ETV Bharat / health

சுற்றுச்சூழல் மாசு: கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது ஏன்?

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்கள் மற்றும் வாகன புகை அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : June 30, 2026 at 1:17 PM IST

3 Min Read
Choose ETV Bharat

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி என தன் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களில் காட்டும் அக்கறையை, தன்னை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் விஷயங்களிலும் காட்ட வேண்டியது அவசியமாகும். பொதுவாகவே ஒரு பெண் கர்ப்பமடைந்தவுடன், அவளுக்கு என்னென்ன சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதில் தான் குடும்பத்தினர் கவனத்தை செலுத்துவார்கள்.

ஆனால், நாம் உண்ணும் உணவை தாண்டி, நாம் சுவாசிக்கும் காற்று மற்றும் குடிக்கும் தண்ணீர் மூலமாக உடலுக்குள் செல்லும் சுற்றுச்சூழல் மாசுகள், இன்று வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணியாக மாறியுள்ளன. இந்தியாவின் பல நகரங்களில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், கர்ப்பிணிப் பெண்கள் இந்த சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

காற்றின் மாசு ஏற்படுத்தும் பாதிப்புகள்

நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் பி.எம் 2.5 எனப்படும் மிக நுண்ணிய மாசுகள், கர்ப்பிணிப் பெண்களின் மூச்சுப்பாதை வழியாக உடலுக்குள் சென்று, நஞ்சுக்கொடியை தாண்டி நேரடியாக குழந்தையையும் சென்றடைகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது தாயின் உடலுக்குள் ஒருவித அழற்சி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதன் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இதுமட்டுமல்லாமல், பிரசவ தேதிக்கு முன்பாகவே குழந்தை பிறப்பது, அதாவது குறைப்பிரசவம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றன. இந்த மாசுகள் தாயின் உடல்நிலையை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை தடுத்து, அதன் எதிர்கால ஆரோக்கியத்தையும் பாதிக்க கூடியவை.

பொருட்களில் உள்ள வேதிப்பொருட்களின் ஆபத்து

காற்றில் இருக்கும் மாசு ஒருபுறம் இருக்க, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருக்கும் வேதிப்பொருட்களின் ஆபத்து மறுபுறம் உள்ளது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், வாசனை திரவியங்கள் மற்றும் நாம் பயன்படுத்தும் சில அழகுசாதன பொருட்களில் எண்டோகிரைன் டிஸ்ரப்டிங் கெமிக்கல்ஸ் எனப்படும் உடலின் ஹார்மோன் சமநிலையை கெடுக்கும் வேதிப்பொருட்கள் உள்ளன.

இதனால் தான் கர்ப்பிணி பெண்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். இந்த ரசாயனங்கள் பெண்களின் முட்டை உற்பத்தியின் தரத்தை குறைப்பதோடு, கருவுற்ற முட்டை கர்ப்பப்பையில் சரியாக பதிந்து வளர்வதையும் தடுக்கின்றன. மேலும், தண்ணீரில் கலந்துள்ள கன உலோகங்களும், வீட்டில் நாம் பயன்படுத்தும் ரசாயனங்களும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதை குறைக்கின்றன.

வீட்டு சூழலில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

கர்ப்பிணிகள் தாங்கள் சாப்பிடும் உணவை எந்த அளவுக்கு சோதித்து பார்த்து சாப்பிடுகிறார்களோ, அதே அளவு தங்களை சுற்றியுள்ள வீட்டு சூழலையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். கர்ப்ப காலத்தில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் வீட்டின் சூழலை நச்சுத்தன்மை இல்லாமல் மாற்றுவது.

இதற்கு தினசரி பழக்கவழக்கங்களில் சில எளிய மாற்றங்களை செய்யலாம். பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டி டப்பாக்களில் உணவை வைத்து சூடாக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கண்ணாடி, துருப்பிடிக்காத எஃகு அல்லது செம்பு பாத்திரங்களை பயன்படுத்தலாம். வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் வீரியம் மிக்க ரசாயன திரவங்களை தவிர்த்துவிட்டு, வினிகர் மற்றும் சமையல் சோடா போன்ற எளிய இயற்கை வழிகளை பயன்படுத்தலாம்.

தற்காப்பு மற்றும் உணவு முறைகள்

வெளியே இருக்கும் மாசுகளிலிருந்து தப்பிக்கவும், உடலுக்குள் சென்றுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் சில தற்காப்பு மற்றும் உணவு முறைகளை பின்பற்றலாம். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்கள் மற்றும் வாகனப் புகை அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும் நாட்களில் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. வெளியில் சென்று வீட்டிற்கு வந்த பிறகு, மூச்சு பாதையை சுத்தப்படுத்த வெறும் தண்ணீரில் ஆவி பிடிக்கலாம். இது நாசி பாதையில் தங்கியிருக்கும் தூசுகளை நீக்க உதவும்.

உணவு முறையைப் பொறுத்தவரை, நச்சுக்களால் உடலில் ஏற்படும் ஆக்சிஜனேற்றப் பாதிப்பைத் தடுக்க பெர்ரி பழங்கள், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் மற்றும் மாதுளைபழம் ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். சாதாரண தண்ணீருக்கு பதிலாக செம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீரைக் குடிப்பது மற்றும் லேசான துளசி தேநீர் அருந்துவது உடலுக்கு நல்லது.

ஆய்வு:

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC10843016/

https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0146000523001416

இதையும் படிங்க:

பருவநிலை மாற்றத்தால் நுரையீரலுக்கு ஆபத்தா? ஆய்வு சொல்வது என்ன?

பெண்களை குறிவைக்கும் சர்க்கரை நோய்: அலட்சியப்படுத்தக்கூடாத முக்கிய அறிகுறிகள்!