வார முழுமைக்குமான 'மீல் பிரெப்': உணவை ஃப்ரெஷ்ஷாகவும் பாதுகாப்பாகவும் வைப்பது எப்படி?
உணவை சமைக்கும் போது அது சரியான அளவு வெந்துள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அரைகுறையாக வெந்த உணவை சேமித்து வைத்து, மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உணவு நச்சுத்தன்மைக்கு (Food poisoning) வழிவகுக்கும்.

Published : October 10, 2026 at 7:01 AM IST
இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில், தினமும் "நாளைக்கு என்ன சமைப்பது?" என்று யோசிப்பதே ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. இதற்கு தீர்வாக உருவானதுதான் 'மீல் பிரெப்' (Meal Prep) என்னும் உணவு திட்டமிடல் முறை.
அதாவது, வாரத்திற்கு அல்லது சில நாட்களுக்கு தேவையான உணவை முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்கான காய்கறி நறுக்குதல், மசாலா தயாரித்தல் அல்லது உணவை ஒரே அடியாக சமைத்துச் சேமித்து வைப்பதாகும்.
தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதுடன், தினமும் வெளியே வாங்கி சாப்பிடாமல், வீட்டிலேயே சத்தான உணவை சாப்பிட உதவுகிறது. குறிப்பாக, உடற்பயிற்சி செய்பவர்களுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
ஆனால், உணவை மொத்தமாக சமைத்து பல நாட்கள் வைத்திருந்து சாப்பிடும் போது, அதில் கண்ணுக்கு தெரியாத பல ஆரோக்கிய சிக்கல்களும், கிருமி தொற்றுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தான் பலருக்கு "மீல் பிரெப் செய்வது சரிதானா? உணவை எப்படி பாதுகாப்பாக சமைத்து சேமிப்பது?" என்ற குழப்பம் ஏற்படுகிறது.
இப்படியிருக்க, உணவின் ஊட்டச்சத்து குறையாமலும், கிருமிகள் அண்டாமலும் பாதுகாப்பாக மீல் பிரெப் செய்வது எப்படி என்று விரிவாக பார்ப்போம்.
சுத்தம் மற்றும் சுகாதாரம் மிக முக்கியம்
சமையலை தொடங்குவதற்கு முன்பும், பச்சை காய்கறிகள் அல்லது கறி வகைகளை கையாண்ட பிறகும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். ஏனெனில், பச்சையாக இருக்கும் இறைச்சி மற்றும் காய்கறிகளில் ஈ.கோலை , சால்மோனெல்லா , லிஸ்டீரியா போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும்.
அதேபோல, காய்கறி நறுக்கும் பலகை, கத்திகள், மற்றும் சமையல் மேடை ஆகியவற்றை சுத்தமாக வைப்பது அவசியம். பச்சையான உணவிலிருந்து சமைத்த உணவுக்கு கிருமிகள் பரவாமல் தடுக்க , சமையல் மேடையை உணவுக்கு பாதுகாப்பான கிருமிநாசினி கொண்டு துடைத்து, காய்ந்த பிறகே சமைக்க வேண்டும். உங்களுக்கு வயிற்று உபாதைகள் அல்லது தொற்றுநோய்கள் இருந்தால், மற்றவர்களுக்காக மீல் பிரெப் செய்வதை தவிர்ப்பது நல்லது.
சரியான வெப்பநிலையில் சமைத்தல்
உணவை சமைக்கும் போது அது சரியான அளவு வெந்துள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அரைகுறையாக வெந்த உணவை சேமித்து வைத்து, மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உணவு நச்சுத்தன்மைக்கு (Food poisoning) வழிவகுக்கும்.
இறைச்சி போன்ற உணவுகளை சமைக்கும் போது, அதன் உட்பகுதி குறைந்தது 75°C வெப்பநிலையை எட்டும் வரையாவது சமைக்க வேண்டும். இதனால் உணவில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் முற்றிலும் அழிக்கப்படும்.
