ETV Bharat / health

மார்பக புற்றுநோய் சுய பரிசோதனை: கட்டியை தாண்டி பெண்கள் கவனிக்க வேண்டிய 5 முக்கிய அறிகுறிகள்!

மார்பகங்களில் தோன்றும் 90 சதவீதக் கட்டிகள் புற்றுநோய் அல்லாத சாதாரணக் கட்டிகளாகவே இருக்கின்றன. ஹார்மோன் மாற்றங்கள் அல்லது சாதாரண நீர்க்கட்டிகள் காரணமாகவும் இவை தோன்றலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : October 6, 2026 at 7:01 AM IST

3 Min Read
Choose ETV Bharat

பெண்களின் ஆரோக்கியத்தில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று மார்பக பாதுகாப்பு. இந்திய பெண்களிடையே அதிகரித்து வரும் நோய் பாதிப்புகளில் மார்பகப் புற்றுநோய் முதல் இடத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியப்படுகிறது.

மேலும், இந்நோயால் பாதிக்கப்படும் ஒவ்வொரு இரண்டு பெண்களில் ஒருவர் உயிரிழக்கும் அபாயகரமான சூழல் நிலவுகிறது. இதற்கு முக்கிய காரணம், நோய் பற்றிய விழிப்புணர்வு இன்மையும், ஆரம்ப கட்டத்தில் இதனை கண்டறிய தவறுவதுமே ஆகும்.

பொதுவாக, மார்பகத்தில் கட்டி ஏற்பட்டால் மட்டுமே அது புற்றுநோயின் அறிகுறி என்று பலரும் தவறாக கருதுகிறார்கள். ஆனால், கட்டி எதுவும் இல்லாமலேயே கூட மார்பக சருமம் மற்றும் காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் இந்நோயின் அறிகுறிகளை அடையாளம் காண முடியும்.

எனவே, பயமோ அல்லது தயக்கமோ இன்றி, பெண்கள் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக கண்டறிய வேண்டியது அவசியமாகும். மார்பக ஆரோக்கியம் மற்றும் சுய பரிசோதனை முறைகள் குறித்த முழுமையான தகவல்களை இனி விரிவாக காண்போம்.

கட்டியை தவிர்த்து... கவனிக்க வேண்டிய பிற அறிகுறிகள்

மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் கட்டிகளோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. பின்வரும் மாற்றங்கள் தென்பட்டாலும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்:

  • சரும மாற்றங்கள்: மார்பக சருமத்தில் திடீரென சுருக்கங்கள் ஏற்படுவது அல்லது ஆரஞ்சு பழத்தின் தோலை போன்ற குழிகள் தோன்றுவது.
  • காம்புகளின் நிலை: காம்புகள் வழக்கமான அமைப்பில் இருந்து மாறி, உள்நோக்கி இழுக்கப்படுவது.
  • திரவம் வெளியேறுதல்: தாய்ப்பால் தராத நிலையிலும், காம்புகளில் இருந்து ரத்தம், தெளிவான நீர் அல்லது மஞ்சள் நிறத் திரவம் கசிவது.
  • தடிப்பு மற்றும் நிறமாற்றம்: மார்பகப் பகுதியில் தொடர்ச்சியான சிவத்தல், தடிப்பு, அரிப்பு அல்லது ஆறாத புண்கள் ஏற்படுவது.
  • வடிவ மாற்றம்: இரு மார்பகங்களின் அளவு அல்லது வடிவத்தில் திடீரென இயல்புக்கு மாறான ஏற்றத்தாழ்வுகள் தெரிவது.

