ETV Bharat / health

பிஞ்சு முதுகுகளை பதம் பார்க்கும் புத்தக சுமைகள்! நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தும் மருத்துவர்கள்!

குழந்தைகள் பையின் எடையால் கூன் விழுந்து நடக்கும்போது, அவர்களின் நெஞ்சுப்பகுதி சுருங்குவதால் நுரையீரலுக்குச் செல்லும் காற்றின் அளவு குறைகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By Kasmin Fernandes

Published : April 8, 2026 at 3:46 PM IST

3 Min Read
Choose ETV Bharat

காலையில் நம் வீட்டு வாசலில் அல்லது தெருவில் பார்த்தால் ஒரு காட்சி சாதாரணமாக தெரியும். தன் உயரத்திற்கு நிகரான ஒரு பெரிய பையை முதுகில் சுமந்து கொண்டு, மழலை மாறாத முகத்துடன் ஒரு குழந்தை பள்ளிப் பேருந்துக்காகக் காத்திருக்கும்.

அந்தக்குழந்தையின் கால்கள் பாரம் தாங்காமல் தள்ளாடுவதையும், உடல் சற்று முன்னோக்கி சாய்ந்திருப்பதையும் நாம் கவனித்திருப்போம். ஏதோ ஒரு பெரிய பயணத்திற்கு தயாராகி மூட்டையை தூக்கிக் கொண்டு போவது போல, நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட இன்று 5 முதல் 7 கிலோ எடையை சுமக்கின்றனர்.

நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், பெரிய தண்ணீர் பாட்டில், மதிய உணவு என அந்த பைக்குள் இருக்கும் ஒவ்வொன்றும் அந்தக் குழந்தையின் மென்மையான முதுகெலும்பை மெல்ல மெல்லப் பாதிக்கிறது. நாம் கொடுக்கும் கல்வியே அவர்களுக்கு பிற்காலத்தில் பல உடல் நல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றன.

எடை எவ்வளவு இருக்க வேண்டும்?

மருத்துவ ரீதியாகப் பார்த்தால், ஒரு குழந்தையின் புத்தகப் பை என்பது அந்த குழந்தையின் உடல் எடையில் 10 முதல் 15 சதவீதத்திற்கு மேல் இருக்கவே கூடாது. உதாரணமாக, உங்கள் குழந்தையின் எடை 30 கிலோ என்றால், அவர் சுமக்கும் பை அதிகபட்சம் 4.5 கிலோதான் இருக்க வேண்டும்.

ஆனால், இன்று பெரும்பாலான குழந்தைகள் தங்கள் எடையில் கால்வாசி எடையை தூக்கிச் செல்கிறார்கள். இது ஏதோ தற்காலிக முதுகு வலி என்று நாம் கடந்து போய்விட முடியாது. வளரும் பருவத்தில் எலும்புகள் மென்மையாக இருப்பதால், இந்தத் தொடர் அழுத்தம் அவர்களின் உடல் அமைப்பையே மாற்றிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குழந்தைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:

பெங்களூரு அஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அக்ஷய் ஹரி இது குறித்துப் பேசும்போது, "கனமான பைகளைச் சுமக்கும்போது, குழந்தைகள் அந்த பாரத்தை சமாளிக்க இயல்பாகவே முன்பக்கம் குனிகிறார்கள். இது அவர்களின் கழுத்து, தோள்பட்டை மற்றும் கீழ் முதுகில் தேவையற்ற அழுத்தத்தை உருவாக்குகிறது. இதனால் தசைகள் சீக்கிரம் சோர்வடைந்து விடுகின்றன," என்கிறார்.

பல நேரங்களில் குழந்தைகள் தனக்கு வலி இருக்கிறது என்று சொல்வதைக் கூட நாம் "விளையாடும்போது அடிபட்டிருக்கும்" என்று அலட்சியப்படுத்தி விடுகிறோம். ஆனால், ஆர்டெமிஸ் மருத்துவமனையின் டாக்டர் தீரஜ் பதேஜா சொல்வது போல, இந்த தவறான உடல் நிலை (Posture) காரணமாக, முதுகெலும்பின் இயற்கை வடிவம் மாறி, பின்னாளில் அவர்கள் நிமிர்ந்து நிற்பதற்கே சிரமப்படும் நிலை வரலாம்.

குறிப்பாக, ஒரு தோளில் மட்டும் பையை மாட்டிச் செல்லும் பழக்கம் குழந்தைகளிடம் அதிகம் உள்ளது. இது உடலின் ஒரு பக்கத் தசைகளை மட்டும் பலவீனமாக்கி, முதுகெலும்பை ஒருபுறமாகச் சாய்த்துவிடும்.

சுவாசம் மற்றும் கவனச்சிதறல்

புத்தக பையின் பாரம் முதுகெலும்பை மட்டும் பாதிப்பதில்லை. ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் டாக்டர் தீப்தி டி. நாயர் இது குறித்து எச்சரிக்கிறார். குழந்தைகள் பையின் எடையால் கூன் விழுந்து நடக்கும்போது, அவர்களின் நெஞ்சுப்பகுதி சுருங்குவதால் நுரையீரலுக்குச் செல்லும் காற்றின் அளவு குறைகிறது.

இதனால் அவர்களுக்கு சீக்கிரம் மூச்சு வாங்குவதும், களைப்பு ஏற்படுவதும் நடக்கிறது. உடல் சோர்வாக இருக்கும்போது, வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடிவதில்லை. அதாவது, படிக்க எடுத்து செல்லும் புத்தகங்களின் எடையே அவர்களைப் படிக்க விடாமல் தடுக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள்

பள்ளிகள் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை மட்டும் கொண்டு வர அறிவுறுத்தலாம். வகுப்பறையிலேயே புத்தகங்களை வைத்து செல்லும் வகையில் 'லாக்கர்' வசதிகளை ஏற்படுத்தி தரலாம். அதேபோல், ஒரே பாடத்திற்கு இரண்டு, மூன்று நோட்டுகள் வைப்பதை தவிர்க்கலாம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பையை தினசரி கவனிக்க வேண்டும். அந்த பைக்குள் தேவையற்ற பழைய தாள்கள், நோட்டுகள் இருக்கிறதா என்று சரிபார்க்கலாம். பையை வாங்கும் போது, தோள்பட்டைகளில் மென்மையான பட்டைகள் (Padded straps) கொண்ட பைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், பையின் எடையை இரண்டு தோள்களிலும் சமமாகப் பகிர்ந்து போடுமாறு குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

கல்வி என்பது குழந்தையின் அறிவுக்கு மெருகூட்ட வேண்டுமே தவிர, அவர்களின் உடல் ஆரோக்கியத்தைச் சிதைக்க கூடாது. புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பதன் மூலம், நம் குழந்தைகளின் எதிர்காலத்தை ஆரோக்கியமானதாக மாற்ற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதையும் படிங்க:

மருத்துவராகும் மென்பொருட்கள்: உடல்நல கேள்விகளுக்கு AI சொல்லும் பதில்களை நம்பலாமா?

குறைமாத குழந்தையாக பிறந்தவர்கள் கவனத்திற்கு! பிற்காலத்தில் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் - ஆய்வில் தகவல்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.