ETV Bharat / health

உலக டீன் ஏஜ் மனநல தினம்: AI மற்றும் சமூக ஊடகங்கள் டீன் ஏஜ்களின் மனநலனை எவ்வாறு பாதிக்கின்றன?

சமூக ஊடகங்களில் பகிரப்படும் 'பெர்பெக்ட்' புகைப்படங்களைப் பார்க்கும் டீன் ஏஜ்கள், தங்களையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty images)
author img

By ETV Bharat Health Team

Published : March 2, 2026 at 11:00 AM IST

3 Min Read
Choose ETV Bharat

காலையில் அலாரம் அடிப்பதற்கு முன்பே, நம் கை தானாக அலைபேசியை தேடுகிறது. ஒரு 'நோட்டிபிகேஷன்' கூட வராமல் போனாலும், ஏதோ ஒன்றை இழந்த உணர்வு நமக்கே ஏற்படுகிறது என்றால், இந்த டிஜிட்டல் உலகிலேயே பிறந்து வளரும் டீன் ஏஜ் பிள்ளைகளின் நிலையை சற்று யோசித்து பாருங்கள்.

அவர்களுக்கு பக்கத்தில் இருக்கும் மனிதர்களை விட, திரைக்குப் பின்னால் இருக்கும் முகம் தெரியாத நபர்களும், செயற்கை நுண்ணறிவும் (AI) தான் நெருக்கமான நண்பர்களாகிவிட்டனர். வீட்டில் அமர்ந்திருந்தாலும், அவர்களின் மனம் ஏதோ ஒரு சமூக ஊடகச் சுழலில் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.

அங்கு அவர்களுக்கு கிடைக்கும் ஒரு 'லைக்' அந்த நாளை உற்சாகமாக்குகிறது. ஒரு சின்னப் புறக்கணிப்பு அவர்களைப் பெருத்த மனச்சோர்வில் தள்ளுகிறது. வெறும் தகவல் பரிமாற்ற கருவியாக தொடங்கிய இணையம், இன்று அவர்களின் உணர்ச்சிகளைத் தீர்மானிக்கும் எஜமானனாக மாறிவிட்டது என பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

உலக டீன் ஏஜ் மனநல தினம்: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2-ம் தேதி உலக டீன் ஏஜ் மனநல தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. டீன் ஏஜ் பருவத்தினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள் மற்றும் அவர்களது மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம்.

இந்த ஆண்டு, குறிப்பாக 'செயற்கை நுண்ணறிவு (AI)' மற்றும் 'தீவிரமான சமூக ஊடக உள்ளடக்கம் (Extreme Media Content)' ஆகியவை இளைஞர்களின் மனநலனில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து முக்கியமாகப் பேசப்படுகிறது.

அதிகாரியாகும் AI: இன்றைய டீன் ஏஜ்களில் சுமார் 64% பேர் ஏஐ கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். வீட்டு பாடங்களை செய்யவும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் இது அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது. பல நேரங்களில், யாரிடமும் சொல்ல முடியாத மனக்குறைகளைக்கூட ஏஐ சாட்பாட்களிடம் அவர்கள் பகிர்கிறார்கள். ஏனெனில், ஏஐ தங்களை எடை போடாது (Judgment-free) என்றும், உடனடியாகப் பதில் அளிக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால், இதில் உள்ள ஆபத்து என்னவென்றால், ஒரு மென்பொருள் கொடுக்கும் பதிலை டீன் ஏஜ்கள் தங்களின் வாழ்க்கை தீர்மானமாக அல்லது 'உண்மை'யாக எடுத்துக்கொள்ளத் தொடங்குவதுதான். உணர்வுகளற்ற ஒரு கணினி நிரலை தங்களின் மனரீதியான ஆதரவுக்கான முதன்மை ஆதாரமாக மாற்றிக்கொள்ளும்போது, அவர்கள் நிஜ உலக மனித உறவுகளிலிருந்து அந்நியப்படுகிறார்கள். இது அவர்களது சுயசிந்தனையையும், உணர்ச்சிகளைக் கையாளும் திறனையும் மழுங்கடிக்கச் செய்யலாம்.

