2030க்குள் 90% பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி - நோயை ஒழிக்க WHO முன்னெடுப்பு!
2030ம் ஆண்டிற்குள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை முற்றிலும் ஒழிக்க 90% பெண் குழந்தைகளுக்கு 15 வயதிற்குள் முழுமையாக தடுப்பூசி போடுவது என்ற இலக்கை உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

Published : January 8, 2026 at 3:04 PM IST
பெண்களின் உயிருக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது 'கர்ப்பப்பை வாய் புற்றுநோய்'. ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரப்படி, உலகில் ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ஒரு பெண் இந்த நோயினால் உயிரிழக்கிறார் என தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் உலக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.
புற்றுநோய்களில் மிகவும் எளிதாக தடுக்கக்கூடிய மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்தக்கூடிய ஒரு நோய், ஏன் இத்தனை பெண்களின் உயிரை பறிக்கிறது? என்ற கேள்விக்கு இது ஒரு மருத்துவ பிரச்சனை மட்டுமல்ல, சமூக பிரச்சனையும் கூட என்கிறார் மகப்பேறு மருத்துவர் சுவஸ்தி சர்மா.
"விழிப்புணர்வு இல்லாமை, தடுப்பூசி போடுவதில் உள்ள தயக்கம் மற்றும் முறையான பரிசோதனை செய்து கொள்ளாதது போன்ற காரணங்களால் இழப்பு ஏற்படுகிறது. புற்றுநோய் என்றாலே மரணம் என்ற பயத்தை தாண்டி, அதை தடுப்பதற்கான வழிகளை நாம் எதார்த்தமாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்" எனவும் வலியுறுத்துகிறார்.
January is cervical cancer awareness month!
— World Health Organization (WHO) (@WHO) January 1, 2026
Did you know?
Cervical cancer could be the first cancer EVER in the world to be eliminated, if:
9️⃣0️⃣% of girls are vaccinated
7️⃣0️⃣% of women are screened
9️⃣0️⃣% of women with cervical cancer receive treatment#EndCervicalCancer pic.twitter.com/csvaPJq771
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது பெண்ணின் கருப்பையின் கீழ் பகுதியான, யோனி பகுதியுடன் இணையும் 'சர்விக்ஸ்' (Cervical) எனப்படும் குறுகிய இடத்தில் உருவாகிறது. இது இனப்பெருக்க உறுப்புகளை சார்ந்த புற்றுநோய் வகையாகும். இதை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், அது உடலின் அண்டை திசுக்களுக்கும் மற்ற உறுப்புகளுக்கும் மிக வேகமாக பரவிவிடும்.
உலகளவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இது நான்காவது இடத்தில் உள்ளது. 2022-ஆம் ஆண்டு மட்டும் சுமார் 6,60,000 பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், அவர்களில் 3,50,000 பேர் உயிரிழந்திருப்பதும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த நோய் மிகவும் தீவிரமானது என்பதற்காக உயிர்கள் பறிபோவதில்லை என்றும், மாறாக, இதற்கான தடுப்பூசிகள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் உலகின் அனைத்து பகுதி பெண்களுக்கும் சமமாக கிடைப்பதில்லை என்பதே உண்மை என்கிறது WHO.
வளர்ந்த நாடுகளில் முறையான பரிசோதனைகள் மூலம் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு உயிர்கள் காக்கப்படுகின்றன. ஆனால், ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில், நோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறது. இதனால் சிகிச்சை பலனின்றி மரணங்கள் நிகழ்கின்றன என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
HPV வைரஸின் பங்கு என்ன? கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு மிக முக்கியமான காரணம் HPV (Human Papillomavirus) எனப்படும் வைரஸ் தொற்று ஆகும். இது உடலுறவின் மூலம் பரவக்கூடிய மிகவும் பொதுவான வைரஸ்.
பாலியல் ரீதியாக செயல்படும் பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. பல சமயங்களில், நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே இந்த வைரஸை தானாகவே அழித்துவிடும். எவ்வித அறிகுறிகளும் இன்றி இது சரியாகிவிடும்.
ஆனால், சில குறிப்பிட்ட வகை அபாயகரமான HPV வைரஸ்கள் உடலில் நீண்ட காலம் தங்கிவிடும்போது சிக்கல் உருவாகிறது. இந்த தொற்று நீடிக்கும்போது, அவை கருப்பை வாயில் உள்ள செல்களில் மாற்றங்களை உண்டாக்கி, பல ஆண்டுகள் கழித்துப் புற்றுநோயாக மாறுகின்றன.
அனைவருக்கும் புற்றுநோய் வருமா? கண்டிப்பாக இல்லை. மனித உடல் தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் ஆற்றல் கொண்டது. ஆனால், அந்த ஆற்றல் குறையும்போது அல்லது சரியான நேரத்தில் உதவி கிடைக்காதபோதுதான் பாதிப்பு ஏற்படுகிறது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது ஒரே நாளில் உருவாகும் ஒன்றல்ல. இது உருவாக பல வருடங்கள் ஆகின்றன. இந்த இடைப்பட்ட காலமே மிகப்பெரிய வாய்ப்பு. 'பேப் ஸ்மியர்' (Pap smear) மற்றும் 'HPV DNA' போன்ற பரிசோதனைகள் மூலம், புற்றுநோய் உருவாவதற்கு முன்பே செல்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து தடுத்துவிடலாம்.

முற்றிலுமாக குணப்படுத்த முடியுமா?
- பாலியல் உறவு தொடங்குவதற்கு முன்பே (9 முதல் 14 வயது வரை) பெண்களுக்கு HPV தடுப்பூசி போடுவதன் மூலம் இதைத் தடுக்கலாம்.
- 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் (எச்.ஐ.வி பாதிப்பு இருந்தால் 25 வயது) முறையான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், மிக வெற்றிகரமாகச் சிகிச்சை அளிக்கப்படக்கூடிய புற்றுநோய்களில் இதுவும் ஒன்று.
நவீன மருத்துவ கருவிகள் இருந்தாலும், அவை அனைவருக்கும் சென்றடைவதில்லை. விழிப்புணர்வு இல்லாமை, சுகாதாரக் கட்டமைப்பு வசதி குறைவு, பாலியல் ஆரோக்கியம் குறித்துப் பேசத் தயங்கும் சமூகச் சூழல் மற்றும் சிகிச்சைக்கு ஆகும் செலவு ஆகியவை மிகப்பெரிய தடைகளாக உள்ளன. பல பகுதிகளில் பெண்களுக்குப் பரிசோதனை செய்துகொள்ளும் வாய்ப்பே கிடைப்பதில்லை.
2030 இலக்கு: இந்த நோயை முற்றிலும் ஒழிக்க உலக சுகாதார நிறுவனம் 2030-ஆம் ஆண்டிற்குள் மூன்று முக்கிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
- 90% பெண் குழந்தைகளுக்கு 15 வயதிற்குள் முழுமையாக தடுப்பூசி போடுதல்.
- 70% பெண்களுக்கு 35 மற்றும் 45 வயதிற்குள் தரமான பரிசோதனைகளை உறுதி செய்தல்.
- 90% பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான சிகிச்சை அளித்தல்.
இந்த இலக்குகளை எட்டினால், 2120-ஆம் ஆண்டிற்குள் சுமார் 6.2 கோடி உயிர்களைப் பாதுகாக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

