தலைமுறை தாண்டும் மரபணு பாதிப்புகள்: சொந்த பந்த திருமணங்கள் தரும் ஆபத்து!
திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, ஜாதகப் பொருத்தத்தையும், சொத்துப் பொருத்தத்தையும் தாண்டி, இருவரின் 'மருத்துவப் பொருத்தம்' (Genetic Compatibility) எப்படி இருக்கிறது என்று பார்ப்பது அவசியம்.

Published : June 30, 2026 at 5:23 PM IST
"மாமன் மகளை கட்டிக்கிட்டா மாளிகை கட்டி வாழலாம்", "அத்தை மகளை முடிச்சா ஆயுசுக்கும் நிம்மதி" – நம் வீட்டுத் திண்ணைப் பேச்சுகளிலும், சினிமாக்களிலும் இத்தகைய வரிகளை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். குடும்பப் பாசம் பிரிந்துவிடக் கூடாது, சொத்து கைமாறிவிடக் கூடாது என்ற எண்ணத்தில், பல தலைமுறைகளாக நம் ஊர்களில் 'சொந்தத்தில் திருமணம்' செய்யும் வழக்கம் இயல்பான ஒன்றாகவே தொடர்கிறது.
ஆனால், பாசத்தின் பெயரால் நாம் தொடரும் இந்த வழக்கம், நம் அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்தையே மெல்ல பாதிக்கும் விஷயமாக மாறி வருகிறது என்பதுதான் கசப்பான உண்மை. சமீபத்தில், ஐரோப்பிய நாடான ஸ்வீடன் ஒரு வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. வரும் ஜூலை 1 முதல் அங்கு நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் செய்வதற்கு (Cousin Marriages) முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வற்புறுத்தலால் நடக்கும் திருமணங்களைத் தடுக்கவும், பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் ஒரு வளர்ந்த நாடு இந்த விவகாரத்தை இவ்வளவு தீவிரமாகப் பார்க்கிறது. ஆனால், உலகிலேயே அதிகளவில் ரத்த உறவுத் திருமணங்கள் நடக்கும் நம் இந்தியாவிலோ, இதன் தீவிரத்தைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை. தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உடல்நலக் குறைபாடுகளுக்குத் தாங்கள் கொண்டாடிய 'சொந்த பந்தத் திருமணம்' தான் காரணம் என்பது தெரியாமல், இன்றும் பல குடும்பங்கள் விதியின் மீது பழி போட்டு வருந்துவதை நாம் பார்க்க முடிகிறது.
அன்பான உறவுகளும், அறியாத ஆபத்துகளும்
நம் சமூகத்தில், குறிப்பாக தென்னிந்தியாவில், அக்காள் மகள், அத்தை மகன் அல்லது மாமன் மகளை திருமணம் செய்வது என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல, அது ஒரு பாதுகாப்பான உணர்வை தரும் விஷயமாக கருதப்படுகிறது. "தெரிந்த இடம், நமக்கு நல்லாப் புரிஞ்சுக்குவாங்க" என்கிற அந்த எண்ணம், அதன் பின்னால் இருக்கும் மருத்துவ ரீதியான பாதிப்பை மறைத்துவிடுகிறது.
அறிவியல் பூர்வமாக பார்த்தால், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரே மாதிரியான மரபணுக்களை (Genes) தான் அதிகம் பகிர்ந்து கொள்கிறார்கள். இதில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில பலவீனமான மரபணுக்களும் அடங்கும். முன்பின் தெரியாத இருவர் திருமணம் செய்யும்போது, ஒருவரிடம் இருக்கும் பலவீனமான மரபணுவை, மற்றவரின் ஆரோக்கியமான மரபணு சரிசெய்துவிடும். ஆனால், ஒரே ரத்த உறவுக்குள் திருமணம் நடக்கும் போது, இருவரிடமும் இருக்கும் அதே பலவீனமான மரபணுக்கள் ஒன்று சேர்ந்துவிடுகின்றன. இதுவே பிறக்கும் குழந்தைகளுக்குப் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படக் காரணமாக அமைந்துவிடுகிறது.
குண்டக்கல் நிகழ்வு காட்டும் உண்மை
சொந்தத்தில் திருமணம் செய்வதால் பச்சிளம் குழந்தைகள் எப்படிப்பட்ட அரிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது என்பதற்குச் சமீபத்தில் ஆந்திர மாநிலம் குண்டக்கல் நகரில் நடந்த ஒரு நிகழ்வே சாட்சி. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு தம்பதிக்குக் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் அது பெண் குழந்தை என்று கூறப்பட்ட நிலையில், குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காகக் கர்னூல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு நடத்தப்பட்ட விரிவான பரிசோதனையில், அது பெண் குழந்தை அல்ல, ஆண் குழந்தை என்பது தெரியவந்தது. மருத்துவ உலகில் லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரக்கூடிய 'கான்ஜெனிட்டல் அட்ரினல் ஹைப்பர் பிளாசியா' (CAH) என்ற அரிய குறைபாடு அந்தக் குழந்தையைத் தாக்கியிருந்தது. இதனால் பிறப்பின் போதே பிறப்புறுப்புகள் சரியாக வளர்ச்சியடையாமல் மாறுபட்டுக் காணப்பட்டன.
