ETV Bharat / health

இந்த இரண்டு உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க - எச்சரிக்கும் ஆயுர்வேதம்!

ஆயுர்வேதத்தின்படி தேனை அதிக வெப்பத்தில் சூடாக்கவோ அல்லது சூடான பொருட்களுடன் சேர்க்கவோ கூடாது. தேன் சூடேற்றப்படும்போது அதன் மூலக்கூறு அமைப்பு மாறுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : December 15, 2025 at 5:13 PM IST

2 Min Read
Choose ETV Bharat

நாம் சாதாரணமாக சாப்பிடும் பல உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது சுவையாக இருக்கலாம், ஆனால் ஆயுர்வேதத்தின் பார்வையில் சில உணவு சேர்க்கைகள் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்கிறது. தவறான உணவு சேர்க்கை உடலில் செரிமான மண்டலத்தை பாதித்து, நச்சு பொருட்களை உருவாக்கி, பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

எனவே, நாம் தினசரி வாழ்க்கையில் ஒன்றாக சாப்பிடக்கூடாத ஐந்து உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆயுர்வேதத்தில், ஒவ்வொரு உணவிற்கும் ஒரு தனிப்பட்ட குணம், சுவை மற்றும் செரிமானத்திற்குப் பிந்தைய விளைவு உள்ளது. இந்த குணாதிசயங்கள் ஒன்றுக்கொன்று முரண்படும்போது, உடலில் சமநிலையின்மை ஏற்பட்டு, செரிமானம் பாதிக்கப்படுகிறது.

பால் மற்றும் புளிப்பான பழங்கள்: இது மிகவும் பொதுவான ஆயுர்வேத முரண்பாடுகளில் ஒன்றாகும். பாலை, ஆரஞ்சு, எலுமிச்சை அல்லது பிற புளிப்பான பழங்களுடன் சேர்த்துச் சாப்பிடும்போது உதாரணத்திற்கு, பால் திரண்டுபோகும் வாய்ப்பு உள்ளது.

புளிப்புச் சுவை பால் செரிமானத்தின் வேகத்தை மெதுவாக்கி, வயிற்றில் அதிக அமில உற்பத்தியை தூண்டுகிறது. இதன் விளைவாக நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகளை கூட ஏற்படுத்தும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)

மீன் மற்றும் பால்: மீன் மற்றும் பால் இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொள்வது ஆயுர்வேதத்தில் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு சேர்க்கையாகக் கருதப்படுகிறது. மீன் ஒரு 'வெப்பமான' உஷ்ண வீரியம் கொண்ட உணவு. அதேசமயம் பால் 'குளிர்ந்த' சீத வீரியம் கொண்ட உணவுப் பொருளாகும். இந்த வெப்பநிலையில் உள்ள முரண்பாடு செரிமானத்தை குழப்பி, அதன் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இதன் விளைவாக ரத்தம் அசுத்தமடைதல், அடைப்புகள் ஏற்படுதல் மற்றும் சில தோல் நோய்கள் வருவதற்கு வழிவகுக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தேன் மற்றும் சூடான பானங்கள்: சூடான தேநீரில் அல்லது கொதிக்கும் நீரில் தேனைக் கலந்து குடிப்பது என்பது பலரது வழக்கம். ஆனால், ஆயுர்வேதத்தின்படி தேனை அதிக வெப்பத்தில் சூடாக்கவோ அல்லது சூடான பொருட்களுடன் சேர்க்கவோ கூடாது. தேன் சூடேற்றப்படும்போது அதன் மூலக்கூறு அமைப்பு மாறுகிறது.

அது ஒருவித நச்சுத் தன்மையைப் பெற்று, செரிக்க கடினமான ஒரு பிசின் போன்ற பொருளாக மாறுகிறது. இது உடலின் நுண்ணிய பாதைகளை அடைத்து, நச்சுப் பொருட்களைக் குவித்து, பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். வெதுவெதுப்பான நீரில் மட்டுமே தேன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

தயிர் மற்றும் இறைச்சி: குறிப்பாக இந்தியாவில் தயிரை இறைச்சியுடன் சேர்த்து சமைப்பதுண்டு. ஆனால், ஆயுர்வேதத்தில் இது முரண்பட்ட உணவாகக் கருதப்படுகிறது. தயிர் செரிமானத்திற்கு நேரம் எடுக்கும் ஒரு உணவுப் பொருள். இறைச்சியும் செரிமானத்திற்கு அதிக நேரம் தேவைப்படும் கனமான புரதமாகும். இரண்டையும் இணைக்கும்போது, செரிமான செயல்முறை இன்னும் அதிக சுமையாகிவிடுகிறது. இது அஜீரணம், வீக்கம் வயிற்று வாயு உருவாதலைத் தூண்டுகிறது.

சமைத்த உணவு மற்றும் சமைக்காத உணவு: பலரும் சமைத்த உணவை சாப்பிடுவதற்கு முன் சமைக்காத உணவை சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். உதாரணத்திற்கு, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள் அல்லது பழங்களைச் சாப்பிடுகின்றனர்.

சமைத்த உணவைச் செரிக்க ஒருவிதமான செரிமான அமைப்பு தேவைப்படுகிறது, ஆனால் பச்சையான உணவைச் செரிக்க முற்றிலும் மாறுபட்ட செரிமான அமைப்பு மற்றும் என்சைம்கள் தேவைப்படுகின்றன. இரண்டையும் கலக்கும்போது செரிமானச் செயல்பாடு குழப்பமடைகிறது. இது வாயு, வயிறு உப்புசம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

இந்த முரண்பட்ட உணவுச் சேர்க்கைகளைத் தவிர்ப்பதன் மூலம், நம்முடைய செரிமானத்தை நாம் பாதுகாத்து, உணவு முழுவதுமாகச் செரிமானமாகி, நச்சுகள் சேர்வதைத் தடுக்கிறோம். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உணவுச் சேர்க்கை குறித்த இந்த அறிவைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.