ETV Bharat / health

இந்த சிவப்பு கேரட்டை பார்த்துருக்கீங்களா? என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

விதையை விதைத்த பிறகு, மண்ணின் வெப்பநிலை குறைவாக இருக்கும்போது தான் இந்த வகை கேரட்டுகள் அதன் அடர் சிவப்பு நிறத்தையும், அதிகப்படியான இனிப்பு சுவையையும் பெறுகின்றன.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : January 9, 2026 at 5:22 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சந்தைக்கு செல்லும்போது வழக்கமான ஆரஞ்சு நிற கேரட்டுகளுக்கு இடையே, ரத்தம் போன்ற அடர் சிவப்பு நிறத்தில் நீளமாக சில கேரட்டுகளை பார்த்திருப்போம். "இது என்ன புதுசா இருக்கே?" என்று நம்மில் பலரும் யோசித்திருப்போம். வட இந்தியாவில் 'காஜர்' (Gajar) என்று அழைக்கப்படும் இந்த சிவப்பு கேரட்டுகள், வெறும் நிறத்தில் மட்டுமல்ல, சுவையிலும் சத்திலும் கூட தனித்துவமானவை.

குறிப்பாக குளிர்காலங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த வகை கேரட்டுகள், நம் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம். ஆனால், தமிழகத்தில் இந்த வகை கேரட்டுகளை சில சூப்பர் மார்க்கெட்டில் மட்டும் தான் பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் என்ன? சாதாரண கேரட்டிற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

சாதாரண கேரட் vs சிவப்பு கேரட்: நிறத்தை பார்த்தே இவை இரண்டையும் பிரித்துவிடலாம் என்றாலும், உள்ளுக்குள் இருக்கும் சத்துக்களே இவற்றின் உண்மையான அடையாளம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆரஞ்சு நிற கேரட்டுகளில் 'பீட்டா கரோட்டின்' (Beta-carotene) அதிகம். இது நம் உடலில் வைட்டமின் A-வாக மாறுகிறது. ஆனால், சிவப்பு கேரட்டில் (காஜர்) 'லைகோபீன்' மற்றும் 'ஆந்தோசயனின்' ஆகிய சத்துக்கள் அதிகம். இவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஆரஞ்சு கேரட் சற்று மொறுமொறுப்பாகவும், லேசான இனிப்புடனும் இருக்கும். ஆனால், சிவப்பு கேரட் அதிக இனிப்பு தன்மை கொண்டது. இதனால்தான் வட இந்தியாவில் புகழ்பெற்ற 'காஜர் கா ஹல்வா' செய்ய இந்த வகை கேரட்டையே பயன்படுத்துகிறார்கள். ஆரஞ்சு கேரட் ஆண்டு முழுவதும் கிடைப்பதால் சாலட் மற்றும் சமையலுக்கு பயன்படுகிறது. சிவப்பு கேரட் அதன் தனித்துவமான சுவைக்காக ஜூஸ் மற்றும் இனிப்புகள் செய்ய அதிகம் விரும்பப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)

குளிர்காலத்தில் மட்டுமே கிடைப்பது ஏன்? சிவப்பு கேரட்டுகள் விளைவதற்கு தனித்துவமான சீதோஷ்ண நிலை தேவை. இவை பொதுவாக குளிர்காலப் பயிர்கள். விதையை விதைத்த பிறகு, மண்ணின் வெப்பநிலை குறைவாக இருக்கும்போது தான் இந்த வகை கேரட்டுகள் அதன் அடர் சிவப்பு நிறத்தையும், அதிகப்படியான இனிப்பு சுவையையும் பெறுகின்றன. வட இந்தியாவில் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நிலவும் கடும் குளிரே இவற்றின் வளர்ச்சிக்கு உகந்தது. கோடை காலத்தில் இவை விளைந்தால், அதன் தரம் மற்றும் சுவை மாறிவிடும்.

தமிழகத்தில் ஏன் இவை அதிகம் கிடைப்பதில்லை? தமிழகம் வெப்பமண்டலப் பகுதி. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் கேரட் விளைந்தாலும், அங்கு நிலவும் காலநிலை ஆரஞ்சு வகை கேரட்டுகளுக்கே அதிகம் ஒத்துப்போகிறது. காஜர் விளைவதற்குத் தேவைப்படும் மிகக் கடுமையான குளிர் நிலப்பரப்பில் தமிழகத்தில் குறைவு.

தமிழக சமையலில் சாம்பார், பொரியல் அல்லது கூட்டு செய்யும்போது காய்கறிகள் குழையாமல் இருக்க வேண்டும். சிவப்பு கேரட் சமைக்கும்போது விரைவில் குழைந்துவிடும் மற்றும் உணவின் நிறத்தை மாற்றிவிடும். இதனால் மக்கள் ஆரஞ்சு கேரட்டையே அதிகம் விரும்புகின்றனர். இருப்பினும், தற்போது கேரட் ஜூஸ் மற்றும் ஹல்வா மீதான மோகத்தால் நகரங்களில் இதன் வரத்து அதிகரித்துள்ளது.

காஜர் (சிவப்பு கேரட்) தரும் ஆரோக்கிய நன்மைகள்:

  • இதில் உள்ள லைகோபீன் சத்து இதயத் தமனிகளைப் பாதுகாத்து ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது.
  • இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டவை.
  • மற்ற கேரட்டுகளைப் போலவே இதிலும் வைட்டமின் A மற்றும் லூடின் (Lutein) இருப்பதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது.
  • குளிர்காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களை எதிர்க்கும் வைட்டமின் C இதில் தாராளமாக உள்ளது.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.