மருத்துவர்கள் இந்தக் குறைபாட்டிற்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டது, குழந்தையின் பெற்றோர் இருவரும் நெருங்கிய சொந்தக்காரர்கள் என்பதுதான். சொந்தத்தில் திருமணம் செய்யும்போது, உடலின் அடிப்படை வளர்ச்சியிலேயே இத்தகைய சிக்கல்கள் வரக்கூடும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
மருத்துவ உலகிலும் தொடரும் மௌனப் போராட்டம்
கிராமப்புறங்களில் மட்டுமல்ல, மருத்துவப் பின்னணி கொண்ட குடும்பங்களில்கூட இத்தகைய விழிப்புணர்வு இன்னும் முழுமையாக போய் சேரவில்லை என்பதை இணையத்தில் 'Doctor Pal' என்று பிரபலமாக இருக்கும் டாக்டர் பழனிசாமியின் சொந்த வாழ்க்கைப் பகிர்வு நமக்குக் காட்டுகிறது. எப்போதும் நகைச்சுவையோடும் எளிமையோடும் ஆரோக்கியக் குறிப்புகளை வழங்கும் அவர், தனது மனைவியின் தொடர் கருக்கலைப்புப் பற்றிப் பேசிய விஷயங்கள் பலரையும் சிந்திக்க வைத்தன.
நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, திருமணத்திற்குப் பிறகு அத்தனை எளிதாகக் குழந்தை செல்வம் கிடைத்துவிடவில்லை. அவரது மனைவிக்கு அடுத்தடுத்து என மொத்தம் ஆறு முறை கருக்கலைப்பு (Miscarriages) ஏற்பட்டது. ஒரு மருத்துவராக இருந்தும், ஏன் இப்படி நடக்கிறது என்று ஆராய்ந்த போதுதான் அதிர்ச்சியூட்டும் உண்மை தெரியவந்தது என டாக்டர் பால் யூடியூப்பில் தெரிவித்துள்ளார். அவரும் அவரது மனைவியும் ஒரே மாதிரியான குறைபாடுள்ள மரபணுக்களைப் பகிர்ந்து கொண்டதுதான் இந்த தொடர் கருக்கலைப்பிற்கு காரணம்.
"எங்களுடைய மரபணுக்களில் தான் தவறு இருந்தது என்பதை உணர்ந்த தருணம் மிகவும் கடினமானது" என்கிறார். அதன் பிறகு, 'Pre-implantation Genetic Testing' (PGT) போன்ற நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தின் உதவியோடு, ஆரோக்கியமான கருவைத் தேர்ந்தெடுத்துப் பொருத்திய பிறகே அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. நவீன வசதிகள் இருந்ததால் அவர்களால் தீர்வைக் கண்டறிய முடிந்தது, ஆனால் சாதாரணக் குடும்பங்களின் நிலை என்ன?
காரணம் தெரியாமல் தவிக்கும் குடும்பங்கள்
இந்தியாவில் இன்றும் பல குடும்பங்களில் குழந்தைகள் ஏதேனும் ஒரு குறைபாட்டுடன் பிறக்கும்போது, அதற்கு பின்னால் இருக்கும் மருத்துவக் காரணத்தை யாரும் யோசிப்பதே இல்லை. விதி தான் என்று நினைத்து கொள்கிறார்களே தவிர, தங்களின் திருமண முறைதான் அதற்கு காரணம் என்பதை புரிந்துகொள்வதில்லை.
சிலர், "எங்கள் குடும்பத்தில் பலரும் சொந்தத்தில் தான் திருமணம் செய்தார்கள், அவர்களுக்கு நன்றாகத்தானே குழந்தை பிறந்தது?" என்று கேட்கலாம். மருத்துவ அறிவியல் இதற்கு என்ன சொல்கிறது என்றால், முதல் தலைமுறையில் இந்த பாதிப்பு வெளியே தெரியாவிட்டாலும், அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்த ஆபத்தான மரபணுக்கள் ஒன்று சேர்ந்து, பிற்காலத்தில் பிறக்கும் பிள்ளைகளை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.
நெருங்கிய உறவுத் திருமணங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் முக்கியப் பாதிப்புகள்:
- அரிய ரத்த நோய்கள்: தலாசீமியா போன்ற வாழ்நாள் முழுதும் ரத்தம் செலுத்த வேண்டிய நோய்கள் ஏற்படலாம்.
- வளர்ச்சிக் குறைபாடுகள்: பிறவிலேயே பார்வையின்மை, காது கேளாமை அல்லது இதயத்தில் ஓட்டை போன்ற பாதிப்புகள் வரலாம்.
- மூளை வளர்ச்சி குறைபாடு: குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் மூளை வளர்ச்சி இயல்பான நிலையை விடக் குறைய வாய்ப்புள்ளது.
மாற்றத்திற்கான வழி என்ன?
ஸ்வீடன் போன்ற நாடுகள் சட்டத்தின் மூலம் இதற்கு தடை விதித்துவிட்டன. ஆனால், கலாச்சாரப் பிணைப்புகள் அதிகம் உள்ள இந்தியாவில், ஒரே நாளில் சட்டத்தை கொண்டு வந்துவிட முடியாது. சட்டம் இயற்றுவதை விட, மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துவதே இதற்கான நிரந்தரத் தீர்வாகும்.
திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, ஜாதகப் பொருத்தத்தையும், சொத்துப் பொருத்தத்தையும் தாண்டி, இருவரின் 'மருத்துவப் பொருத்தம்' (Genetic Compatibility) எப்படி இருக்கிறது என்று பார்ப்பது அவசியம். திருமணத்திற்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை (Pre-marital Screening) மூலம் இதனை எளிதாகக் கண்டறியலாம்.
பாசத்தின் பெயரால் நம் எதிர்காலச் சந்ததியினரின் ஆரோக்கியத்தை ஆபத்தில் தள்ளாமல் இருப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் ஆகச்சிறந்த நன்மையாகும்.
ஆய்வு:

