ETV Bharat / health

லாக்டோஸ் இன்டாலரன்ஸ்: பால் குடிக்காத குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் ஊட்டச்சத்து குறையாமல் காப்பது எப்படி?

சில குழந்தைகளுக்கு இந்த லாக்டேஸ் நொதி போதிய அளவில் சுரப்பதில்லை. இதனால் செரிமானம் ஆகாத பால் சர்க்கரை அப்படியே பெருங்குடலுக்கு சென்றுவிடுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : July 6, 2026 at 3:06 PM IST

3 Min Read
Choose ETV Bharat

குழந்தைகள் வளரும் பருவத்தில் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் பாலும், அது சார்ந்த பொருட்களும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், சில குழந்தைகளுக்கு பால் குடித்த சில மணி நேரங்களிலேயே வயிறு உப்பசம், வயிற்றுப்போக்கு அல்லது காரணமில்லாத அழுகை போன்ற அசௌகரியங்கள் ஏற்படுவதை நாம் பார்க்க முடியும்.

பொதுவாக இதனை சாதாரண வயிற்று பிரச்சனை என்று பெற்றோர்கள் எளிதாக கடந்துவிடுவதுண்டு. ஆனால், இது 'லாக்டோஸ் இன்டாலரன்ஸ்' (Lactose Intolerance) எனப்படும் பால் சர்க்கரை ஒவ்வாமை பாதிப்பாக இருக்கக்கூடும்.

சமீபகாலமாக இந்த பாதிப்பு குழந்தைகளிடம் பரவலாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில், குழந்தைகளுக்கு பால் பொருட்கள் ஏன் ஒத்துக்கொள்வதில்லை, அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன மற்றும் இதனை பெற்றோர்கள் எப்படி தங்களின் அன்றாட வாழ்க்கையில் கையாள்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்றால் என்ன?

பால் மற்றும் தயிர், வெண்ணெய், ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்களில் 'லாக்டோஸ்' என்னும் இயற்கையான சர்க்கரைச்சத்து உள்ளது. இந்த சர்க்கரையை நம் உடல் சரியாக செரிமானம் செய்வதற்கு, சிறுகுடலில் 'லாக்டேஸ்' (Lactase) என்னும் ஒரு நொதி (Enzyme) சுரக்க வேண்டும். இதுதான் அந்த சர்க்கரையை எளிய சத்துக்களாக உடைத்து உடலுக்குள் உறிஞ்ச உதவுகிறது.

ஆனால், சில குழந்தைகளுக்கு இந்த லாக்டேஸ் நொதி போதிய அளவில் சுரப்பதில்லை. இதனால் செரிமானம் ஆகாத பால் சர்க்கரை அப்படியே பெருங்குடலுக்கு சென்றுவிடுகிறது. அங்குள்ள பாக்டீரியாக்களுடன் இந்த சர்க்கரை சேரும்போது, அது நொதித்துப்போய் வாயுத்தொல்லையையும் கடுமையான வயிற்று உபாதைகளையும் ஏற்படுத்துகிறது. இதையே நாம் லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்கிறோம்.

குழந்தைகளிடம் காணப்படும் அறிகுறிகள்

பொதுவாக குழந்தைகளுக்கு பால் அல்லது பால் பொருட்கள் கொடுத்த சில மணி நேரங்களிலேயே இதன் வெளிப்பாடுகள் தெரிய தொடங்கும். வயிறு வலிக்கிறது என்பதை சொல்ல தெரியாத சிறிய குழந்தைகள், சாப்பிட்ட உடனே எதையும் சாப்பிட மறுத்து அடம் பிடிப்பார்கள். தொடர்ந்து அழுதுகொண்டே அல்லது ஒருவித எரிச்சலுடன் காணப்படுவார்கள்.

  • வயிற்று உபாதைகள்: குழந்தையின் வயிறு எப்போதும் பலூன் போல உப்பி இருக்கும். அத்துடன் கடுமையான கேஸ் தொல்லையும், அடிவயிற்று வலியும் ஏற்படும்.
  • மலம் மற்றும் வாந்தி: மலம் மிகவும் தளர்வாக அல்லது தண்ணீராக வயிற்றுப்போக்கு போல வெளியேறும். சில குழந்தைகளுக்கு ஒருவித அசெளகரியத்துடன் குமட்டலோ அல்லது வாந்தியோ வரலாம்.

பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!

இந்த அறிகுறிகள் எப்போதாவது ஒருமுறை வந்தால் கவலைப்பட தேவையில்லை. ஆனால், பால் பொருட்கள் கொடுக்கும்போதெல்லாம் இந்த அசெளகரியங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டால் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக, வயிற்றுப்போக்கு காரணமாக குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறைந்து குழந்தை சோர்வடைந்தாலோ, அல்லது இந்த செரிமான பிரச்சனையால் குழந்தையின் உடல் எடை கூடாமல் வளர்ச்சி பாதிக்கப்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

ஏனெனில், இந்த வயிற்று உபாதைகள் குழந்தையின் அன்றாட தூக்கத்தையும், விளையாட்டையும் கெடுத்து அவர்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். அதே சமயம், அறிகுறிகள் தெரிந்த உடனே மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே பால் பொருட்களை குழந்தையின் உணவிலிருந்து முற்றிலும் தவிர்த்துவிடக் கூடாது. ஏனெனில், குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும் வைட்டமின் D-யும் பாலில் தான் அதிக அளவில் நிறைந்துள்ளன.

பாதிப்பைக் கையாள பெற்றோருக்கான எளிய தீர்வுகள்

குழந்தைக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதியானால், பெற்றோர்கள் பதற்றமடையாமல் சில எளிய உணவு மற்றும் பழக்கவழக்க மாற்றங்கள் மூலம் நிலைமையை சரிசெய்யலாம். அதற்கு முதலில் ஒரு உணவு குறிப்பேட்டை (Food Diary) பராமரிப்பது நல்லது.

குழந்தை தினமும் என்ன சாப்பிடுகிறது, எந்த பொருளை சாப்பிட்ட பிறகு வயிறு வலிக்கிறது என்பதை ஒரு டைரியில் குறித்து வைத்து கொண்டால், குழந்தைக்கு எந்த பொருள் சேரவில்லை என்பதை துல்லியமாக கண்டறிய மருத்துவருக்கு உதவியாக இருக்கும்.

அடுத்ததாக, மருத்துவரின் ஆலோசனைப்படி இரண்டு வாரங்களுக்கு பால் பொருட்களை முழுமையாக நிறுத்தி பார்க்க வேண்டும். அறிகுறிகள் குறைந்தால், அதன் பிறகு மிக குறைந்த அளவில் பால் பொருட்களை கொடுத்து குழந்தையின் உடல்நிலை எப்படி மாறுகிறது என்பதை படிப்படியாக கவனிக்கலாம். இப்போது சந்தைகளில் சாதாரண பாலுக்கு மாற்றாக 'லாக்டோஸ்-ஃப்ரீ' பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கின்றன. சுவையில் எந்த மாற்றமும் இல்லாத இவற்றை குழந்தைகளுக்கு தைரியமாக கொடுக்கலாம்.

மாற்று ஊட்டச்சத்துக்கள்

பால் பொருட்களை குறைக்கும்போது, குழந்தைக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் D குறைபாடு ஏற்படாமல் இருக்க பெற்றோர்கள் சில மாற்று உணவுகளை வழங்கலாம்:

  • தாவர வழிப் பால்கள் மற்றும் காய்கறிகள்: சோயா பால், பாதாம் பால் போன்றவற்றுடன் புரோக்கோலி, கீரை வகைகள் மற்றும் நவதானியங்களை உணவில் சேர்க்கலாம்.
  • சத்து மாத்திரைகள்: உணவு மூலம் போதிய சத்துக்கள் கிடைக்காத பட்சத்தில், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கால்சியம் மற்றும் வைட்டமின் D சொட்டு மருந்துகள் அல்லது மாத்திரைகளை வழங்கலாம்.

ஆய்வு:

https://www.sciencedirect.com/science/article/pii/S0002916523329666

இதையும் படிங்க:

நம்மால் சில வாசனைகளை உணர முடியாமல் போவது ஏன்? 'நோஸ் பிளைண்ட்னஸ்' பாதிப்பு பற்றி தெரியுமா?

மழைக்கால நோய்த்தொற்று அபாயம்: குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?