinic.org ஆய்வுத்தளம்.
இது பெரும்பாலும் நெஞ்சின் நடுப்பகுதியில் எரிச்சல் போன்ற உணர்வை தரும். மாரடைப்பு வலியை போலன்றி, இது சாப்பிட்ட பிறகு அல்லது குனியும் போது அதிகமாகும். வாயில் புளிப்புச் சுவை, வயிறு உப்புசம் போன்றவை இதன் கூடுதல் அறிகுறிகள். முறையான உணவுப் பழக்கம் மற்றும் அமில எதிர்ப்பு மருந்துகள் (Antacids) மூலம் இதை குணப்படுத்தலாம்.
தசைப்பிடிப்பு: தவறான நிலையில் தூங்குவது, திடீரென திரும்புவது அல்லது அதிக எடையை தூக்குவது போன்ற காரணங்களால் நெஞ்சுப் பகுதியில் உள்ள தசைகள் அல்லது விலா எலும்புகளுக்கு இடையே உள்ள தசைகள் சுலபமாகப் பிடித்துக்கொள்ளும். கைகளை அசைக்கும் போதோ அல்லது ஆழமாக மூச்சை இழுத்துவிடும் போதோ இந்த வலி கூர்மையாகத் தெரியும். இது தசை சார்ந்த பிரச்சனை என்பதால் ஓய்வு மற்றும் எளிய மருந்துகள் மூலமே சரியாகிவிடும்.
விலா எலும்பு வீக்கம்: விலா எலும்புகளை மார்பெலும்புடன் இணைக்கும் குருத்தெலும்புகளில் ஏற்படும் வீக்கமே இதற்கு காரணம். அதிகப்படியான உடற்பயிற்சி அல்லது யோகா செய்பவர்களுக்கு இது ஏற்பட வாய்ப்புண்டு. அந்த இடத்தில் கை வைத்து அழுத்தினால் வலி அதிகமாகத் தெரிந்தால், அது பெரும்பாலும் இதயப் பிரச்சனை அல்ல, இந்த வீக்கமே ஆகும். இதற்கு ஒத்தடம் கொடுப்பது மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணிகள் நல்ல பலன் தரும்.
மன அழுத்தம் மற்றும் பதட்டம்: இன்றைய பணிச் சூழலில் மன அழுத்தம் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. அளவுக்கு அதிகமான பயம் அல்லது கவலை ஏற்படும்போது, மூச்சுத் திணறலுடன் கூடிய நெஞ்சு வலி ஏற்படலாம் என Chest pain: A heart attack or something else? என்ற தலைப்பில் வெளியான ஹார்வர்டு ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.
இதயம் படபடவென்று துடிப்பது, வியர்ப்பது போன்ற அறிகுறிகள் மாரடைப்பை ஒத்திருந்தாலும், இது 10 முதல் 20 நிமிடங்களில் சரியாகிவிடும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி (4-7-8 முறை) மற்றும் மனதை அமைதிப்படுத்துவதன் மூலம் இதிலிருந்து மீளலாம்.
நுரையீரல் உறையில் பாதிப்பு: நுரையீரலைச் சுற்றியுள்ள உறையில் வீக்கம் ஏற்பட்டாலோ அல்லது நிமோனியா போன்ற தொற்று ஏற்பட்டாலோ நெஞ்சு வலி வரும். இது பெரும்பாலும் ஒரு பக்கமாக தெரியும். இருமும் போதோ அல்லது தும்மும் போதோ வலி அதிகரிக்கும். இதனுடன் காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளும் இருக்கும். இதற்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும்.
பித்தப்பை கற்கள்: பித்தப்பையில் கற்கள் இருந்தால், அது செரிமான பாதையை தடுக்கும்போது கடுமையான வலியை உண்டாக்கும். இந்த வலி வயிற்றின் மேல் பகுதியில் தொடங்கி நெஞ்சுப் பகுதிக்கும், முதுகுப் பகுதிக்கும் பரவும். கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட்ட பிறகு இந்த வலி தீவிரமாகும். இது இதய வலியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஸ்கேன் பரிசோதனை மூலம் இதைக் கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.
வயிற்றுப் புண்: வயிற்றில் அல்லது குடலின் ஆரம்பப் பகுதியில் ஏற்படும் புண்கள் நெஞ்சுப் பகுதியில் எரிச்சலையும் வலியையும் உண்டாக்கும். வெறும் வயிற்றில் இருக்கும்போது அல்லது காரமான உணவுகளை உட்கொள்ளும்போது இந்த வலி அதிகமாகும். சரியான நேரத்தில் உணவு உண்பது மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மூலம் இந்த புண்களை குணப்படுத்த முடியும்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

