நாள்பட்ட நரம்பு வலிக்கு தீர்வாகும் புற்றுநோய் மருந்து? சர்வதேச ஆய்வில் தகவல்!
புற்றுநோயை குணப்படுத்த பயன்படும் சில மருந்துகள், இந்த நாள்பட்ட நரம்பு வலியையும் போக்கக்கூடும் என்று சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.

Published : September 1, 2026 at 2:40 PM IST
நம் வீடுகளிலோ அல்லது நமக்கு தெரிந்தவர்களிலோ சிலரை பார்த்திருப்போம். அடிபட்ட காயம் எல்லாம் ஆறு மாதத்திற்கு முன்பே ஆறினாலும், அந்த இடத்தில் நரம்பு ஊசி கொண்டு குத்துவது போல வலிக்கிறது, மரத்துப்போகிறது, எரியிறது என்று புலம்புவார்கள். சாதாரண வலி நிவாரண மாத்திரைகளை எவ்வளவு சாப்பிட்டாலும் இந்த நரம்பு வலிக்கு பெரிய அளவிலான பலன் கிடைக்காது.
ஏன் இந்த நரம்பு வலி மட்டும் நம்மை இவ்வளவு தூரம் வதைக்கிறது? காயம் ஆறினாலும் நரம்புகள் ஏன் அந்த வலி செய்தியை மூளைக்கு அனுப்பிக்கொண்டே இருக்கின்றன? இந்த கேள்விக்கு விடை தெரியாமல் இத்தனை காலம் தவித்து கொண்டிருந்த மருத்துவ உலகிற்கு, இப்போது ஒரு பதில் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
பொதுவாக புற்றுநோயை குணப்படுத்த பயன்படும் சில மருந்துகள், இந்த நாள்பட்ட நரம்பு வலியையும் போக்கக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? புற்றுநோய்க்கும் நரம்பு வலிக்கும் என்ன சம்பந்தம், இந்த மருந்துகள் எப்படி வேலை செய்கின்றன என்பதை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.
நரம்பு வலி ஏன் இவ்வளவு கொடூரமானது?
நமக்கு உடலில் எங்காவது காயம் ஏற்பட்டால், அந்த வலி சில நாட்களில் ஆறிவிடும். ஆனால், நரம்புகள் பாதிக்கப்படும்போது ஏற்படும் வலி (Neuropathic pain) அப்படிப்பட்டது அல்ல. விபத்து, நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்), அல்லது சில கடுமையான நோய்களுக்கான சிகிச்சைக்கு பிறகு நரம்புகள் சேதமடையலாம்.
இந்த நரம்பு பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கூட வலி நீடிக்கும். இதனால் அன்றாட வேலையை செய்ய முடியாமல், தூக்கம் வராமல் பலர் அவதிப்படுவார்கள். தற்போது சந்தையில் இருக்கும் பெரும்பாலான வலி நிவாரணிகள் இந்த வலிக்கு தற்காலிக நிவாரணத்தை மட்டுமே தருகின்றன. சில மருந்துகளால் பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.
புற்றுநோய் புரதம்!
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற 'எம்.டி. ஆண்டர்சன் புற்றுநோய் மையம்' (MD Anderson Cancer Centre) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டனர். நரம்புகள் பாதிக்கப்பட்ட பிறகு, வலி செய்தி எப்படி மூளைக்கு பெருமளவில் கடத்தப்படுகிறது என்பதை அவர்கள் ஆராய்ந்தார்கள்.
அப்போது அவர்கள் ஒரு முக்கிய விஷயத்தை கண்டுபிடித்தார்கள். மனித உடலில் BRAF என்ற ஒருவகை புரதம் (Protein) இருக்கிறது. இதுவரை இந்த புரதம் புற்றுநோய் கட்டிகள் வளர்வதற்கு மட்டுமே காரணமாக இருக்கிறது என்றுதான் அனைவரும் நினைத்து கொண்டிருந்தார்கள். ஆனால், நரம்பு சேதமடைந்த பிறகு, இந்த BRAF புரதம் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கி, வலியின் தீவிரத்தை பலமடங்கு உயர்த்துகிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நரம்புகளுக்குள் நடப்பது என்ன?
நமது மூளைக்கும் தண்டுவடத்திற்கும் இடையே தகவல்களை கொண்டு செல்ல 'என்.எம்.டி.ஏ' (NMDA receptors) என்ற சிறப்பு பாதைகள் உள்ளன. நரம்புகளில் காயம் ஏற்படும்போது, இந்த BRAF புரதமானது தண்டுவடத்தை நோக்கி பயணம் செய்து, NMDA பாதைகளை அளவுக்கு அதிகமாக இயங்க வைக்கிறது.
