ETV Bharat / health

மார்பகப் புற்றுநோய் சிகிச்சை: கீமோதெரபியை தவிர்க்க உதவும் புதிய மரபணு பரிசோதனை!

கீமோதெரபியை தவிர்ப்பதால் பெண்களுக்கு கிடைக்கும் உடல்நல நன்மைகளும், பக்கவிளைவுகள் இல்லாத வாழ்க்கையும் மிக அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : June 2, 2026 at 10:48 AM IST

3 Min Read
Choose ETV Bharat

மார்பகப் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு, கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகு 'கீமோதெரபி' (Chemotherapy) சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்க இந்த சிகிச்சை உதவினாலும், இதனால் ஏற்படும் தலைமுடி உதிர்வு, கடுமையான சோர்வு மற்றும் பிற பக்கவிளைவுகள் நோயாளிகளுக்கு பெரும் உடல் மற்றும் மன உளைச்சலைத் தருகின்றன.

இந்த நிலையில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த பெண்களுக்கு கீமோதெரபி சிகிச்சை உண்மையிலேயே தேவையா, அல்லது அதை தவிர்க்கலாமா என்பதைக் கண்டறிய லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (UCL) ஆராய்ச்சியாளர்கள் 'ஆப்டிமா' (Optima) என்ற பெயரில் ஒரு விரிவான மருத்துவ ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம், கட்டியின் மரபணுத்தன்மையை பரிசோதிப்பதன் மூலம் மூன்றில் இரண்டு பங்கு பெண்களுக்கு கீமோதெரபி தேவையில்லை என்பதை பாதுகாப்பான முறையில் உறுதி செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது புற்றுநோய் சிகிச்சையில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

நோயாளிகளின் அச்சத்தை போக்கும் புதிய அணுகுமுறை

புற்றுநோய் பாதிப்பு என்றாலே, சிகிச்சையின் போது ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த பயம் தான் பலருக்கும் முதலில் தோன்றும். இந்த அச்சத்திற்கு தீர்வாக, கட்டியின் தீவிரத்தை அதன் உயிரணுக்களுக்குள் இருக்கும் மரபணுக்களின் செயல்பாட்டை வைத்து துல்லியமாக கணக்கிடும் தொழில்நுட்பம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வழக்கமாக, மருத்துவர்கள் புற்றுநோய் கட்டியின் அளவு மற்றும் அது மற்ற இடங்களுக்கு பரவியிருக்கிறதா என்பதை பார்த்துதான் சிகிச்சையை தீர்மானிப்பார்கள். ஆனால், இந்த புதிய முறையில் 'புரோசிக்னா' (Prosigna) எனப்படும் டிஎன்ஏ அடிப்படையிலான மரபணுப் பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. இது புற்றுநோய் செல்களை ஆழமாக ஆய்வு செய்து, அந்த புற்றுநோய் எவ்வளவு தீவிரமானது, அது மீண்டும் வருவதற்கான வாய்ப்பு எவ்வளவு உள்ளது என்பதை ஒரு மதிப்பெண் (Score) மூலம் காட்டிவிடும்.

இந்த மதிப்பெண் குறைவாக இருந்தால், அந்த புற்றுநோய் குறைந்த வீரியம் கொண்டது என்று அர்த்தம். அவர்களுக்கு அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை (Radiotherapy) மற்றும் ஹார்மோன் மாத்திரைகள் மட்டுமே போதுமானது.

கீமோதெரபி தேவையில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொல்ல முடியும். ஒருவேளை மதிப்பெண் அதிகமாக இருந்தால் மட்டுமே, புற்றுநோய் மீண்டும் வருவதை தடுக்க கீமோதெரபி பரிந்துரைக்கப்படும். இதன் மூலம் யாருக்கு இந்த சிகிச்சை அவசியம், யாருக்கு இதனால் தேவையற்ற பாதிப்புகள் மட்டுமே ஏற்படும் என்பதைத் தெளிவாகப் பிரித்தறிய முடிகிறது.

4,400 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு

இந்த ஆய்வின் முடிவுகள் சிகாகோவில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட, ஆரம்பகட்ட மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4,400-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். குறிப்பாக, 'இஸ்ட்ரோஜன்' போன்ற ஹார்மோன்களால் வளரக்கூடிய மற்றும் 'ஹெர்-2' (HER2) என்ற புரதம் இல்லாத, பொதுவான வகை மார்பகப் புற்றுநோய் உள்ளவர்களே இதில் சேர்க்கப்பட்டனர்.

