ETV Bharat / health

நீரிழப்பு முதல் மலச்சிக்கல் வரை ஏற்படுத்தும் சர்க்கரை பானங்கள்! எச்சரிக்கும் ஆய்வு!

சர்க்கரை உட்கொள்ளல் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், செரிமான மண்டலத்தை மெதுவாக்குவது மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : December 14, 2025 at 11:57 AM IST

3 Min Read
Choose ETV Bharat

சர்க்கரை நிறைந்த உணவு என்றாலே, உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஆகிய இரண்டு முக்கிய ஆபத்துகள் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், நாம் அதிகமாக உட்கொள்ளும் சர்க்கரை, குறிப்பாக சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், நமது செரிமான மண்டலத்தை மெதுவாக்கி, உடலின் நீர்வளத்தை கடுமையாக பாதிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சர்க்கரை அதிகம் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் இந்த தாக்கத்தை பற்றி யாரும் தெரிந்திருக்கவில்லை. அந்த வகையில், அதிக சர்க்கரை உட்கொள்ளல் எவ்வாறு நீரிழப்பு மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது என்பதையும், இதை எவ்வாறு தடுப்பது என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)

நீரிழப்புக்கு வழிவகுத்தல்: அதிக சர்க்கரை உட்கொள்ளும் போது, ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இந்த அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற, சிறுநீரகங்கள் அதிக தண்ணீரைப் பயன்படுத்தி சிறுநீரை உருவாக்குகின்றன. இதனால் இயல்பை விட அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக, உடலில் இருந்து அதிக நீர் வெளியேறி, ஒட்டுமொத்த உடல் நீரிழப்புக்கு உள்ளாகிறது.

குடல் இயக்கத்தை மெதுவாக்குதல்: அதிக சர்க்கரை உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை நாம் எடுத்துக் கொள்ளும்போது, இயல்பாகவே நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உட்கொள்வது குறைகிறது. நார்ச்சத்து இல்லாததால், மலத்தின் அளவு குறைகிறது, இதனால் பெருங்குடல் மலத்தை வெளியேற்ற கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.

குடல் சமநிலையில் பாதிப்பு: குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிக சர்க்கரை சீர்குலைக்கிறது. மேலும், உறிஞ்சப்படாத சர்க்கரைகள், குறிப்பாக ஃப்ரக்டோஸ் (Fructose), செரிமானத்திற்குத் தேவையான சரியான சூழலை குடலில் மாற்றி அமைத்து, மலம் முன்னோக்கி நகரும் இயக்கத்தைத் (Coordinated Contractions) தடுக்கிறது.

சர்க்கரை பானங்கள் ஏன் மிகவும் ஆபத்தானவை? அதிக சர்க்கரை உள்ள திட உணவுகளை விட, சர்க்கரை பானங்கள் செரிமான மண்டலத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கின்றன என Rehydration with soft drink-like beverages exacerbates dehydration and worsens dehydration-associated renal injury என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • பானங்கள் மிகக் குறைந்த நேரத்தில் அதிக அளவு சர்க்கரையை உடலுக்குள் செலுத்தி, ரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்துகின்றன, இதனால் சிறுநீர் கழிப்பு அதிகரிக்கிறது.
  • இவற்றில் நார்ச்சத்து அறவே இல்லாததால், செரிமானத்திற்கு எந்த உதவியும் இருப்பதில்லை.
  • ஒரு பாட்டில் குளிர்பானம் அல்லது பாக்கெட் பழச்சாறிலேயே, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் தினசரி சர்க்கரை வரம்பான 25 கிராமை எளிதில் தாண்டிவிடுகிறது.

யார் அதிக ஆபத்தில் உள்ளனர்?

குழந்தைகள்: சர்க்கரை வெளிப்பாடு அதிகம், நார்ச்சத்து உட்கொள்ளல் குறைவு.

மூத்த குடிமக்கள்: குடல் இயக்கம் மெதுவாக இருப்பதுடன், அவர்களுக்கு தாக உணர்வு குறைவாக இருக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)

நீரிழிவு நோயாளிகள்: சிறுநீர் வழியாக அதிக திரவத்தை இழப்பதால், நீரிழப்பு ஆபத்து அதிகம்.

தடுப்பது எப்படி? சர்க்கரையின் இந்த எதிர்மறை விளைவுகளைத் தவிர்ப்பது மிகவும் எளிது. நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரையை குறைத்து, நீர் மற்றும் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரித்த 2 முதல் 3 நாட்களிலேயே செரிமானத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். ஒரு சில வாரங்களில் குடல் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பலாம்.

  • ஒரு நாளைக்கு 25 கிராமுக்கு கீழ் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்கவும்.
  • குளிர்பானங்கள், டின் ஜூஸ்கள் ஆகியவற்றுக்குப் பதிலாகத் தண்ணீர், மோர் போன்றவற்றை அருந்தவும்.
  • நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யவும்.
  • பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றில் இருந்து அதிக நார்ச்சத்தை உணவில் சேர்க்கவும்.
  • பழச்சாறுகளுக்குப் பதிலாக முழுப் பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் நார்ச்சத்தை முழுமையாகப் பெறலாம்.

சர்க்கரையை கட்டுப்படுத்துவது, நீர்வளத்தை அதிகரிப்பது, மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை மையப்படுத்துவது ஆகிய இந்த மூன்று எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் குடலை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.