வீட்டில் மார்பக சுய பரிசோதனை செய்யும் 5 முறைகள்

மருத்துவமனைக்கு செல்லாமல், மாதத்திற்கு ஒருமுறை வீட்டிலேயே எளிய முறையில் இப்பரிசோதனையை செய்து கொள்ளலாம்:

  • ஸ்டெப் 1: கண்ணாடியின் முன் தோள்களை நேராக வைத்து, கைகளை இடுப்பில் ஊன்றி நிற்க வேண்டும். மார்பகங்களின் அளவு, வடிவம் மற்றும் சருமத்தின் நிறத்தில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளனவா என்று கவனிக்க வேண்டும்.
  • ஸ்டெப் 2: இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்துக்கொண்டு, மார்பக சருமத்தில் சுருக்கங்களோ அல்லது வடிவ மாற்றங்களோ இருக்கின்றனவா என்று மீண்டும் சோதிக்க வேண்டும்.
  • ஸ்டெப் 3: காம்புகளை மெதுவாக அழுத்தி, தேவையில்லாத திரவமோ அல்லது ரத்தமோ வெளியேறுகிறதா என்று பார்க்க வேண்டும்.
  • ஸ்டெப் 4: சமமான இடத்தில் படுத்துக்கொண்டு, வலது கையால் இடது மார்பகத்தையும், இடது கையால் வலது மார்பகத்தையும் பரிசோதிக்க வேண்டும். விரல்களை மடிக்காமல் தட்டையாக வைத்து, வட்ட வடிவில் சுழற்றி அழுத்த வேண்டும். அக்குள் பகுதி முதல் மார்பின் நடுப்பகுதி வரையிலும், கழுத்து எலும்பு முதல் அடிவயிறு வரையிலும் முழுமையாகத் தொட்டு உணர்ந்து பார்க்க வேண்டும்.
  • ஸ்டெப் 5: இதே அழுத்த முறையை நின்றுகொண்டோ அல்லது குளிக்கும்போதோ செய்து பார்க்கலாம். சருமம் ஈரப்பதம் அடைந்திருக்கும் வேளையில் சிறிய தடிப்புகளையும் எளிதாகக் கண்டறிய முடியும்.

மாற்றங்கள் தென்பட்டால் செய்ய வேண்டியவை

  • மார்பகங்களில் தோன்றும் 90 சதவீதக் கட்டிகள் புற்றுநோய் அல்லாத சாதாரணக் கட்டிகளாகவே இருக்கின்றன. ஹார்மோன் மாற்றங்கள் அல்லது சாதாரண நீர்க்கட்டிகள் காரணமாகவும் இவை தோன்றலாம்.
  • கண்டறியப்பட்ட மாற்றம் ஒரு மாதத்திற்கும் மேலாகத் நீடித்தாலோ அல்லது அளவில் பெரிதானாலோ தாமதிக்காமல் மகப்பேறு மருத்துவரையோ அல்லது பொது மருத்துவரையோ அணுக வேண்டும்.
  • நோயாளியின் வயதைக் கருத்தில் கொண்டு, அல்ட்ராசவுண்ட் (Ultrasound) அல்லது மேமோகிராம் (Mammogram) ஆகிய எக்ஸ்-ரே பரிசோதனைகள் மூலம் மருத்துவர் துல்லியமான காரணத்தைக் கண்டறிவார். 30 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனையே போதுமானது.

பெண்கள் நினைவில் கொள்ள வேண்டியவை

மாதவிடாய் சுழற்சி முடிந்த 3 முதல் 5 நாட்களுக்குள் இப் பரிசோதனையை செய்வது சிறந்தது. அக்காலகட்டத்தில் மார்பகத் திசுக்கள் மென்மையாக இருக்கும். மாதவிடாய் நின்ற பெண்கள், ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நாளை இதற்காகத் தேர்ந்தெடுக்கலாம்.

25 வயதைக் கடந்த அனைத்துப் பெண்களும் தங்களின் மார்பகங்களின் இயல்பான அமைப்பை பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:

மனநிலைக்கும் வால்நட்ஸிற்கும் என்ன தொடர்பு? தினமும் 1 கைப்பிடி சாப்பிட சொல்லும் புதிய ஆய்வு!

பிரபல நிறுவன சீரக தூளில் பூச்சிக்கொல்லி? உங்கள் வீட்டில் இந்த பாக்கெட் இருக்கானு செக் பண்ணுங்க!