மாதவிடாய் நின்ற பெண்கள் கவனத்திற்கு: உங்களுக்கான சூப்பர் ப்ரேக்பாஸ்ட் ஐடியாஸ் இதோ!
மாதவிடாய் நின்ற பெண்கள் தங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்த உதவும் காலை உணவுகள் இதோ.

Published : December 11, 2025 at 3:13 PM IST
பெண்கள் வாழ்க்கையில் மாதவிடாய் நிற்கும் காலம் (Menopause) என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாகும். இந்த நேரத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு குறைவதால், உடல் எடை அதிகரித்தல், வெப்ப அலைகள், எலும்பு அடர்த்தி குறைதல் மற்றும் தசை இழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
இந்த காலக்கட்டத்தில் உணவு முறைகளில் கவனம் செலுத்துவது மிகவும் அத்தியாவசியமானது. குறிப்பாக, நமது நாளைத் தொடங்கும் காலை உணவு சத்தானதாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாகவும் இருப்பது மிக முக்கியம் என The Importance of Nutrition in Menopause and Perimenopause—A Review என்ற தலைப்பில் வெளியான ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடலின் வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்தவும், அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும் உதவும், மாதவிடாய் நிற்கும் காலத்திற்கு ஏற்ற, காலை உணவு பரிந்துரைகள் இதோ.
புரதம் மற்றும் நார்ச்சத்தின் முக்கியத்துவம்? மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைவதால், தசை நிறை விரைவாக குறைகிறது. போதுமான புரதத்தை எடுத்துக்கொள்வது தசை இழப்பைத் தடுத்து, எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. மேலும், காலை உணவில் 25 முதல் 30 கிராம் புரதத்தை எடுத்துக்கொண்டால், அது நீண்ட நேரத்துக்குப் பசியைக் கட்டுப்படுத்தி, ரத்த சர்க்கரை அளவைச் சீராக வைக்கிறது.
நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முழு தானியங்கள் மற்றும் விதைகளில் உள்ள நார்ச்சத்து ரத்த சர்க்கரையை நிலைப்படுத்தி, மனநிலை மாற்றங்கள் மற்றும் வெப்ப அலைகளின் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறது.
ஆற்றல் தரும் காலை உணவுகள்!
- இரண்டு முட்டைகள், கீரை, தக்காளி, மஸ்ரூம் போன்றவற்றைச் சேர்த்து ஆலிவ் எண்ணெயில் சமைக்கலாம். இது நிறைவான புரதத்தை வழங்குகிறது.
- சர்க்கரை சேர்க்காத கிரீக் யோகர்ட்டுடன், ஆளி விதைகள், சியா விதைகள், வால்நட்ஸ் மற்றும் பெர்ரி பழங்களைச் சேர்த்து சாப்பிடலாம். இது கால்சியம், புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பால் நிரம்பியது.

- ஓட்ஸை பால் அல்லது சோயா பாலுடன் கலந்து, ஒரு ஸ்கூப் ப்ரோட்டீன் பவுடர் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் பழங்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.
- பருப்பு வகைகளில் இருந்து தயாரிக்கப்படும் தோசை அல்லது அடை சிறந்த தாவர அடிப்படையிலான புரதம் மற்றும் நார்ச்சத்து ஆதாரமாகும்.
- சியா விதைகளைத் தேங்காய் பால் அல்லது பாதாம் பாலுடன் கலந்து, இலவங்கப்பட்டை பொடி தூவி சாப்பிடுவது ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது.
- சைவ உணவுப் பிரியர்களுக்கு, பன்னீர் அல்லது டோஃபுவை காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்து முழு தானிய பிரெட் உடன் சாப்பிடலாம். டோஃபுவில் உள்ள ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் நன்மை பயக்கும்.
- ப்ரோட்டீன் பவுடர், கீரை, வாழைப்பழம், மற்றும் சியா விதைகளை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அருந்துவது அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களைத் தவிர்க்கும்.
- முழு தானிய பிரெட்டின் மேல் அவகாடோவை மசித்து, புகைத்த சால்மன் மீன் மற்றும் எள் விதைகளைச் சேர்த்துச் சாப்பிடுவது ஒமேகா-3 சத்தை அதிகரிக்கும்.
- முழு கோதுமை பிரெட்டின் மேல் பாதாம் அல்லது பீநட் பட்டர் தடவி, ஆப்பிள் துண்டுகளை வைத்து சாப்பிடலாம்.
- வேலைக்குச் செல்லும் பெண்கள் வேகவைத்த முட்டைகள் மற்றும் ஒரு கிண்ணம் பருப்பு சேர்ந்த காய்கறிகள் மிக எளிமையான, ஆனால் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காலை உணவாகும்.
- இந்த உணவு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், மாதவிடாய் காலத்தின் சவால்களைச் சமாளித்து, வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க முடியும்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