ஆய்வில் பங்கேற்றவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவினருக்கு வழக்கமான மருத்துவ முறைகளின்படியும், மற்றொரு பிரிவினருக்கு இந்த 'புரோசிக்னா' மரபணுப் பரிசோதனை முடிவுகளின் படியும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. பல ஆண்டுகள் தொடர் கண்காணிப்புக்குப் பிறகு, பாரம்பரிய முறையில் அதிகப் பாதிப்பு இருப்பதாகக் கருதப்பட்ட பெண்களில், மூன்றில் இரண்டு பங்கு (67%) பெண்கள் இந்த மரபணு சோதனையின் மூலம் பாதுகாப்பாக கீமோதெரபியை தவிர்த்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிறிய வித்தியாசமும் பெரிய நிம்மதியும்

கீமோதெரபி எடுத்துக்கொண்டவர்களுக்கும், அதை தவிர்த்தவர்களுக்கும் இடையே ஐந்து ஆண்டு கால அளவில் உயிர்வாழும் விகிதத்தில் வெறும் ஒரு சதவீதமே (94.9% மற்றும் 93.7%) வித்தியாசம் இருந்தது. இந்த மிகச்சிறிய வித்தியாசத்தை விட, கீமோதெரபியைத் தவிர்ப்பதால் பெண்களுக்கு கிடைக்கும் உடல்நல நன்மைகளும், பக்கவிளைவுகள் இல்லாத வாழ்க்கையும் மிக அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

தேவையற்ற சிகிச்சையினால் ஏற்படும் மலட்டுத்தன்மை, இதயப் பாதிப்பு போன்ற நீண்டகாலப் இன்னல்களிலிருந்து பெண்கள் தப்பிக்க இது பெரிதும் உதவுகிறது. அதே நேரத்தில், சோதனையில் அதிக மதிப்பெண் பெற்ற மீதமுள்ள ஒரு பங்கு பெண்களுக்கு கீமோதெரபி கட்டாயம் தேவை என்பதால், அவர்களுக்கு இந்த சிகிச்சை தடையின்றி வழங்கப்படும்.

நடைமுறைக்கு வருவது எப்போது?

இந்த 'புரோசிக்னா' பரிசோதனை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஒன்றுதான் என்றாலும், இது பொதுமக்களுக்குப் பாதுகாப்பானதுதானா என்ற சந்தேகத்தினால் பரவலாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது கிடைத்துள்ள வலுவான மருத்துவ ஆதாரங்கள் மூலம், மருத்துவர்கள் மற்றும் சுகாதார அமைப்புகளுக்கு இதன் மீது முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனின் 'நைஸ்' (NICE) போன்ற மருத்துவக் கட்டுப்பாட்டு அமைப்புகள் இந்த ஆய்வு முடிவுகளைப் பரிசீலித்து, இதனைப் பொது மருத்துவக் காப்பீட்டு திட்டங்களின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நடைமுறைகள் முடிவடைய சில மாதங்கள் ஆகலாம் என்றாலும், எதிர்காலத்தில் இது அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதைக்கு இந்த ஆய்வு முடிவுகள் குறிப்பிட்ட வகை மார்பகப் புற்றுநோய்க்கு மட்டுமே பொருந்தும். 'டிரிபிள் நெகட்டிவ்' மற்றும் 'ஹெர்-2 பாசிட்டிவ்' போன்ற தீவிரமான புற்றுநோய் வகைகளுக்கும், 40 வயதிற்கு உட்பட்ட இளம்பெண்களுக்கும் அவர்களின் உடற்கூறு மாறுபடுவதால், அவர்கள் தங்களின் மருத்துவக் குழுவுடன் கலந்தாலோசித்தே சிகிச்சையைத் தீர்மானிக்க வேண்டும்.

மார்பகப் புற்றுநோய் மட்டுமன்றி, நுரையீரல், குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களுக்கும் இது போன்ற மரபணு சார்ந்த துல்லிய சிகிச்சை முறைகள் தற்போது வேகமாக வளர்ந்து வருவது மருத்துவ உலகின் ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

ஆய்வு:

https://www.asco.org/abstracts-presentations/258169

இதையும் படிங்க:

கர்ப்பகால சர்க்கரை நோய்: பிற்காலத்தில் டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் - எச்சரிக்கும் ஆய்வு!

"ஆயுள் அதிகம், ஆரோக்கியம் குறைவு" - பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் 'லான்செட்' ஆய்வு!