உயர் ரத்த அழுத்தம் குறையணுமா? இந்த 18 உணவுகள சாப்பிட்டு பாருங்க!
ஓட்ஸில் 'பீட்டா-க்ளூக்கன்' என்ற கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதுடன், ரத்த அழுத்தமும் உயரமால் பார்த்துக்கொள்கிறது.

Published : October 7, 2026 at 4:17 PM IST
உயர் ரத்த அழுத்தம் என்பது இன்றைக்கு பலரின் உடலையும் மனதையும் ஒரே நேரத்தில் அச்சுறுத்தும் ஒரு முக்கிய ஆரோக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் நான்கில் ஒரு பெரியவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது.
ஆனால், அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு தங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமிருப்பது கூட தெரியாமல் இருப்பதுதான். தவறான உணவுப் பழக்கம், முறையற்ற வாழ்வியல் முறை, அதிக மன அழுத்தம் மற்றும் உடலுழைப்பின்மை போன்ற பல்வேறு காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
ஆரம்பத்திலேயே இதை கவனிக்காவிட்டால் இதயம், சிறுநீரகம் மற்றும் மூளை சார்ந்த கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், சரியான மருந்துகளுடன் சேர்த்து அன்றாட உணவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அப்படி ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும் உணவுகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பெர்ரி பழங்கள்: ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் 'அந்தோசயனின்' என்ற சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது ரத்த நாளங்களை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருக்கவும், தமனிகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கவும் துணைபுரிகிறது. இவற்றை தினமும் காலை உணவோடு அல்லது பழக்கூழாக சாப்பிட்டு வரலாம்.
வாழைப்பழம்: வாழைப்பழத்தில் பொட்டாசியம் தாதுச்சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் அதிகப்படியான சோடியம், அதாவது உப்பின் கெடுதலான விளைவுகளைச் சமன் செய்ய பொட்டாசியம் பெரிதும் உதவுகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது ரத்த நாளங்களின் சுவர்களில் ஏற்படும் அழுத்தத்தைத் தளர்த்தும்.
பீட்ரூட்: பீட்ரூட்டில் இயற்கையாகவே 'நைட்ரேட்' சத்து அதிகம் உள்ளது. இது உடலில் செரிமானமாகும் போது நைட்ரிக் ஆக்சைடாக மாறி, குறுகிய நிலையில் இருக்கும் ரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகி, ரத்த அழுத்தம் உடனடியாக குறைய தொடங்குகிறது.
டார்க் சாக்லேட்: சர்க்கரை சேர்க்கப்படாத அல்லது குறைந்த அளவிலான டார்க் சாக்லேட்டில் 'ஃபிளவனாய்டுகள்' என்ற கூட்டுப்பொருட்கள் உள்ளன. இவை ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் கலோரியை கருத்தில் கொண்டு இதை அளவோடு உண்பது நல்லது.
கிவி பழங்கள்: தினமும் காலை உணவுக்கு முன்பாக இரண்டு கிவி பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு சிஸ்டோலிக் ரத்த அழுத்தம் கணிசமாக குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் வைட்டமின் C சத்தும் நிறைந்துள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் சேர்த்து உயர்த்துகிறது.
தர்பூசணி: தர்பூசணியில் 'சிட்ருலைன்' என்ற அமினோ அமிலம் உள்ளது. இது உடலில் அர்ஜினைனாக மாறி, நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை அதிகரிக்கிறது. கோடைக்காலத்தில் தர்பூசணி சாறு அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
ஓட்ஸ்: ஓட்ஸில் 'பீட்டா-க்ளூக்கன்' என்ற கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதுடன், ரத்த அழுத்தமும் உயரமால் பார்த்துக்கொள்கிறது. காலை உணவாக ஓட்ஸ் கஞ்சி அல்லது ஓட்ஸ் அடை செய்து சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பசலை மற்றும் பச்சை இலைக் காய்கறிகள்: பசலைக்கீரை, முட்டைக்கோஸ், சிறுகீரை போன்ற இலைக்காய்கறிகளில் நைட்ரேட்டுகளும் பொட்டாசியமும் தாராளமாக உள்ளன. வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் உணவில் கீரை வகைகளை சேர்த்துக்கொள்வது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மிக எளிய வழியாகும்.
