ETV Bharat / health

உடல் சூட்டை தணிக்க உதவும் மண்பானை தண்ணீர் - பிற நன்மைகளையும் தெரிஞ்சுக்கோங்க!

மண்பானை தண்ணீரில் உள்ள அதிகப்படியான பிஹெச் அளவு மற்றும் கனிமங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்குகின்றன.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : April 8, 2026 at 2:32 PM IST

3 Min Read
Choose ETV Bharat

கடும் வெயில் காலத்தில் தாகம் எடுத்தால் நாம் முதலில் தேடுவது குளிர்ந்த தண்ணீரைத்தான். சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள நீர் பந்தல்களில் மண்பானைகளில் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை ஒரு சொம்பு குடித்தால், அப்போது கிடைக்கும் நிம்மதிக்கு அளவே இருக்காது.

'அப்பாடா' என்று உடல் குளிர்ந்து போகும் அந்த உணர்வு, பிரிட்ஜில் இருந்து எடுத்து குடிக்கும் ஐஸ் தண்ணீரில் நிச்சயம் கிடைக்காது. இதனால்தான் இன்றும் பல வீடுகளில் கோடை காலம் வந்தாலே மண்பானை வாங்கி, அதில் தண்ணீர் நிரப்பி குடிப்பதை ஒரு வழக்கமாக வைத்துள்ளனர்.

நமது முன்னோர் காலம் தொட்டே புழக்கத்தில் இருக்கும் இந்த மண்பானைகள், வெறும் தண்ணீரை சேமிப்பதற்காக மட்டுமல்ல, அவை இயற்கையான முறையில் தண்ணீரை சுத்திகரிக்கும் ஒரு சிறிய தொழிற்சாலை என்றே சொல்லலாம். மண்பானையில் தண்ணீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இயற்கையான கனிமங்கள்

பிளாஸ்டிக் அல்லது ஸ்டீல் பாட்டில்களை காட்டிலும் மண்பானைகள் பல மடங்கு ஆரோக்கியமானவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். களிமண்ணில் இயற்கையாகவே ஏராளமான தாதுக்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்துள்ளன. ஒரு மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைக்கும்போது, அந்த மண்ணில் உள்ள சத்துக்களைத் தண்ணீர் மெதுவாக ஈர்க்கிறது.

இதனால் எந்தவிதமான கூடுதல் செலவும் இன்றி, உடலுக்கு தேவையான அத்தியாவசிய மினரல்கள் நமக்கு கிடைக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் பிஸ்பெனால் ஏ போன்ற நச்சு ரசாயனங்கள் கலக்க வாய்ப்புள்ள நிலையில், மண்பானையில் சேமிக்கப்படும் நீர் முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.

தண்ணீரின் தரம் மற்றும் சுத்திகரிப்பு

மண்பானைகள் தண்ணீரின் தரத்தை மேம்படுத்துகின்றன என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் (National Library of Medicine) வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டில்களை விட மண்பானை போன்ற மண் பாத்திரங்களில் சேமிக்கப்படும் தண்ணீரின் தரம் மிகச்சிறப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மண்பானையில் தண்ணீரை சேமித்து வைக்கும்போது, மூன்றாவது நாளின் முடிவில் அதில் உள்ள ஈ-கோலை (E. coli) போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக குறைந்துவிடுவதாக ஆய்வு கூறுகிறது. மேலும், ரிசர்ச்கேட் (ResearchGate) தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மண்பானைகள் தண்ணீரில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாக்டீரியா தொற்றுகளை குறைப்பதன் மூலம் தண்ணீரின் தூய்மையை இயற்கையாகவே மேம்படுத்துகின்றன.

குளிர்ச்சியும் பிஹெச் (pH) அளவும்

பிரிட்ஜில் வைக்கும் தண்ணீர் செயற்கையாக குளிர்வூட்டப்படுவதால், அதை குடித்த சிறிது நேரத்திலேயே மீண்டும் தாகம் எடுக்கும். ஆனால், மண்பானையில் உள்ள கண்ணுக்கு தெரியாத நுண்துளைகள் வழியாக காற்று உள்ளே செல்வதால், தண்ணீர் இயற்கையான முறையில் குளிர்வடைகிறது. இதனை 'ஆவியாதல் மூலம் குளிர்வித்தல்' என்று அறிவியல் ரீதியாக அழைக்கிறார்கள்.

இது தொண்டைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், மண்ணிற்கு இயற்கையாகவே காரத்தன்மை (Alkaline) உண்டு. இது தண்ணீரின் பிஹெச் (pH) அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. இதனால் அமிலத்தன்மை மற்றும் செரிமான கோளாறுகள் உள்ளவர்களுக்கு மண்பானை தண்ணீர் ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நீண்ட நேரம் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க இது உதவுகிறது.

ஹார்மோன் சமநிலையும் உடல் எடையும்

பிளாஸ்டிக் பாட்டில்களில் நீண்ட நேரம் சேமிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதால் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவு குறைய வாய்ப்புள்ளதாக பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன. மண்பானைகளை பயன்படுத்துவதன் மூலம் இத்தகைய ஹார்மோன் குறைபாடுகளை தவிர்க்கலாம்.

மேலும், மண்பானை தண்ணீரில் உள்ள அதிகப்படியான பிஹெச் அளவு மற்றும் கனிமங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்குகின்றன. இதனால் உடல் எடை குறைய விரும்புபவர்களுக்கும், பருமனைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் இந்தத் தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆயுர்வேத முறையிலும் மண்பானைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பாரம்பரியமும் ஆரோக்கியமும்

மண் பாத்திரங்களில் சமைப்பதும், தண்ணீர் குடிப்பதும் நமது பாரம்பரியமான வாழ்வியலின் ஒரு அங்கமாகும். மண்பானையில் உள்ள நுண்துளைகள் நீரை சுத்தமாக வைப்பதுடன், அதன் சுவையையும் இயற்கையாகவே கூட்டுகிறது. மண் பாத்திரத்தில் சமைக்கும் உணவின் சுவையும் சத்தும் மாறாமல் இருப்பதைப் போலவே, மண்பானையில் ஊற்றி வைத்த தண்ணீரும் அதன் தரம் மாறாமல் அப்படியே இருக்கும்.

இதையும் படிங்க:

கோடை வெப்பத்தை தணிக்க உதவும் 'ஜாம்பக்காய்' - வேறு நன்மைகள் என்னென்ன?

தர்பூசணி தோலை இனி தூக்கி வீசாதீங்க..இதயம் காக்கும் நன்மைகள் நிறைந்திருக்கு!

பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.