ETV Bharat / health

பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வர உடல் பருமனே காரணம் - எச்சரிக்கும் அரசு மருத்துவர்!

பள்ளிக் குழந்தைகளுக்கும் 40 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்களுக்கும் ‘டைப் 2’ சர்க்கரை நோய் காணப்படுகிறது என்பது அதிர்ச்சியளிப்பதாக அரசு மருத்துவர் சுப்பையா ஏகப்பன் தெரிவித்துள்ளார்.

சர்க்கரை நோயியல் மருத்துவர் சுப்பையா ஏகப்பன்
சர்க்கரை நோயியல் மருத்துவர் சுப்பையா ஏகப்பன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 16, 2025 at 10:58 PM IST

5 Min Read
Choose ETV Bharat

மதுரை: பள்ளிச் செல்லும் வயதில் உள்ள வளரிளம் பருவத்தினரிடம் மேற்கொண்ட ஆய்வில் உடல் பருமன் காரணமாக சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் கொழுப்பு, சினைப்பை நீர்க்கட்டிகள் தொடர்பான பல்வேறு அறிகுறிகள் தென்படுவதாக எச்சரித்துள்ளார் அரசு மருத்துவர்.

முன்பெல்லாம் பெரியவர்களுக்கு மட்டுமே இருந்த ஒரு தீவிரமான சுகாதாரப் பிரச்சனை, நோய்கள் தற்போது இளம் வயதினரை அதிகளவில் பாதிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதாவது, குழந்தைகளின் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் குறித்த 'தென்னிந்திய மக்கள்தொகையில் குழந்தைப் பருவம் மற்றும் இளம் பருவத்தினரின் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் அதன் தாக்கத்தை நிர்ணயிக்கும் காரணிகள்' (Determinants of Childhood and adolescent obesity and its effect on metabolism in South Indian Population) என்ற தலைப்பிலான சர்வதேச ஆய்வு கட்டுரை வெளியாகி உள்ளது.

மருத்துவர் சுப்பையா ஏகப்பன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

'குழந்தை மருத்துவ நாளமில்லா சுரப்பியியல் இதழ்' (Journal of Pediatrics Endocrinology) என்ற சர்வதேச மருத்துவ இதழில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் சர்க்கரை நோய் பிரிவு எழுதி வெளியிட்டுள்ள இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட பல்வேறு விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளன.

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் சர்க்கரை நோய் துறை தலைவர் மருத்துவப் பேராசிரியர் Dr.சுப்பையா ஏகப்பன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

சர்க்கரை நோய் குழந்தைகள்

அப்போது பேசிய அவர், “10 - 20 வயதுக்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயும் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதுவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளிச் செல்லும் வயதுடையவர்கள் மாதத்திற்கு ஒன்று இரண்டு பேர்தான் சர்க்கரை நோய் பிரிவில் சிகிச்சைக்கு வருவார்கள். தற்போது, நாள்தோறும் இரண்டு அல்லது மூன்று பேர் என்ற விகிதத்தில் 10 முதல் 20 வயதுக்குட்பட்ட வளர் இளம் பருவத்தினர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருவதை காண முடிகிறது. இது ஒரு ஆபத்தான போக்காகும். நமது அடுத்த தலைமுறையினர் சர்க்கரை நோயில் சிக்குண்டு, உடல்நலம் பாதிப்புக்குள்ளாக அதிக வாய்ப்புள்ளது.

மெல்ல கொல்லும் நோய்

இதில் முக்கியமாக கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், குழந்தை பருவத்தில் வருகின்ற சர்க்கரை நோயை மருத்துவத்தில் ‘டைப் 1’ என்று அழைப்போம். இது கணையத்தில் உள்ள பீட்டா செல்களை தாக்கி, அதன் மூலமாக இன்சுலின் மட்டுமே செலுத்தப்பட வேண்டிய ஒருவகை சர்க்கரை நோயாகும். ஆனால், தற்போது நாங்கள் குறிப்பிட விரும்புவது, 10 - 20 வயது வரை உள்ள பள்ளி செல்லும் மாணவ, மாணவியரிடம் காணப்படும் உடற்பருமன், அதையொட்டிய சர்க்கரை நோய் என்பது 40 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்களுக்கு வரும் ‘டைப் 2’ சர்க்கரை நோய் காணப்படுகிறது என்பதுதான்.

