இளம் பெண்களை குறிவைக்கும் மார்பக புற்றுநோய்! 2050ல் 3.5 மில்லியனாக பாதிப்பு அதிகரிக்கும்! தி லான்செட் ஆய்வு எச்சரிக்கை!
இந்திய புற்றுநோய் சங்கத்தின் தரவுப்படி, இந்தியாவில் 28 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Published : March 3, 2026 at 3:29 PM IST
உலக அளவில் பெண்களை பாதிக்கும் மிக முக்கியமான நோய்களில் ஒன்றாக மார்பக புற்றுநோய் உள்ளது. 1990 முதல் 2023 வரையிலான காலகட்டத்தை ஆய்வு செய்து 'லான்செட் ஆன்காலஜி' இதழ் வெளியிட்டுள்ள புதிய தரவுகள், இந்த நோயின் பரவல் மற்றும் உயிரிழப்பு விகிதம் வரும் ஆண்டுகளில் தீவிரமடையும் என்பதை காட்டுகின்றன.
குறிப்பாக, வளர்ந்த நாடுகளை விட இந்தியா போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இதன் தாக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. 2050ம் ஆண்டிற்குள் உலகளாவிய பாதிப்பு 35 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் இந்தியாவின் பங்கு மற்றும் இளவயது பெண்களிடையே அதிகரித்து வரும் பாதிப்பு ஆகியவை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய நிலவரம் என்ன? உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுப்படி, 2022ல் 23 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டது. லான்செட் ஆய்வின்படி, இந்த எண்ணிக்கை 2050ல் 35 லட்சமாக உயரும் என்கிறது. அதேபோல், ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 7.6 லட்சத்திலிருந்து 14 லட்சமாக (44%) அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் கேய்லி பாங்டியா இது குறித்து கூறுகையில், "உயர் வருமானம் கொண்ட நாடுகளில் ஆரம்பக்கட்ட பரிசோதனை வசதிகள் இருப்பதால் உயிரிழப்புகள் கட்டுக்குள் உள்ளன. ஆனால், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் நோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுவதால் மரண விகிதம் அதிகரித்து வருகிறது," எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் மார்பகப் புற்றுநோயின் தீவிரம்: இந்திய புற்றுநோய் சங்கத்தின் தரவுப்படி, இந்தியாவில் 28 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களில் இந்தியாவின் புள்ளிவிவரங்கள் மிக வேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன என்கிறது தரவுக
1990-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-இல் பாதிப்பு எண்ணிக்கை 477.8% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 2.03 லட்சம் நபர்களுக்கு புதிதாக பாதிப்பு பதிவாகியுள்ளன என்கிறது. மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் 352.3% உயர்ந்துள்ளன. 2023-இல் 1.02 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது அடிப்படையில் தரப்படுத்தப்பட்ட புள்ளிவிவரப்படி, ஒரு லட்சம் பெண்களுக்கு 29 புதிய பாதிப்புகள் வீதம் பதிவாகியுள்ளது. இது 1990-ஐ விட 126.9% அதிகம். இதேபோல் மரண விகிதம் கடந்த 30 ஆண்டுகளில் 74% அதிகரித்துள்ளது. இந்தியாவைத் தவிர்த்து லாவோஸ் (214%), வங்கதேசம் (91%), வியட்நாம் (80%) போன்ற நாடுகளிலும் மரண விகிதம் பெருமளவு உயர்ந்துள்ளது.
இளவயதுப் பெண்களிடையே அதிகரிக்கும் பாதிப்பு: ஆய்வின்படி, 55 வயதிற்கு மேற்பட்டோருக்குப் பாதிப்பு அதிகமாக இருந்தாலும், 20 முதல் 54 வயதுக்குட்பட்ட பெண்களிடையே புதிய பாதிப்புகள் 29% அதிகரித்துள்ளது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு முந்தைய நிலையில் இருக்கும் இளவயதுப் பெண்களிடம் இம்மாற்றம் தெரிவது குறிப்பிடத்தக்கது.
சுமார் 25 சதவீத பாதிப்புகளை சரியான வாழ்வியல் மாற்றங்கள் மூலம் தவிர்க்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிகப்படியான சிவப்பு இறைச்சி (Red Meat) உட்கொள்ளுதல், புகையிலை மற்றும் மதுப் பழக்கம், உடல் பருமன் (High BMI) மற்றும் போதிய உடல் உழைப்பு இல்லாமை, ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு ஆகியவை புற்றுநோயை தூண்டும் முக்கிய காரணிகளாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
1990 முதல் 2023 வரை மது மற்றும் புகையிலை தொடர்பான விழிப்புணர்வால் ஓரளவுக்கு முன்னேற்றம் தெரிந்தாலும், உடல் பருமன் மற்றும் சர்க்கரை அளவு தொடர்பான காரணிகளில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை.
ஆய்வாளர்களின் பரிந்துரைகள்: டாக்டர் லிசா ஃபோர்ஸ், "அனைத்து நாடுகளிலும் ஆரம்பக்கட்ட நோயறிதல் வசதிகள் இருக்க வேண்டும். சிகிச்சைக்கான செலவை குறைப்பதும், உலகளாவிய சுகாதார காப்பீட்டில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சையை சேர்ப்பதும் நோயாளிகளை பொருளாதார சுமையிலிருந்து பாதுகாக்கும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

