மனநிலைக்கும் வால்நட்ஸிற்கும் என்ன தொடர்பு? தினமும் 1 கைப்பிடி சாப்பிட சொல்லும் புதிய ஆய்வு!
வால்நட்ஸில் உள்ள சில குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் தான் நமது உடலின் உயிரியல் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி மனநிலையை சீராக்க உதவுகின்றன.

Published : October 5, 2026 at 10:50 AM IST
நாம் தினமும் சாப்பிடும் உணவுக்கும் நமது அன்றாட மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை பல்வேறு மருத்துவ ஆய்வுகள் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றன. நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அதுவே நமது உடலையும் மனதையும் தீர்மானிக்கிறது.
அந்த வகையில், மன அழுத்தத்தை குறைத்து, மனநிலையை நேர்மறையாக மாற்றுவதில் வால்நட்ஸ் (Walnuts) எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதை பற்றி சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு விளக்குகிறது.
'ஃபுட் மற்றும் ஃபங்க்ஷன்' (Food & Function) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், தினமும் குறிப்பிட்ட அளவு வால்நட்ஸ் சாப்பிட்டு வரும்போது, அது உடலின் வளர்சிதை மாற்றத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தி மனநிலையை மேம்படுத்த உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆய்வு சொல்வது என்ன?
இளைஞர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தினமும் வால்நட்ஸ் சாப்பிடுவதால் அவர்களுடைய மனநிலையிலும் உடலில் சுரக்கும் வேதிப்பொருட்களிலும் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. 18 வாரங்கள் நடைபெற்ற இந்தச் சோதனையில் 31 ஆரோக்கியமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
- ஆய்வு முறை: பங்கேற்பாளர்கள் 8 வாரங்களுக்குத் தினமும் 40 கிராம் அளவிலான வால்நட்ஸை உணவில் சேர்த்துக்கொண்டனர். மற்றொரு கட்டத்தில், சில வாரங்களுக்கு வால்நட்ஸ் அல்லது பிற நட்ஸ் வகைகளை சாப்பிடாமல் தவிர்த்தனர்.
- மனநிலையில் மாற்றம்: வால்நட்ஸ் சாப்பிட்ட காலத்தில், பங்கேற்பாளர்களின் மனக்கலக்கம், சோர்வு மற்றும் எதிர்மறை எண்ணங்கள் கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்தது.
- செரடோனின் வளர்ச்சி: மனநிலையை சீராக வைத்திருக்க உதவும் 'செரடோனின்' (Serotonin) என்ற ஹார்மோனின் வளர்சிதை மாற்றம் உடலில் அதிகரித்திருந்தது சிறுநீர் மாதிரிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
- குடல் பாக்டீரியாக்களின் பங்கு: வால்நட்ஸில் உள்ள இயற்கை சத்துக்களை குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் செரிமானம் செய்யும்போது, 'உரோலித்தின்' (Urolithins) என்ற பயனுள்ள வேதிப்பொருட்கள் உருவாவது கண்டறியப்பட்டது.
வால்நட்ஸ் மனநிலையை எப்படி உயர்த்துகிறது?
வால்நட்ஸில் உள்ள சில குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் தான் நமது உடலின் உயிரியல் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி மனநிலையை சீராக்க உதவுகின்றன.
- ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: வால்நட்ஸில் 'ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம்' (ALA) என்ற தாவர வகை ஒமேகா-3 நிறைந்துள்ளது. இது நரம்பு மண்டலம் மற்றும் செல்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு பெரிதும் துணைபுரிகிறது.
- டிரிப்டோஃப்பான் (Tryptophan): இது உடலுக்கு தேவையான முக்கியமான அமினோ அமிலம். உடலானது இந்த சத்தை பயன்படுத்திதான் மனநிலையை உயர்த்தும் செரடோனின் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது.
- நாரச்சத்து: வால்நட்ஸில் உள்ள நாரச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குடலில் உள்ள நுண்ணுயிரிகள் ஆரோக்கியமாக இருக்கும்போது, அது மூளையின் செயல்பாட்டிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
- பாலிஃபெனால்கள்: இவை உடலில் உள்ள செல்கள் சேதமடையாமல் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாகச் செயல்படுகின்றன.
செரடோனின் மற்றும் வால்நட்ஸ் தொடர்பு
செரடோனின் என்பது நரம்பு செல்கள் ஒன்றுக்கொன்று தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு முக்கிய வேதிப்பொருள். இது நமது தூக்கம், பசி, மற்றும் மன உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வால்நட்ஸை நாம் உட்கொள்ளும்போது, குடலில் உள்ள பாக்டீரியாக்கள் அதை செரித்து வெளிப்படுத்தும் வேதிப்பொருட்கள், உடலின் செரடோனின் சுழற்சியை ஊக்குவிக்கின்றன. எனினும், இந்த ஆய்வு வால்நட்ஸ் நேரடியாக மூளையில் செரடோனினை உயர்த்துகிறது என்றோ, மன அழுத்த நோய்க்கான நேரடி சிகிச்சை என்றோ கூறவில்லை.
மாறாக, உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சீரமைப்பதன் மூலம் மனநிலையை மேம்படுத்த இது ஒரு நல்ல இயற்கை வழியாக அமைகிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
தினமும் எவ்வளவு வால்நட்ஸ் சாப்பிடலாம்?
ஆய்வில் பயன்படுத்தப்பட்ட அளவின்படி, ஒரு நாளைக்கு சுமார் 40 கிராம் வால்நட்ஸ் (அதாவது ஒரு கைப்பிடி அளவு) சாப்பிடுவது உடலுக்கும் மனதுக்கும் ஏற்றது.
உணவில் சேர்த்துக்கொள்ளும் எளிய வழிகள்:
- காலை உணவாகச் சாப்பிடும் ஓட்ஸ் அல்லது தானியங்களுடன் நறுக்கிய வால்நட்ஸைச் சேர்த்துக்கொள்ளலாம்.
- ழங்கள் அல்லது தயிருடன் கலந்து சாப்பிடலாம்.
- மாலை நேர நொறுக்குத் தீனிக்கு பதிலாக ஒரு கைப்பிடி வால்நட்ஸ் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
- வால்நட்ஸில் கலோரிகள் அதிகம் என்பதால், தினமும் அளவோடு ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தாலே அதிலுள்ள முழுமையான சத்துக்களையும் பெற முடியும்.

