நிலவேம்பு - கல்லீரலை காக்கும் அருமருந்து!
நவீன வாழ்க்கை முறையில் நாம் உட்கொள்ளும் தேவையற்ற நச்சுகளால் கல்லீரலுக்கு ஏற்படும் சுமையை குறைக்க நிலவேம்பு பெரிதும் துணைபுரிவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Published : February 26, 2026 at 10:46 AM IST
நிலவேம்பு - இந்த வார்த்தையை கேட்டாலே பலருக்கு நாவில் ஒரு கசப்பு உணர்வு வந்து போகும். குறிப்பாக, கரோனா பெருந்தொற்று காலங்களை அவ்வளவு எளிதில் யாரும் கடந்துவிட முடியாது. அந்த நாட்களில் வீதிக்கு வீதி வழங்கப்பட்ட 'நிலவேம்பு குடிநீர்' பலருடைய கசப்பான, ஆனால் ஆரோக்கியமான நினைவலைகளில் ஒன்று.
"அந்த கசப்பான கசாயமா?" என்று இப்போதும் முகம் சுளிப்பவர்கள் உண்டு. ஆனால், அந்த அதீத கசப்புக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மருத்துவக் குணங்கள், குறிப்பாக நம் கல்லீரலை இது எப்படிப் பாதுகாக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை.
நம் முன்னோர்கள் காய்ச்சல் வந்தாலோ அல்லது செரிமான கோளாறு ஏற்பட்டாலோ சட்டென்று நாடிய இந்த மூலிகை, இன்று நவீன அறிவியலாலும் ஒரு சிறந்த 'கல்லீரல் காவலனாக' அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வெறும் காய்ச்சல் மருந்தாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலவேம்பு, உண்மையில் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கல்லீரல் ஆரோக்கியத்தில் எப்படி உதவுகிறது? நமது உடல் ஆரோக்கியத்தில் கல்லீரல் ஒரு முக்கியமான வடிகட்டியாக செயல்படுகிறது. நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று மற்றும் பயன்படுத்தும் மருந்துகள் வழியாக உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றுவது கல்லீரலின் வேலை.
நிலவேம்பு, இந்த நச்சு நீக்கச் செயல்பாட்டை இன்னும் திறம்படச் செய்ய உதவுகிறது. நவீன வாழ்க்கை முறையில் நாம் உட்கொள்ளும் தேவையற்ற நச்சுகளால் கல்லீரலுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க இது பெரிதும் துணைபுரிகிறது. குறிப்பாக, கல்லீரல் வீக்கம் (Hepatitis) போன்ற பாதிப்புகளுக்கு நிலவேம்பு ஒரு சிறந்த மருந்தாகச் செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அடுத்ததாக, நிலவேம்பில் உள்ள 'ஆண்ட்ரோகிராஃபோலைடு' (Andrographolide) போன்ற வேதிப்பொருகள் கல்லீரல் செல்களைப் பாதுகாக்கும் ஒரு கவசமாக செயல்படுகின்றன. மது அருந்துதல், அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்வதால் கல்லீரல் செல்கள் சேதமடைய வாய்ப்புள்ளது.
நிலவேம்பு சாறு இத்தகைய சேதங்களிலிருந்து செல்களைக் காப்பதுடன், கல்லீரலில் ஏற்படும் அழற்சி அல்லது வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது என்கிறது Sciencedirect ஆய்வுதளத்தில் வெளியான ஆய்வு. இது கல்லீரல் பழுதாவதைத் தடுக்கும் ஒரு இயற்கை அரணாக அமைகிறது. செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கும் நிலவேம்பு மிக அவசியம். இது கல்லீரலில் இருந்து பித்தநீர் சுரப்பை தூண்டுகிறது.
பித்தநீர் சரியாகச் சுரந்தால் மட்டுமே நம் உடலில் உள்ள கொழுப்புகள் எளிதாக உடைக்கப்பட்டு, செரிமானம் தடையின்றி நடைபெறும். பித்தநீர் ஓட்டம் சீராக இருக்கும்போது ஒட்டுமொத்த செரிமான மண்டலமும் புத்துயிர் பெறுகிறது. பல நேரங்களில் நமக்கு ஏற்படும் செரிமானக் கோளாறுகளுக்கு அடிப்படைத் தீர்வாக நிலவேம்பு அமைகிறது.
இறுதியாக, நிலவேம்பு உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. உடலில் தேவையற்ற செல்கள் சிதைவடையும் போது ஏற்படும் இந்த அழுத்தம், கல்லீரல் செல்களை அதிகப்படியான வேலை செய்யத் தூண்டி அவற்றைச் சோர்வடையச் செய்யும். நிலவேம்பில் உள்ள இயற்கை நுண் சத்துக்கள் இந்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கல்லீரல் செல்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகின்றன. இது இயற்கை வழங்கிய ஒரு சிறந்த 'ஆன்டி-ஆக்ஸிடன்ட்' மூலிகையாகும்.
எவ்வளவு பயன்படுத்தலாம்? நிலவேம்பு சந்தையில் பல வடிவங்களில் கிடைக்கிறது. இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பொடி, மாத்திரைகள் அல்லது நிலவேம்பு டீ எனப் பல வகைகளில் இதைப் பயன்படுத்தலாம்.
இருப்பினும், ஒரு மூலிகை இயற்கையானது என்பதாலேயே அது அனைவருக்கும் பாதுகாப்பானது என்று கூறிவிட முடியாது என்கிறது ஆய்வுகள். ஒவ்வொருவருடைய உடல்நிலை, அவர்கள் செய்யும் வேலை, அன்றாட உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு ஆகியவற்றை பொறுத்து நிலவேம்பு வேலை செய்யும் விதம் மாறுபடும் என்கிறது Quest Journals தளத்தில் வெளியான ஆய்வு.
நிலவேம்பின் தரமும், அது உடலில் எந்த அளவு உறிஞ்சப்படுகிறது என்பதும் மிக முக்கியம். எனவே, ஒரு ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி உங்களுக்கேற்ற அளவைத் தீர்மானிப்பதே சிறந்தது. சுயமாக மருந்துக் கடைகளில் வாங்கித் தொடர்ந்து பயன்படுத்துவது சில நேரங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். குறிப்பாக, ஏற்கனவே வேறு நோய்களுக்கு மருந்து எடுப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
பக்கவிளைவுகள் என்னென்ன?: எந்த ஒரு இயற்கை மருத்துவத்திலும் சில பக்கவிளைவுகள் இருக்கவே செய்கின்றன. நிலவேம்பை தவறான அளவிலோ அல்லது நீண்ட காலமோ பயன்படுத்தும்போது குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றில் அசௌகரியம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். ஒரு சிலருக்குத் தோல் அரிப்பு அல்லது தடிப்புகள் போன்ற ஒவ்வாமை எதிர்வினைகளும் உண்டாக வாய்ப்புள்ளது.
மிக முக்கியமாக, நிலவேம்பு கல்லீரலில் மருந்துகள் வளர்சிதை மாற்றம் அடையும் முறையை மாற்றியமைக்கக்கூடும். இதனால் நீங்கள் ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மற்ற மருந்துகளின் வீரியம் கூடலாம் அல்லது குறையலாம்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

