பீட்ரூட் அதிகம் விளையும் நாடு எது தெரியுமா? நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க!
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தை சுத்திகரித்து, முகத்திற்கு ஒரு இயற்கையான பொலிவை தருகிறது.

Published : January 7, 2026 at 3:24 PM IST
சமையலில் பீட்ரூட் என்றாலே நம்மில் பலருக்கு முதலில் நினைவுக்கு வருவது அதன் அடர் சிவப்பு நிறமும், லேசான மண் வாசனையும்தான். பல வீடுகளில் குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் கூட இதன் சுவைக்காக இதை ஒதுக்கி வைப்பதை பார்த்திருப்போம். ஆனால், உணவியல் நிபுணர்கள் பீட்ரூட் என்பது ஒரு சாதாரண காய்கறி அல்ல, அது ஒரு 'சூப்பர் ஃபுட்' என்கின்றனர்.
உலகிலேயே பீட்ரூட் உற்பத்தியில் எந்த நாடு முதலிடத்தில் இருக்கிறது தெரியுமா? ரஷ்யாதான். 2024-ஆம் ஆண்டின் சர்வதேச சர்க்கரை நிறுவனம் (ISO) மற்றும் FAO அறிக்கைகளின்படி, உலகிலேயே அதிக அளவில் பீட்ரூட் பயிரிடும் நாடாக ரஷ்யா திகழ்கிறது. அங்குள்ள பரந்த விளைநிலங்களும், குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையும் பீட்ரூட் வளர ஏதுவாக இருக்கிறது.
ரஷ்யர்களின் பாரம்பரிய உணவான 'போர்ஷ்ட்' (Borscht) சூப் முதல் ஊறுகாய்கள், இனிப்புகள் என அவர்களின் அன்றாட வாழ்வில் பீட்ரூட் கலந்துள்ளது. இது சுவையை தாண்டி ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது.

மூளைக்கும் ரத்த ஓட்டத்திற்கும் ஒரு பூஸ்ட்: பீட்ரூட்டில் இயற்கையாகவே 'நைட்ரேட்டுகள்' (Nitrates) அதிக அளவில் உள்ளன. நாம் பீட்ரூட்டை உண்ணும்போது, இந்த நைட்ரேட்டுகள் உடலில் 'நைட்ரிக் ஆக்சைடாக' மாறுகின்றன. இது ரத்த நாளங்களைத் தளர்த்தி, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. சீரான ரத்த ஓட்டம் மூளைக்கு செல்லும்போது, மூளையின் செயல்பாடு மேம்படுவதோடு, முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி போன்ற பிரச்சனைகளும் குறைகின்றன.
கல்லீரல் சுத்திகரிப்பு: இன்றைய காலகட்டத்தில் நாம் உண்ணும் எண்ணெய் பலகாரங்கள் மற்றும் துரித உணவுகளால் கல்லீரல் அதிக வேலைப்பளுவுக்கு உள்ளாகிறது. பீட்ரூட்டில் உள்ள 'பெட்டாலைன்கள்' (Betalains) என்ற வேதிப்பொருள், கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
அவ்வப்போது பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்வது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல் தன்னைத்தானே சுத்திகரிக்கும் செயல்பாட்டை (Detox) வேகப்படுத்தும் என Eat Your Beets: Why They Belong in Your Diet என்ற தலைப்பில் வெளியான் ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியம்: பீட்ரூட்டில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. இது செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணும்போது மலச்சிக்கல் நீங்குவதுடன், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களும் வளர்கின்றன. குடல் ஆரோக்கியமாக இருந்தால், தேவையில்லாத இனிப்பு ஆசை குறைந்து, மனநிலை சீராக இருக்கும்.
பொலிவான சருமம்: அழகான சருமம் என்பது வெறும் க்ரீம்களில் மட்டும் இல்லை, நாம் உண்ணும் உணவிலும் இருக்கிறது. பீட்ரூட்டில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தள்ளிப்போடுகின்றன. இதிலுள்ள இரும்புச்சத்து ரத்தத்தை சுத்திகரித்து, முகத்திற்கு ஒரு இயற்கையான பொலிவை தருகிறது. சில நாடுகளில் இயற்கையான மேக்க பொருளாகவும் பீட்ரூட் சாறு பயன்படுத்தப்படுகிறது.

விளையாட்டு வீரர்களின் தேர்வாக பீட்ரூட்: பீட்ரூட் சாறு குடிப்பதால் உடலின் தாங்கும் திறன் (Stamina) அதிகரிப்பதாக 2021ம் ஆண்டு வெளியான NCBI ஆய்வில் தெரியவந்துள்ளது. இதிலுள்ள நைட்ரேட்டுகள் தசைகள் ஆக்சிஜனை பயன்படுத்தும் திறனை மேம்படுத்துகின்றன. அதனால்தான் பல தடகள வீரர்கள் பயிற்சியின்போது பீட்ரூட் ஜூஸை விரும்பி அருந்துகிறார்கள்.
பீட்ரூட்: ஒரு டிரெண்டிங் உணவு! ஒரு காலத்தில் வெறும் பொரியலாகவும், கூட்டாகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்ட பீட்ரூட், இன்று நவீன சமையலில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
- குழந்தைகளுக்குப் பிடித்தமான சிவப்பு நிற தோசையாக இது இல்லங்களில் பிரபலமாகி வருகிறது. தோசை மட்டுமல்லாமல் பீட்ரூட் தோசையை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
- சர்க்கரைக்கு மாற்றாகவும், இயற்கை நிறமூட்டியாகவும் பீட்ரூட் சாறு பானங்களில் சேர்க்கப்படுகிறது.
- செயற்கையான நிறமூட்டிகள் (Artificial Colors) உடல் நலத்திற்குப் பெரும் தீங்கை விளைவிக்கும் இந்த சூழலில், இயற்கையிலேயே அடர் சிவப்பு நிறத்தைக் கொடுக்கும் பீட்ரூட் ஒரு வரப்பிரசாதம்.
பீட்ரூட்டின் மண் வாசனை சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அதைச் சரியாகச் சமைத்தால் அல்லது மற்ற பழங்களுடன் சேர்த்து ஜூஸாகக் குடித்தால் அதன் சுவையே தனி. ரஷ்யா போன்ற நாடுகள் இதனை ஒரு முதன்மை உணவாக கருதுவதற்குக் காரணம் அதன் அபாரமான மருத்துவ குணங்கள்தான்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

