ETV Bharat / health

பெண்கள், சிறுமிகளிடையே ரத்த சோகையை போக்க புதிய பரிசோதனை - ICMR முன்னெடுப்பு!

இந்தியாவில் 57% பெண்களும், சுமார் 59% வளரிளம் பெண்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : January 4, 2026 at 3:24 PM IST

2 Min Read
Choose ETV Bharat

இந்தியாவில் பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் மிக முக்கிய பிரச்சனையாக 'ரத்த சோகை' (Anaemia) உருவெடுத்துள்ளது. சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி (NFHS-5), இந்தியாவில் 57% பெண்களும், சுமார் 59% வளரிளம் பெண்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு தனிநபரின் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, நாட்டின் மனிதவள மேம்பாட்டையும் பாதிக்கிறது.

இந்த சூழலில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் - தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (ICMR-NIN) ஒரு புதிய தீர்வை முன்வைத்துள்ளது. "அனைத்து பெண்களையும் பரிசோதித்து, சிகிச்சை அளித்தல்" (Screen and Treat for Anaemia Reduction - STAR) என்ற இந்த புதிய முன்னெடுப்பு, இந்தியாவிலிருந்து ரத்த சோகையை வேரோடு அகற்ற ஒரு வலுவான ஆயுதமாக அமையும் என இந்த ஆய்வு கூறுகிறது.

STAR வியூகம் என்றால் என்ன? தற்போது நடைமுறையில் உள்ள 'ரத்த சோகை இல்லா இந்தியா' (Anaemia Mukt Bharat) திட்டம், பெரும்பாலும் கர்ப்பிணிப பெண்களை மையப்படுத்தியே உள்ளது. ஆனால், ICMR-NIN பரிந்துரைக்கும் STAR முன்னெடுப்பு, சமூக அளவில் அனைத்து பெண்களையும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று பரிசோதிப்பதை வலியுறுத்துகிறது.

இந்த ஆய்வில், சுமார் 6,131 பேர் வீடு வீடாக சென்று பரிசோதிக்கப்பட்டனர். சிறிய அளவிலான கையடக்க கருவிகளை (Portable auto-analysers) கொண்டு ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு உடனடியாகக் கண்டறியப்பட்டது. ரத்த சோகை உள்ளவர்களுக்கு அதற்கேற்ற தீவிர சிகிச்சையும் (Therapeutic dose), பாதிப்பு இல்லாதவர்களுக்குத் தடுப்பு மருந்துகளும் (Prophylactic dose) அவர்களின் இருப்பிடத்திலேயே வழங்கப்பட்டன.

அதிர்ச்சி தரும் முடிவுகள்: இந்த 'பரிசோதித்து சிகிச்சை அளிக்கும்' முறையினால் ஏற்பட்ட மாற்றங்கள் நம்பிக்கையளிக்கின்றன.

  • வளரிளம் பெண்கள் (10–19 வயது): இவர்களிடையே ரத்த சோகை பாதிப்பு 15.3% வரை குறைந்துள்ளது. மேலும் இவர்களின் சராசரி ஹீமோகுளோபின் அளவு 0.73 g/dL உயர்ந்துள்ளது.
  • இளம் பெண்கள்: குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதில் உள்ள பெண்களிடையே பாதிப்பு 4.4% குறைந்துள்ளது.
  • ஒட்டுமொத்த தாக்கம்: வழக்கமான திட்டங்களை விட, இந்த முறையைப் பின்பற்றிய குழுவில் ரத்த சோகை பாதிப்பு 29.6 சதவீதமாகக் குறைந்தது.

நடைமுறைச் சிக்கல்களும் தீர்வுகளும்! இந்த ஆய்வு ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமில (IFA) மாத்திரைகள் வழங்கப்பட்டாலும், அவற்றை முறையாக உட்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது (சுமார் 32% முதல் 47%).

மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளத் தூண்டும் வகையிலான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், முறையான ஆலோசனைகள் மற்றும் தொடர் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே இந்தத் திட்டத்தின் முழுப் பலனையும் அடைய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஏன் இது முக்கியம்? ரத்த சோகையானது பெண்களின் உடல் வலிமையைக் குறைப்பதுடன், பிரசவ கால சிக்கல்களுக்கும், குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடுகளுக்கும் வழிவகுக்கிறது. ICMR-NIN நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பாரதி குல்கர்னி மற்றும் விஞ்ஞானி ரகு ஆகியோர் கூறுவது போல, இந்த STAR முன்னெடுப்பை தேசிய அளவில் ஒருங்கிணைப்பதன் மூலம், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தி, இந்தியாவின் எதிர்கால மனிதவளத்தை வலுப்படுத்த முடியும்.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.