ஏனென்றால், ‘சர்க்கரை நோய்’ என்பது ஆங்கிலத்தில் குறிப்பிடுவது போல் மெல்ல மெல்லக் கொல்லும் நோய். அதாவது Silent Killer அல்லது Silent Disease எனப்படும். இது உடல் நலனை பாதிக்கக்கூடிய ஆபத்தான நோய். கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால், 10 - 20 ஆண்டுகளில் உடல் உள்ளுறுப்புகளான இருதயம், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்படும்.

சுமார் 40 வயதுடைய ஒருவருக்கு சர்க்கரை நோய் ஆரம்பித்தால், ஓரளவிற்கு அவர் கட்டுப்பாட்டுடன் இருக்கும் பட்சத்தில் அவர் 60 வயதை தாண்டி வாழமுடியும். ஆனால், 10 முதல் 20 வயது வரை உள்ள வளர் இளம் பருவத்தினருக்கு டைப் 2 சர்க்கரை நோய் ஏற்பட்டால், மிகத் தீவிரமான கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே, 60 வயதை தாண்டி உயிர்வாழ முடியும்” எனக்கூறி அதிர்ச்சியளித்தார்.

ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மேலும் பேசிய அவர், “இதனை அடிப்படையாக கொண்டு மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சர்க்கரை நோய் பிரிவு மருத்துவ கள ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள இரண்டு நகர்ப்புற பள்ளிகள் மற்றும் இரண்டு கிராமப்புறம் சார்ந்த பள்ளிகள் என 4 பள்ளிகள் இந்த ஆய்விற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நான்கு பள்ளிகளிலும் பெரும்பாலும் நடுத்தர பிரிவு மற்றும் குறைவான வருவாய் பிரிவு மாணவர்களே பயில்கின்றனர். கவனிக்க வேண்டியது உயர் வருவாய் பிரிவினர் அல்ல என்பதுதான். ஆகவே இந்த குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வுதான் எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடற்பருமன் அதிகரிப்பு

அதாவது, பள்ளிகளில் 10 - 18 வயதுடைய குழந்தைகள் 3,195 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினோம். இவர்களில் நகர்புறத்தை சார்ந்தோர் 1,631 பேர், கிராமப்புறத்தை சார்ந்தோர் 1,564 பேர் அடங்குவார்கள். இவர்களை பகுப்பாய்வு செய்தபோது, நகர்ப்புறத்தை சார்ந்தோர் 16.1% பேர் சராசரியை விட உடல்எடை கூடுதலாக இருந்தனர். 8.8% பேர் உடல் பருமனோடு காணப்பட்டனர். முறையே கிராமப்புற மாணவர்களிடம், சராசரியை விட கூடுதல் எடை கொண்டோர் 14% ஆகவும், உடற்பருமன் 7.6% ஆகவும் இருந்தது. மேற்கண்ட 14 சதவீத மாணவர்கள் இரண்டு மூன்று வருடங்களில் உடல் பருமனாக வாய்ப்புள்ளது.

குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய்!

இவர்களுக்கு மீண்டும் ரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மேற்கொண்டதில், சராசரி எடைக்கு உட்பட்டு இருந்த மாணவ, மாணவியர் ஒருவருக்கு கூட ரத்த சர்க்கரை அளவு கூடுதலாக இல்லை. ஆனால், உடல் பருமனாக இருந்த மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், 18 சதவீதம் பேருக்கு சராசரியை விட ரத்த சர்க்கரை அளவு கூடுதலாக இருந்தது.

அப்படியானால், இவர்கள் சர்க்கரை வியாதியின் முதல் படியில் இருக்கிறார்கள் என்பதுதான் பொருள். உடல் பருமனான மாணவர்களின் 2 சதவிகிதம் பேருக்கு முழு சர்க்கரை நோய் வந்துவிட்டது. ஆனால், அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை. அக்குழந்தைகளின் பெற்றோரை அழைத்து, சர்க்கரை நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதை தெளிவுபடுத்தி, உடனடியாக சிகிச்சையளிக்க அறிவுறுத்தியுள்ளோம்.