சமூக ஊடகங்களும் ஒப்பீட்டு மனப்பான்மையும்: சமூக ஊடகங்கள் இன்று வெறும் பொழுதுபோக்கு தளங்கள் மட்டுமல்ல, அவை இளைஞர்களின் அடையாளத்தை தீர்மானிக்கும் இடங்களாக மாறிவிட்டன. சமூக ஊடகங்களில் பகிரப்படும் 'பெர்பெக்ட்' புகைப்படங்களைப் பார்க்கும் டீன் ஏஜ்கள், தங்களையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.

குறிப்பாக, புதுசு புதுசாக வரும் டிரெண்டுகள் மூலம் தங்களின் முகம் மற்றும் உடல் அமைப்பு குறித்த தேவையற்ற கவலைகளை வளர்த்துக்கொள்கிறார்கள். சுமார் 27% இளைஞர்கள் இதுபோன்ற உள்ளடக்கங்கள் தங்களின் தன்னம்பிக்கையைக் குறைப்பதாக The Impact of Social Media on the Mental Health of Adolescents and Young Adults என்ற தலைப்பில் வெளியான ஆய்வுக்கட்டுரையில் தெரியவந்துள்ளது.

முகப்பொலிவுக்காக சிறு வயதிலேயே தேவையற்ற ரசாயனங்கள் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதும், அதன் மூலம் ஏற்படும் மன உளைச்சலும் அதிகரித்து வருகின்றன.

தகவல் பகிர்வும் பாதுகாப்பு அச்சுறுத்தலும்: தங்களின் ஒவ்வொரு செயலையும் இணையத்தில் பகிர வேண்டும் என்ற உந்துதல் (Oversharing) டீன் ஏஜ்களிடம் அதிகம் உள்ளது. தாங்கள் எங்கே இருக்கிறோம், என்ன செய்கிறோம் என அனைத்தையும் பகிரும்போது, அவர்கள் இணைய மோசடிகளுக்கு (Scams) எளிதில் ஆளாகின்றனர்.

குறிப்பாக, அதிக நேரம் இணையத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை விட இருமடங்கு அதிகமாகப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சந்திக்கின்றனர் என்கிறது Harvard ஆய்வுதளத்தில் வெளியான ஆய்வு. இது வெறும் சைபர் கிரைம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, ஒரு மோசடி நடக்கும்போது அந்தப் பிள்ளைகள் அடையும் மனவேதனையும், பயமும் அவர்களின் மனநலனை வெகுவாகப் பாதிக்கிறது.

பெற்றோர் மற்றும் பெரியவர்களின் பங்கு: தொழில்நுட்பத்தை டீன் ஏஜ்களின் வாழ்விலிருந்து முற்றிலுமாகப் பிரிப்பது சாத்தியமற்றது. ஆனால், அதை அவர்கள் ஆரோக்கியமாக பயன்படுத்த வழிவகுக்கலாம் என்கிறது WHO.

  • "எவ்வளவு நேரம் மொபைல் பாக்குற?" என்பதற்கு பதில், "இன்று இணையத்தில் நீ பார்த்த சுவாரஸ்யமான அல்லது உன்னை வருத்தப்பட வைத்த விஷயம் என்ன?" என்று சகஜமாக பேசுங்கள்.
  • ஏஐ என்பது ஒரு தகவல் கருவி மட்டுமே, அது ஒருபோதும் மனித உணர்வுகளுக்கு மாற்றாகாது என்பதைப் புரியவைக்க வேண்டும்.
  • இரவு நேரங்களில் அலைபேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
  • சமூக ஊடகங்களில் காட்டப்படும் வாழ்க்கை முறைகள் பெரும்பாலும் மெருகூட்டப்பட்டவை என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

இதையும் படிங்க:

இளைஞர்களின் சிந்தனை திறனை மந்தமாக்கும் 'பாக்கெட் உணவுகள்' - இந்தியாவில் நிலை என்ன?

டீன்-ஏஜ் பிள்ளைகளிடையே பதற்றத்தை அதிகரிக்கும் சர்க்கரை உட்கொள்ளல்! இரண்டுக்கும் என்ன தொடர்பு?

மாதவிடாய்: முதல் நாளில் வலி அதிகமாக இருப்பது ஏன்? சமாளிக்க என்ன செய்வது?

பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.