பூண்டு: பூண்டில் உள்ள 'அல்லிசின்' என்ற வேதிப்பொருள் இயற்கை மருத்துவக் குணங்கள் கொண்டது. சமையலில் பூண்டை அதிகம் சேர்த்துக்கொள்வது அல்லது தினமும் ஒரு பல் பூண்டை நசுக்கிச் சாப்பிடுவது தமனிகளின் விறைப்புத் தன்மையைக் குறைத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.
நொதித்த உணவுகள்: தயிர், மோர்க்களி, ஆப்பிள் சைடர் வினிகர் போன்ற நொதித்த உணவுகளில் உடலுக்கு நன்மை செய்யும் புரோபயாடிக் பாக்டீரியாக்கள் உள்ளன. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமன்றி, மறைமுகமாக ரத்த அழுத்தத்தையும் சீராக வைக்கத் துணைபுரிகின்றன.
பருப்பு மற்றும் பயறு வகைகள்: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, சுண்டல் மற்றும் காராமணி போன்ற பருப்பு வகைகளில் புரதமும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளன. தினசரி உணவில் பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்வது ரத்த நாளங்களின் சுவர்களை வலுப்படுத்தி அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.
தயிர்: சர்க்கரை சேர்க்காத கெட்டித் தயிர் அல்லது மோர் சாப்பிடுவது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். இதில் உள்ள கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகள் ரத்த நாளங்களின் சுருங்கி விரியும் தன்மையைச் சீராகப் பராமரிக்கின்றன.
மாதுளைப்பழம்: மாதுளம்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கின்றன. தொடர்ந்து மாதுளம் பழச்சாறு குடித்து வருவது சிஸ்டோலிக் மற்றும் டயஸ்டோலிக் என இரண்டு வகை ரத்த அழுத்தத்தையுமே குறைக்க வல்லது.
இலவங்கப்பட்டை: நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பட்டையில் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருத்துவக் குணங்கள் உள்ளன. டீ அல்லது காலை உணவில் சிறிதளவு பட்டைப் பொடியைத் தூவி சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
நட்ஸ் வகைகள்: வால்நட்ஸ், பிஸ்தா, பாதாம் போன்ற கொட்டை வகைகளில் நல்ல கொழுப்புச் சத்தும் மெக்னீசியமும் உள்ளன. உப்பு சேர்க்காத வறுத்த கொட்டை வகைகளைத் தினமும் ஒரு கைப்பிடி சாப்பிட்டு வருவது ரத்த அழுத்த நிர்வாகத்திற்கு நல்லது.
சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற பழங்களில் 'ஹெஸ்பெரிடின்' என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. தினமும் எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு சாறு அருந்தி வருவது ரத்த நாளங்களை நெகிழ்வாக வைத்திருக்க செய்யும்.
கொழுப்பு சத்து நிறைந்த மீன்கள்: மத்தி, கானாங்கெளுத்தி, டியூனா போன்ற மீன்களில் 'ஒமேகா-3' கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. வாரத்திற்கு இரண்டு முறை மீன் உணவுகளை சேர்த்துக்கொள்வது இதய நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்த ஆபத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
தக்காளி: தக்காளியில் உள்ள 'லைகோபீன்' என்ற சத்து இதயத்திற்கு மிகவும் நல்லது. செறிவூட்டப்பட்ட தக்காளி சாறு அல்லது சமைத்த தக்காளி உணவுகளை சாப்பிடுவது உயர் ரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்க உதவும்.
தவிர்க்க வேண்டிய உணவுகளும் வாழ்க்கை முறையும்
- அதிக உப்பு: சமையலில் உப்பை குறைப்பதுதான் முதன்மையான படி. ஊறுகாய், அப்பளம், கருவாடு போன்ற உப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகள், ரெடிமேட் உணவுகளில் அதிகளவில் சோடியம் இருக்கும் என்பதால் அவற்றை வாங்காமல் இருப்பது நல்லது.
- காபி மற்றும் மதுபானம்: அதிகப்படியான காபி அருந்துவது தற்காலிகமாக ரத்த அழுத்தத்தை உயர்த்தும். மது அருந்தும் பழக்கம் ரத்த நாளங்களை சுருங்க செய்து நிலைமையை மோசமாக்கும்.
உணவு கட்டுப்பாட்டுடன் தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தை குறைக்க தியானம் அல்லது மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது மற்றும் புகைபிடித்தலை முற்றிலும் நிறுத்துவது போன்ற மாற்றங்கள் ரத்த அழுத்தத்தை முழுமையாக கட்டுக்குள் வைக்க வழிவகுக்கும்.
ஆய்வு:
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC8965354/