கல்லீரல் கொழுப்பு நோய்

இந்த உடல்பருமன் கொண்ட மாணவர்களிடையே 40% பேருக்கு கல்லீரலில் அதிக கொழுப்பு இருப்பதை அல்ட்ரா சவுண்ட் மூலம் கண்டறிந்தோம். இவர்களில் 34% பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது. உடற்பருமன் உள்ள 20% மாணவர்களுக்கு கொழுப்பு சத்து கூடுதலாக இருந்தது. மாணவிகளில் 31 சதவீதம் பேருக்கு சினைப்பை நீர்க்கட்டி இருப்பதும் கண்டறியப்பட்டது.

ஆனால், சராசரி எடை கொண்ட குழந்தைகளுக்கு சர்க்கரை அளவோ, உயர் ரத்த அழுத்தமோ சரியான அளவில் இருந்தது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சிறு வயது உடற்பருமன், பின்னாளில் சர்க்கரை உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது என்பதுதான். அதனால், பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருந்து, இதை தடுக்க இயக்கமாக செயல்பட வேண்டும்.

நொறுக்கு தீனியும் செல்பேசியும்

ஆகையால் உடற்பருமன் அதை ஒட்டிய சர்க்கரை நோய் இவை அனைத்தும் 10 வயதிலிருந்தே தொடங்குவதற்கு என்ன காரணம்? மேற்கொண்ட ஆய்வில், சராசரி எடை கொண்டவர்களை விட இந்த உடற்பருமன் கொண்டவர்கள் நொறுக்கு தீனி அதிகம் சாப்பிடுவர்களாக உள்ளனர். இதற்காக நிறைய பணம் செலவழிக்க அவசியம் இல்லை. குறைந்த செலவிலேயே தற்போது நொறுக்கு தீனிகள் கிடைக்கிறது. குறிப்பாக, அதிக உப்பு உள்ள பேக்கேஜ்டு ஸ்நாக்ஸ்தான் அதற்கு காரணம். இதனை குழந்தைகள் நாள்தோறும் உட்கொள்கிறார்கள் என்பது வேதனையளிக்கிறது.

இதையும் படிங்க: 20 ஆண்டுகளில் குழந்தைகளிடையே உயர் ரத்த அழுத்தம் இரு மடங்காக உயர்வு! உடல் எடை தான் முக்கிய காரணம் - எச்சரிக்கும் ஆய்வு!

அதுமட்டுமன்றி தொலைக்காட்சி, செல்பேசி ஆகியவற்றை தொடர்ந்து பார்ப்பதும் ஒரு காரணமாக அமைகிறது. அமர்ந்த நிலையிலேயே எப்போதும் இருப்பதும் மற்றொரு காரணமாக உள்ளது. பொதுவாக, இந்த உடற்பருமன் உள்ள குழந்தைகள் வீட்டு வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்வதில்லை. வெளிவிளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்துவதுமில்லை. அதேபோன்று குறிப்பிட்ட குழந்தைகள் பிறந்த போது உள்ள எடையை கேட்டோம். அதுவும் சராசரியை விட கூடுதலாக இருந்தது. அதேபோன்று அவர்களது பெற்றோர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் இருந்ததும் தெரியவந்துள்ளது.

ஆகையால், மிக சிக்கலான இந்த பிரச்சனையை எல்லோரும் கவனத்தில் கொண்டு, வளர் இளம் பருவத்தினரை நொறுக்கு தீனிகளை தவிர்த்து வெளி விளையாட்டுகளுக்கு ஊக்குவிக்க வேண்டும். உடல் நலனுக்கு ஏற்ற பயறு வகைகளை உட்கொள்ள வலியுறுத்துவதும் அவசியம். மொத்த சமுதாயத்தையுமே வாழ்வியல் மாற்றத்திற்கு உட்படுத்த நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் அடுத்து வரும் தலைமுறையினர் இதுபோன்ற உடல் நல பேராபத்திலிருந்து விடுபட செய்ய முடியும்” என அறிவுரை கூறினார்.