கழுத்தில் கருமை ஏற்படுகிறதா? டைப் 2 சர்க்கரை நோயாக கூட இருக்கலாம்!
செல்கள் சர்க்கரையை ஆற்றலாக மாற்ற முடியாத போது, உடல் தனது கொழுப்பையும் தசையையும் எரிக்க தொடங்குகிறது. இதனால் எவ்வித உடற்பயிற்சியோ அல்லது உணவுக்கட்டுப்பாடோ இல்லாமலேயே உடல் எடை திடீரெனக் குறையும்.

Published : October 9, 2026 at 12:33 PM IST
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் சுமார் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, மேலும் 13 கோடிக்கும் அதிகமானோர் "ப்ரீ-டயபட்டிஸ்" (Prediabetes) எனப்படும் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர்.
இன்றைக்கு நமது சமூகத்தில் பெரும்பாலான குடும்பங்களில் யாராவது ஒருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை எளிதாக காண முடிகிறது. இருப்பினும், உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது வெளிப்படும் ஆரம்பக்கட்ட அறிகுறிகளை பலர் கவனிப்பதில்லை.
அலட்சியமாக இருந்துவிடாமல், உடல் வெளிப்படுத்தும் சிறு அடையாளங்களை சரியாக புரிந்துகொண்டாலே போதுமானது. சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மிக எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
டைப் 2 சர்க்கரை நோய் என்றால் என்ன?
நாம் உண்ணும் உணவு செரிமானமாகி உடலுக்கு தேவையான குளுக்கோஸாக (சர்க்கரையாக) மாறுகிறது. இந்த சர்க்கரையை ரத்தத்தில் இருந்து உடலின் செல்களுக்குள் கொண்டு செல்ல கணையம் சுரக்கும் 'இன்சுலின்' எனும் ஹார்மோன் மிகவும் அவசியமாகும்.
டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படும் போது, உடலால் இந்த இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு படிப்படியாக அதிகரிக்க தொடங்குகிறது. வழக்கமாக 8 மணி நேரம் உணவு அருந்தாமல் ரத்தப் பரிசோதனை செய்யும் போது, சர்க்கரையின் அளவு 126 mg/dl அல்லது அதற்கு மேல் இருந்தால் அது நீரிழிவு நோயாக கருதப்படுகிறது.
அறிகுறிகள் என்னென்ன?
டைப் 2 சர்க்கரை நோயின் அறிகுறிகள் ஒரே நாளில் திடீரென்று வெளிப்படுவதில்லை. மிகவும் மெதுவாகவே ஒவ்வொன்றாக தோன்றும்,
- ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும் போது, சிறுநீரகம் அதை வெளியேற்ற முயல்கிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழல் உருவாகும். உடலில் நீர்ச்சத்து குறைவதால், இடைவிடாமல் தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும்.
- செல்கள் சர்க்கரையை ஆற்றலாக மாற்ற முடியாத போது, உடல் தனது கொழுப்பையும் தசையையும் எரிக்க தொடங்குகிறது. இதனால் எவ்வித உடற்பயிற்சியோ அல்லது உணவுக்கட்டுப்பாடோ இல்லாமலேயே உடல் எடை திடீரெனக் குறையும்.
- உணவில் உள்ள சர்க்கரை செல்களுக்குச் சென்று ஆற்றலாக மாறாததால், நாள் முழுவதும் உடலில் தளர்ச்சியும், வேலை செய்ய முடியாத அளவுக்குக் கடுமையான சோர்வும் இருக்கும்.
- ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது, கண்ணின் விழித்திரையில் உள்ள திரவ சமநிலை பாதிக்கப்பட்டுப் பார்வையில் திடீரென மங்கல் தன்மை ஏற்படும்.
- உடலில் ரத்த ஓட்டம் குறைவதால், சிறிய காயங்கள் ஏற்பட்டாலும் எளிதில் ஆறாது. மேலும், தோல் மற்றும் ரகசிய உறுப்புகளில் அடிக்கடி கிருமித்தொற்று ஏற்பட்டு அரிப்பு உண்டாகும்.
தோலில் தோன்றும் சில எச்சரிக்கை சிக்னல்கள்
- ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, தோலிலும் சில மாற்றங்கள் தென்படலாம்:
- கழுத்து மடிப்புகள், முழங்கை மற்றும் கணுக்கால் பகுதிகளில் தோல் தடித்துக் கருமையாக மாறுதல்.
- தோலில் ஆங்காங்கே சிவப்பு, பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் தடிப்புகள் தோன்றுவது.
- கைகளில் தோல் கடினமாகி விறைப்பு தன்மை அடைவது.
திடீர் சர்க்கரை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகள்
சர்க்கரை அளவு திடீரெனக் குறைதல் (Hypoglycemia): ரத்த சர்க்கரை 70 mg/dl-க்கும் கீழே குறையும் போது தலைச்சுற்றல், அதிக வேர்வை, படபடப்பு மற்றும் மயக்கம் வரலாம். இந்நேரத்தில் தாமதிக்காமல் 4 டீஸ்பூன் சர்க்கரை, தேன் அல்லது பழச்சாறு அருந்துவது நிலையை சீராக்கும்.
சர்க்கரை அளவு மிக அதிகமாகுதல் (Hyperglycemia): சர்க்கரை அளவு அளவுக்கு அதிகமாக உயர்ந்து கவனிக்காமல் விட்டால், மூச்சு விடுவதில் சிரமம், வாயில் பழ வாடை வீசுதல் மற்றும் வாந்தி போன்ற தீவிரப் பிரச்சனைகள் ஏற்படலாம். உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதே பாதுகாப்பானது.
தடுக்க என்ன செய்வது?
டைப் 2 சர்க்கரை நோயை கண்டு அச்சப்பட வேண்டியதில்லை. அன்றாட வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் இதை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்:
- சத்தான உணவு முறை: காய்கறிகள், கீரைகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த தானியங்களை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள் மற்றும் அதிக இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும்.
- தினசரி உடற்பயிற்சி: தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சி மேற்கொள்வது ரத்தச சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
- மருத்துவ ஆலோசனை: மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளையோ அல்லது இன்சுலினையோ தவறாமல் உட்கொள்ள வேண்டும். அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்து சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டும்.

