ETV Bharat / health

சர்க்கரை Vs வெல்லம் - இரண்டும் இனிப்பு தான் ஆனால் சத்து?

உணவுக்கு பின் ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவது செரிமான என்சைம்களை தூண்டி, மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகளை தீர்க்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : January 9, 2026 at 1:00 PM IST

3 Min Read
Choose ETV Bharat

மாறி வரும் வாழ்க்கை முறையில், நாம் உண்ணும் உணவில் சுவையை தேடும் அளவிற்கு ஆரோக்கியத்தை தேடுகிறோமா? என்பது மிகப பெரிய கேள்வி.

"இனிப்பு" என்றாலே நம் நினைவுக்கு வருவது ஜீனி என அழைக்கப்படும் வெள்ளை சர்க்கரை தான். ஆனால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய வெல்லத்தை விடுத்து, பளபளப்பான ஜீனிக்கு மாறியது தான் இன்று பெருகி வரும் நீரிழிவு மற்றும் உடல்நல கோளாறுகளுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

அனால் தற்போது மக்களிடையே ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்த நிலையில், ஜீனியை தவிர்த்து வெல்லம், நாட்டு சர்க்கரை அல்லது பனக்கற்கண்டு போன்றவற்றுக்கு மாறி வருகின்றனர். இன்னும் சிலர், எந்தவிதமான சர்க்கரையும் வேண்டாம் என முடிவு எடுத்து வருகின்றனர்.

இருந்தாலும், பலருக்கு இருக்கும் பொதுவான சந்தேகம், ஜீனியை விட வெல்லம் நல்லதா? உண்மையில் வெல்லம் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. அதற்கான பதிலை இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நாம் அன்றாடம் பருகும் தேநீர் முதல் பண்டிகை கால இனிப்புகள் வரை, ஒரு சிறிய மாற்றத்தை செய்வதன் மூலம் நம் ஆரோக்கியத்தை எப்படி மீட்டெடுக்கலாம் என்பதை விரிவாக பார்ப்போம்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை: சர்க்கரை என்பது கரும்பிலிருந்து எடுக்கப்பட்டாலும், அது தொழிற்சாலைகளில் பல கட்ட வேதியியல் சுத்திகரிப்புக்கு (Chemical Processing) உட்படுத்தப்படுகிறது. கந்தக டை ஆக்சைடு போன்ற வேதிப்பொருட்கள் மற்றும் பிளீச்சிங் முறைகள் மூலம் அதன் கறுமை நீக்கப்பட்டு, வெறும் 'சுக்ரோஸ்' (Sucrose) மட்டுமே எஞ்சுகிறது. இதில் உடலுக்கு தேவையான எந்த சத்துக்களும் இல்லை.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)

சர்க்கரையை உட்கொள்ளும் போது அது ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக உயர்த்துகிறது. இதனால் கணையம் அதிகப்படியான இன்சுலினை சுரக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. இது காலப்போக்கில் இன்சுலின் எதிர்ப்புத் திறனை உருவாக்கி, டைப்-2 நீரிழிவு நோய்க்கும், இதயம் தொடர்பான நோய்களுக்கும் வழி வகுக்கிறது. மேலும், இது உடலில் 'AGEs' எனப்படும் மூலக்கூறுகளை உருவாக்கி, சருமத்தின் இளமையை கெடுத்து முதிர்ச்சியை தூண்டுகிறது.

வெல்லம்: சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை நாம் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. வெல்லம் என்பது கரும்பு சாற்றை எவ்வித வேதிப்பொருட்களும் இன்றி காய்ச்சி தயாரிக்கப்படும் ஒரு இயற்கையான இனிப்பு. இதில் இயற்கையான 'மொலாசஸ்' (Molasses) நீக்கப்படுவதில்லை.

வெல்லத்தில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன. இவை ரத்தசோகையை தடுக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன. சர்க்கரையை போலல்லாமல், வெல்லம் ரத்தத்தில் மெதுவாகவே கலக்கிறது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை சீராகவும் நீண்ட நேரத்திற்கும் வழங்குகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் துத்தநாகம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன.

ஆயுர்வேதமும் நவீன அறிவியலும்!

ஆயுர்வேதத்தில் வெல்லம், உடலின் உள் ஆற்றலை சமநிலைப்படுத்தும் குணம் கொண்டது. ரத்தத்தை சுத்திகரிக்கவும், செரிமானத்தை தூண்டவும் இது பரிந்துரைக்கப்படுகிறது. Journal of Food Science and Technology ஆய்வுத்தளத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், வெல்லம் ஒரு 'செயல்பாட்டு உணவு' (Functional Food) என்பதை உறுதிப்படுத்துகின்றன. பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளில் சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை பயன்படுத்தினாலும் அதன் தரம் மாறுவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

வெல்லத்தின் வியக்கத்தக்க மருத்துவப் பயன்கள்

  • புகை மற்றும் தூசியினால் நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க வெல்லம் உதவுகிறது. இது ஒரு இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படுகிறது.
  • உணவுக்கு பின் ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவது செரிமான என்சைம்களை தூண்டி, மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகளை தீர்க்கும்.
  • மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை குறைக்கவும், ரத்த இழப்பை ஈடுகட்டவும் இதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் உதவுகிறது.
  • இதில் உள்ள பொட்டாசியம் உடலில் நீர்ச்சத்தை சமன்படுத்தி, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

மாற்றத்திற்கான நேரம்: இன்று மக்கள் மீண்டும் இயற்கை உணவுகளை நோக்கி திரும்ப தொடங்கியுள்ளனர். சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்துவது ஆரோக்கியமானது மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் நல்லது. ஏனெனில் வெல்லம் தயாரிப்பில் ரசாயன கழிவுகள் மிக குறைவு.

தேநீர், காபி மற்றும் வீட்டில் செய்யும் பலகாரங்களில் சர்க்கரையைத் தவிர்த்து வெல்லத்தைச் சேர்த்துப் பழகுங்கள். குறிப்பாக அடர் நிறத்தில் இருக்கும் வெல்லம் அதிகச் சத்துக்களைக் கொண்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.