டீ - ஸ்நாக்ஸ் காம்போ: ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா?
அதிகப்படியான எண்ணெயும், டீயில் உள்ள கஃபைன் என்ற வேதிப்பொருளும் ஒன்றாக கலக்கும் போது, அது வயிற்றில் கடுமையான அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு உப்பசம் போன்ற கோளாறுகளை தீவிரமாக்கும்.

Published : July 2, 2026 at 5:20 PM IST
நம்மில் பலருக்கு காலையில் எழுந்தவுடன் ஒரு கப் சூடான டீ குடித்தால்தான் அன்றைய நாளே தொடங்கும். இன்னும் சிலரோ, காலை உணவு முதல் மாலை நேர பலகாரம் வரை எதை சாப்பிட்டாலும் கூடவே ஒரு கப் டீயையும் சேர்த்து குடிப்பார்கள்.
அதுவும் டீ குடிக்கும் போது வெறும் டீயை குடிக்காமல் பிஸ்கட், சமோசா, பக்கோடா போன்ற ஏதேனும் ஒரு ஸ்நாக்ஸ் உடன் சேர்த்து சாப்பிடுவது பலருடைய அன்றாட வாழ்வியல் பழக்கமாகவே மாறிவிட்டது. டீ குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை தந்தாலும், அதனுடன் நாம் சேர்த்து சாப்பிடும் சில உணவுகள் நம் உடலுக்கு பெரிய கெடுதலை ஏற்படுத்துகின்றன என்பது தான் உண்மை.
டீயில் இயற்கையாக உள்ள 'டானின்கள்' மற்றும் 'பாலிபினால்கள்' போன்ற வேதிப்பொருட்கள், நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சவிடாமல் தடுத்து விடுகின்றன என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நாம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலும், டீயுடன் சேர்த்து சாப்பிடும் போது அந்த உணவின் சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்காமல் வீணாகிவிடுகின்றன. எனவே, டீ குடிக்கும் போது எந்தெந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும், இதனால் என்னென்ன ஆரோக்கிய பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்
டீயுடன் சேர்த்து கீரை வகைகள், பருப்புகள், ராஜ்மா, கொண்டைக்கடலை, சோயாபீன்ஸ் போன்ற இரும்புச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை ஒருபோதும் சாப்பிட கூடாது. இந்த உணவுகளை சாப்பிட்ட உடனோ அல்லது சாப்பிடும் போதோ டீ குடிப்பதால், உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சும் திறன் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து செய்து வரும்போது, நீண்ட காலத்தில் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு ரத்தசோகை போன்ற பாதிப்புகள் வரக்கூடும். ஏற்கனவே ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு, அதற்காக இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், அந்த மாத்திரைகளை டீயுடன் சேர்த்து உட்கொள்ள கூடாது. டீ குடிப்பதற்கும், இந்த மாத்திரைகள் அல்லது இரும்புச்சத்து உணவுகளை சாப்பிடுவதற்கும் இடையே குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவெளி இருப்பது மிகவும் அவசியமாகும். அப்போதுதான் உணவின் முழு சத்தும் உடலுக்கு கிடைக்கும்.
எண்ணெயில் பொரித்த பலகாரங்கள்
மாலை நேரத்தில் சூடான டீயுடன் சமோசா, பக்கோடா போன்ற எண்ணெயில் அதிகமாக பொரித்த உணவுகளை சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், இந்த பழக்கம் செரிமான மண்டலத்திற்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. அதிகப்படியான எண்ணெயும், டீயில் உள்ள கஃபைன் என்ற வேதிப்பொருளும் ஒன்றாக கலக்கும் போது, அது வயிற்றில் கடுமையான அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு உப்பசம் போன்ற கோளாறுகளை தீவிரமாக்கும். ஏற்கனவே செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த கலவையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அதிக காரமான உணவுகள் மற்றும் மசாலாக்கள்
அதிக காரம் மற்றும் மசாலாக்கள் நிறைந்த உணவுகளுடன் டீயைகலந்து குடிக்கும் போது, அது வயிற்றில் எரிச்சலையும், 'ஆசிட் ரிஃப்ளக்ஸ்' (வயிற்று அமிலம் நெஞ்சுக்குள் எழும்புதல்) போன்ற அசௌகரியங்களையும் ஏற்படுத்தும். குறிப்பாக மிளகாய், மிளகு கொண்டு தயாரிக்கப்படும் காரசாரமான ஸ்நாக்ஸ்களை டீயுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உள்காயங்கள் மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.
சிட்ரஸ் பழங்கள் மற்றும் கிரீம் உணவுகள்
எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற புளிப்பு சுவை கொண்ட சிட்ரஸ் பழங்களையோ அல்லது அது சார்ந்த உணவுகளையோ டீயுடன் சேர்க்கும் போது வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து வயிறு உப்பசம் ஏற்படும். அதே போல், அதிகப்படியான கிரீம் நிறைந்த சீஸ் கேக், பாஸ்தா, கூல் கே போன்றவற்றை டீ குடிக்கும் நேரத்தில் சாப்பிட்டால், அவை எளிதில் செரிமானம் ஆகாமல் கடுமையான அஜீரண கோளாறுகளை உண்டாக்கும்.
சர்க்கரை மற்றும் பால் பொருட்கள்
அதிகப்படியான சர்க்கரை கொண்ட மிட்டாய்கள், சாக்லேட்டுகள் அல்லது இதர பால் பொருட்களை டீயுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் அதிகரிக்க தொடங்கும். இது உடல் பருமன் மற்றும் இதர உபாதைகளுக்கு காரணமாக அமைந்துவிடும்.
டீ குடிப்பதற்கான சரியான வழிமுறை என்ன?
டீ குடிப்பது தவறல்ல, ஆனால் அதை சரியான நேரத்தில் குடிப்பதே ஆரோக்கியமானது. காலை அல்லது மதிய உணவு சாப்பிட்ட உடனே டீ குடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். உணவிற்கும் டீ குடிப்பதற்கும் இடையே குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும்.
அதாவது, உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்கு பின்போ டீ குடிப்பதே சரியானது. இது நாம் சாப்பிட்ட உணவின் சத்துக்கள் உடலில் முழுமையாக சேருவதை உறுதி செய்யும். மேலும், நாள் முழுவதும் அளவுக்கு அதிகமாக டீ குடிக்காமல், அளவோடு குடிப்பதே உடலுக்கு நல்லது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆய்வு:
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC5093162/
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC5544304/

