ETV Bharat / health

ரத்த சோகையை குணப்படுத்த உதவும் பச்சை பயறு! மொத்த நன்மைகளையும் பெற இப்படி தான் சாப்பிடனும்!

பயறு முளைவிடும்போது, அதிலுள்ள பைடேட்ஸ் குறைந்து, இரும்புச்சத்தை உடல் உறிஞ்சும் தன்மை 30% முதல் 50% வரை அதிகரிக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : March 2, 2026 at 12:57 PM IST

3 Min Read
Choose ETV Bharat

நமது வீடுகளில் காய்ச்சல் என்றாலோ அல்லது உடல்நிலை சரியில்லை என்றாலோ உடனே நினைவுக்கு வருவது பாசிப்பயறு கஞ்சிதான். செரிமானத்திற்கு எளிதானது என்பதால் இதை நாம் காலம் காலமாக பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால், இதே பாசிப்பயறை அப்படியே வேகவைத்து பயன்படுத்துவதை விட, அதை முளைகட்ட வைத்து சாப்பிடும்போது அது ஒரு சத்துக்களின் பெட்டகமாக மாறுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே இன்று பெரும் சவாலாக இருக்கும் ரத்தசோகை (Anemia) மற்றும் அதிகரித்து வரும் இதய பாதிப்புகளுக்கு இது ஒரு மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

அன்றாட உணவில் நாம் சாதாரணமாக கடந்து செல்லும் ஒரு சின்ன மாற்றம், நம் உடலின் ரத்த ஓட்டத்தையும் இதய துடிப்பையும் எப்படி சீராக வைத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

ரத்தசோகையை விரட்டும் முளைகட்டிய பயறு: இந்தியாவில் சுமார் 52% பெண்கள் மற்றும் ஏராளமான குழந்தைகள் ரத்தசோகையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS-5) கூறுகின்றன. பாசிப்பயறில் இரும்புச்சத்து அதிகம் இருந்தாலும், அதில் உள்ள 'பைடேட்ஸ்' (Phytates) எனும் ஒரு பொருள், அந்த இரும்புச்சத்தை உடல் உறிஞ்சவிடாமல் தடுத்துவிடும்.

இங்குதான் 'முளைகட்டுதல்' முக்கிய பங்கு வகிக்கிறது. பயறு முளைவிடும்போது, அதிலுள்ள பைடேட்ஸ் குறைந்து, இரும்புச்சத்தை உடல் உறிஞ்சும் தன்மை 30% முதல் 50% வரை அதிகரிக்கிறது. மேலும், முளைகட்டும் போது அதில் உள்ள வைட்டமின் C அளவு மூன்று மடங்கு உயர்கிறது.

தாவரங்களில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின் C மிக அவசியம். பாசிப்பயறு முளைகள் இவை இரண்டையும் ஒரே நேரத்தில் வழங்குவதால், இது ரத்தசோகைக்கு ஒரு இயற்கை தீர்வாகிறது என்கிறது NIH ஆய்வு. இந்தியர்களுக்கு இதய நோய்கள் மற்ற நாட்டு மக்களை விட ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

இதற்கு ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பு (LDL) மற்றும் குறைந்த அளவு நல்ல கொழுப்பு (HDL) ஆகியவை முக்கிய காரணங்கள். முளைகட்டிய பயறில் உள்ள நார்ச்சத்து, குடலில் உள்ள பித்த அமிலங்களுடன் இணைந்து, கல்லீரல் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பை எடுக்க தூண்டுகிறது.

இதனால் ரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து அடைப்பு ஏற்படுவதை தடுக்கின்றன. இது இதய தமனிகளில் ஏற்படும் 'துரு' போன்ற சேதத்தை தடுத்து மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது.

இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ரத்த நாளங்களின் இறுக்கத்தை தளர்த்தி, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகின்றன. நமது அன்றாட உணவில் நாம் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான உப்பை வெளியேற்றவும் இது துணைபுரிகிறது.

வைட்டமின் B9 மற்றும் பக்கவாதம்: ரத்தத்தில் 'ஹோமோசிஸ்டைன்' எனும் அமினோ அமிலம் அதிகரிப்பது பக்கவாதம் மற்றும் இதய பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். முளைகட்டிய பாசிப்பயறில் உள்ள ஃபோலேட் (வைட்டமின் B9) இந்த அமிலத்தை சிதைத்து, அதன் அளவை கட்டுக்குள் வைக்கிறது. இதனால் மூளை மற்றும் இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதுகாக்கப்படுகிறது.

கவனம் தேவை: பாசிப்பயறு முளைகள் சத்து மிக்கவை என்றாலும், அவற்றைச் சரியான முறையில் சாப்பிட வேண்டியது அவசியம்.

பயறுகளை முளைகட்ட வைக்கும் ஈரப்பதமான சூழல், பாக்டீரியாக்கள் வளரவும் ஏதுவாக இருக்கும். எனவே, பச்சையாகச் சாப்பிடுவதை தவிர்த்து, 2 முதல் 3 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்தோ அல்லது லேசாக வதக்கியோ சாப்பிடுவது 99% கிருமிகளை அழித்துவிடும்.

முளைகட்டும்போது வாயுவை உண்டாக்கும் சர்க்கரையின் அளவு குறையும் என்றாலும், சிலருக்கு இது வயிறு உப்பசம் அல்லது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம். குறிப்பாக அதிகாலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடும்போது இந்த பாதிப்பு வரலாம்.

இதில் புரதம் மற்றும் பொட்டாசியம் அதிகம் என்பதால், ஏற்கனவே நாள்பட்ட சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி இதை அதிக அளவில் உட்கொள்ள கூடாது.

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பச்சையாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வேகவைத்துச் சாப்பிடுவதே அவர்களுக்குப் பாதுகாப்பு.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.