உணவை விரைவாகக் குளிரூட்டுதல் மற்றும் சேமித்தல்
சமைத்த உணவை அறையின் வெப்பநிலையிலேயே அதிக நேரம் வைக்க கூடாது. சமைத்த 2 மணி நேரத்திற்குள் உணவை குளிரவைத்து (Cooling), ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.
மொத்தமாக சமைத்த உணவை அப்படியே பெரிய பாத்திரத்தில் வைத்தால், சூடு குறைய அதிக நேரம் எடுக்கும். இதனால் காற்றில் உள்ள பாக்டீரியாக்கள் உணவில் வளர தொடங்கும். எனவே,
- சமைத்த உணவைச் சிறிய பாத்திரங்களில் தனித்தனியாகப் பிரித்து வைக்கலாம்.
- பாத்திரங்களைப் பனிக்கட்டி (Ice) அடங்கிய தட்டில் வைத்து விரைவாக சூட்டை குறைக்கலாம்.
- ஃபிரிட்ஜில் வைக்கும் போது பாத்திரங்களை நன்றாக மூடி வைக்க வேண்டும்.
ஃபிரிட்ஜில் 5°C அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையிலேயே உணவை சேமிக்க வேண்டும். இப்படி சேமிக்கும் உணவை 2 முதல் 3 நாட்களுக்குள் சாப்பிட்டு முடிப்பது நல்லது. அதற்கு மேல் வைக்க வேண்டியிருந்தால், -18°C வெப்பநிலையில் 'ஃப்ரீசரில்' (Freezer) உரையவைத்து சேமிக்கலாம்.
4 மணி நேர விதி (24-Hour Rule)
சில வகையான உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்தால் கூட விரைவில் கெட்டுப்போகும் வாய்ப்பு அதிகம்.
- கொத்திறைச்சி (Minced Meat): இறைச்சியை அரைக்கும் போது கிருமிகள் அனைத்து இடங்களிலும் பரவ வாய்ப்புள்ளது. எனவே இதை நன்றாக சமைக்க வேண்டும்.
- சாதம் மற்றும் பாஸ்தா: சாதம் மற்றும் பாஸ்தாவில் 'பேசில்லஸ் செரினஸ்' என்ற பாக்டீரியாவின் வித்திகள் (Spores) இருக்கும். இவை சமைக்கும் போது அழியாமல், உணவு ஆறும்போது மீண்டும் பாக்டீரியாவாக மாறக்கூடும். சாதம் அல்லது பாஸ்தா கலந்த உணவுகளை சமைத்த 24 மணி நேரத்திற்குள் சாப்பிடுவது பாதுகாப்பானது. 48 மணி நேரத்திற்கு மேல் ஃபிரிட்ஜில் வைத்தால் கிருமித் தொற்று அதிகரிக்கும்.
- சாலட் : பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளை கொண்டு செய்யப்படும் சாலட்களை சமைத்தவுடனே சாப்பிடுவது நல்லது. முன்கூட்டியே தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்தால் கிருமிகள் வேகமாக பெருகிவிடும்.
ஒரே ஒரு முறை மட்டுமே சூடுபடுத்த வேண்டும்
மீல் பிரெப் செய்த உணவை சாப்பிடும் போது, தேவையான அளவை மட்டும் தனியாக எடுத்து சூடுபடுத்த வேண்டும். உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதும், ஆறவைப்பதுமாக இருந்தால் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும்.
உணவை சூடுபடுத்தும் போது, ஆவி பறக்கும் அளவுக்கு (குறைந்தது 60°C) நன்றாக சூடாக்க வேண்டும். இது உணவில் ஏதேனும் பாக்டீரியாக்கள் இருந்தால் அவற்றை அழித்துவிடும்.
ஆய்வு:
https://nutritionsource.hsph.harvard.edu/meal-prep/