எளிமையாக சொன்னால், ஒரு சிறிய ஒலி பெருக்கியின் (Mic) வால்யூமை சட்டென்று அதிகப்படுத்தினால் சத்தம் காதை பிளப்பது போல, இந்த BRAF புரதம் வலி செய்தியின் 'வால்யூமை' மிக அதிகமாக உயர்த்தி மூளைக்கு அனுப்புகிறது. இதனால் தான் காயம் ஆறினாலும், நரம்புகளில் தீராத எரிச்சலும், வலியும் நீடித்து கொண்டே இருக்கிறது.
புற்றுநோய் மருந்துகள் எப்படி வலியை குறைக்கின்றன?
புற்றுநோய் சிகிச்சையில், இந்த BRAF புரதத்தின் செயல்பாட்டை தடுப்பதற்கென்றே தனியாக மருந்துகள் (BRAF inhibitors) பயன்பாட்டில் உள்ளன. ஆய்வாளர்கள் இந்த புற்றுநோய் மருந்துகளை பயன்படுத்தி நரம்பு வழியை தடுக்கும் சோதனையை செய்து பார்த்தனர்.
ஆய்வக சோதனைகளில், BRAF புரதத்தின் செயல்பாட்டை முடக்கியபோது, நரம்புகளின் வலி உணர்திறன் பெருமளவில் குறைந்தது வெளிப்படையாக தெரிந்தது. அதாவது, வலி செய்தியை அதிகப்படுத்தி அனுப்பும் பாதையை இந்த மருந்துகள் வெற்றிகரமாக அடைத்துவிட்டன.
இதன் மூலம், ஏற்கனவே புற்றுநோய்க்காக பயன்படுத்தப்படும் இந்த மருந்துகளை, எதிர்காலத்தில் நாள்பட்ட நரம்பு வலிக்கும் பயன்படுத்த முடியும் என்ற புதிய கதவு திறந்துள்ளது.
புற்றுநோய் சிகிச்சை முடிந்தோருக்கு ஒரு நற்செய்தி
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் கீமோதெரபி (Chemotherapy) சிகிச்சையின் பக்கவிளைவாக பலருக்குக் கை, கால்களில் நரம்பு வலி, மரத்துப்போதல், எரியும் உணர்வு ஆகியவை ஏற்படும். புற்றுநோய் குணமான பிறகும் கூட இந்த நரம்பு வலி அவர்களை படுத்தி எடுக்கும்.
தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த BRAF புரத வழித்தடம், கீமோதெரபியால் ஏற்படும் நரம்பு வலியை கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவே இறுதி சிகிச்சையா?
இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும், இது தொடக்கக்கட்ட ஆய்வு மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த ஆய்வுகள் அனைத்தும் முதற்கட்டமாக ஆய்வக சோதனைகளிலேயே உறுதி செய்யப்பட்டுள்ளன. புற்றுநோய் மருந்துகள் என்பதால், அவற்றை நேரடியாக வலி மாத்திரையாக பயன்படுத்த முடியாது. அவற்றிற்கு சில பக்கவிளைவுகள் இருக்கின்றன.
மனித உடலில் இந்த மருந்துகள் எந்த அளவில் பாதுகாப்பாக செயல்படும், எவ்வளவு அளவு (Dosage) கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள இன்னும் பல கட்ட மனித மருத்துவ சோதனைகள் தேவைப்படுகின்றன.
எதிர்கால மருத்துவத்தின் புதிய நம்பிக்கை
இதுவரை மருத்துவ உலகம் நரம்பு வழியை குறைக்க, வலியை மறக்கடிக்கும் மருந்துகளை மட்டுமே கொடுத்து வந்தது. ஆனால், இந்த புதிய கண்டுபிடிப்பு வலியின் மூலக்காரணமான உயிரியல் பாதையையே அடைக்கும் வழியை காட்டியுள்ளது.
மனித சோதனைகளிலும் இது வெற்றிபெற்றால், எதிர்காலத்தில் நரம்பு வலியால் அவதிப்படும் லட்சக்கணக்கான மக்களுக்கு, பக்கவிளைவுகள் இல்லாத ஒரு நிரந்தர தீர்வை அளிக்க முடியும் என்று 'சயின்ஸ் சிக்னலிங்' இதழில் வெளியாகி உள்ள இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

