ETV Bharat / health

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மீன்: யாரும் அறியாத மருத்துவ பயன்கள்!

கர்ப்பிணிப் பெண்கள் சரியான வகை மீன்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது வயிற்றிலுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : April 7, 2026 at 5:19 PM IST

3 Min Read
Choose ETV Bharat

நம்மில் பலருக்கு ஞாயிற்றுக்கிழமை என்றாலே சந்தைக்கு சென்று ஃப்ரெஷ்ஷான மீன் வாங்கி வந்து, மசாலா தடவி வறுத்தோ அல்லது மணக்க மணக்க குழம்பு வைத்தோ சாப்பிடுவது ஒரு அலாதி பிரியம். சூடான சோற்றில் மீன் குழம்பை ஊற்றி சாப்பிடும்போது கிடைக்கும் அந்த திருப்தியே தனி தான். "மீன் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது, மூளைக்கு நல்லது" என்று நம் பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம்.

ஆனால், ருசியையும் தாண்டி மீனில் ஒளிந்திருக்கும் சத்துக்கள் நமக்கே தெரியாமல் நம் உடலை எப்படி காக்கின்றன என்பது பலருக்கு தெரிவதில்லை. மற்ற அசைவ உணவுகளோடு ஒப்பிடும்போது, செரிமானத்திற்கு எளிதானது என்பதாலும், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு இதில் அதிகம் இருப்பதாலும் ஆரோக்கியத்தை விரும்புபவர்களின் முதல் தேர்வாக மீன் இருக்கிறது. ஒரு சாதாரண மீன் உணவில் இவ்வளவு நன்மைகளா என்று நீங்கள் ஆச்சரியப்படும் வகையில், மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் 12 முக்கிய பலன்களை பற்றி இங்கே விரிவாக பார்ப்போம்.

  • உடல் வளர்ச்சிக்கும் திசுக்களின் பழுதுபார்ப்பிற்கும் புரதம் மிகவும் அவசியம். மீனில் உள்ள புரதம் மற்ற இறைச்சிகளை விட மிக எளிதாக உடலில் உறிஞ்சப்படுகிறது. இது குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கும், பெரியவர்களுக்கு தசை வலிமையை தக்கவைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. அன்றாட வேலைகளை செய்ய தேவையான ஆற்றலை இது தடையின்றி வழங்குகிறது.
  • மத்தி, சூரை மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை ரத்தத்தில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றன. இதனால் ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கம் குறைந்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை வெகுவாக குறைத்து இதயத்தை பாதுகாப்பாக வைக்கிறது.
  • மீனில் உள்ள இ.பி.ஏ (EPA) மற்றும் டி.ஹெச்.ஏ (DHA) சத்துக்கள் நினைவாற்றலை அதிகரிக்க செய்கின்றன. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு பாடங்களை கவனிப்பதற்கான கூர்மையான கவனத்தையும், பெரியவர்களுக்கு முதுமையில் ஏற்படும் மறதி நோயை தடுக்கவும் உதவுவதாக NIH ஆய்வு கூறுகிறது. மூளை செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க மீன் ஒரு சிறந்த உணவாகும்.
  • தொடர்ச்சியாக மீன் சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்கள் வறட்சி அடைவது தடுக்கப்படுகிறது. வயது முதிர்வால் ஏற்படும் பார்வை குறைபாடுகளை தடுத்து, கண்பார்வையை தெளிவாக வைத்திருக்க மீன் உதவுகிறது. நவீன காலத்தில் அதிக நேரம் கணினி மற்றும் அலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு இது கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது.
  • மீனில் உள்ள ஒமேகா-3 சத்துக்கள் மனநிலையை சீராக வைக்கும் ஹார்மோன்களை தூண்டுகின்றன. இது மனச்சோர்வு மற்றும் பதற்றத்தைக் குறைக்க உதவுகிறது. வாரத்தில் இரண்டு முறையாவது மீன் சாப்பிடுபவர்கள் மற்றவர்களை விட மன ரீதியாக அதிக உற்சாகமாகவும், அமைதியாகவும் இருப்பதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • நம் உடலில் ஏற்படும் உட்புற வீக்கங்கள் தான் பல நாள்பட்ட நோய்களுக்குக் காரணமாகின்றன. மீன் உணவுகள் இந்த வீக்கங்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டவை. இதனால் மூட்டு வலி மற்றும் தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் குறைகின்றன. நாள்பட்ட நோய்கள் வராமல் தடுக்க மீன் ஒரு இயற்கையான அரணாக அமைகிறது.
  • மீனில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. இவை எலும்புகளை உறுதியாக்க உதவுவதுடன், வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலியை குறைத்து சீராக நடமாட உதவுகின்றன. எலும்புத் தேய்மானத்தை தடுக்கவும் மிக முக்கியமான உணவாகும்.
  • சருமம் மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற விரும்புபவர்களுக்கு மீன் ஒரு வரப்பிரசாதம். இதில் உள்ள நல்ல கொழுப்புகள் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து பளபளப்பைக் கூட்டுகின்றன. மேலும், கூந்தலின் வேர்க்கால்களை வலுப்படுத்தி முடி உதிர்வதை தடுத்து கூந்தலை செழிப்பாக வளர செய்கின்றன.
  • கர்ப்பிணிப் பெண்கள் சரியான வகை மீன்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது வயிற்றிலுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சால்மன் மற்றும் மத்தி போன்ற மீன்கள் பாதுகாப்பானவை. இவை தாய்க்கும் சேய்க்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி ஆரோக்கியமான மகப்பேற்றிற்கு வழிவகுக்கின்றன.
  • மீனில் துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்துகின்றன. அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாப்பதோடு, உடல் எந்நேரமும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் இவை பேருதவி புரிகின்றன.
  • தைராய்டு சுரப்பி சரியாகச் செயல்படச் செலினியம் சத்து மிக அவசியம். மீன் உணவுகளில் இந்த சத்து தாராளமாகக் கிடைப்பதால், இது தைராய்டு ஹார்மோன்களின் அளவைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் உடலின் வளர்சிதை மாற்றம் சீராகி, தேவையற்ற உடல் உபாதைகள் வராமல் தடுக்கப்படுகின்றன.
  • குறைந்த அளவு கலோரிகள் மற்றும் அதிக அளவு புரதம் கொண்ட மீன், எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்குச் சிறந்தத் தேர்வாகும். இதைச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணவைத் தருவதால், தேவையற்ற நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். உடல் எடையைச் சரியாகப் பராமரிக்க மீன் ஒரு சிறந்த டயட் உணவாகும்.
ஒரு சிறு குறிப்பு: மீனை எண்ணெயில் பொரித்துச் சாப்பிடுவதை விட, குழம்பாகவோ அல்லது ஆவியில் வேகவைத்தோ சாப்பிடுவது அதன் முழுச் சத்துக்களையும் பெற உதவும்.

இதையும் படிங்க:

பழத்தில் உப்பு தூவி சாப்பிடுவது நல்லதா..கெட்டதா?

14 நாட்களுக்கு மைதா சாப்பிடாமல் இருக்க தயாரா? இத்தனை நன்மைகள் கொட்டி கிடக்கு!

பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.