குடும்ப சுமையால் தொலைந்துபோகும் பெண்களின் தூக்கம் - ஆய்வில் முக்கிய தகவல்!
வேலைக்கு செல்பவர்களில் 77 சதவீதத்தினர் சரியாக தூங்காத காரணத்தால் அலுவலகத்திற்கு 'சிக் லீவ்' எடுக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர் என்கிறது ஆய்வு.

Published : March 4, 2026 at 12:18 PM IST
காலையில் அலாரம் அடிப்பதற்கு முன்பே விழிப்பதற்கும், அலாரம் அடித்து ஓயும் வரை எழ முடியாமல் தவிப்பதற்கும் இடையே தான் பலரது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. 2026-ஆம் ஆண்டு 30,000 பேரிடம் நடத்தப்பட்ட ரெஸ்மெட் நிறுவனத்தின் உலகளாவிய ஆய்வு, இந்தியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வாரத்தில் நான்கு நாட்களுக்கும் குறைவாகவே நிம்மதியாக தூங்குவதாக தெரிவிக்கிறது.
அன்று இரவு சரியாகத் தூங்கவில்லை என்றால், அடுத்த நாள் முழுவதும் நம்முடைய நிதானம் தவறுவதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்திருப்போம். "நேரம் ஆகிவிட்டது, சீக்கிரம் தூங்கு" என்று வீட்டில் பெரியவர்கள் சொல்வதை ஒரு காலத்தில் சாதாரணமாகக் கடந்து போயிருப்போம். ஆனால், இன்று அந்த ஆழ்ந்த தூக்கம் என்பது பலருக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது.
வேலைப்பளு, குடும்பப் பொறுப்புகள், கையில் இருக்கும் செல்போன் எனப் பல காரணங்களால் நம் கண்கள் உறக்கத்தைத் தொலைக்கின்றன. குறிப்பாக, இந்தியப் பெண்கள் ஆண்களை விட அதிக மன அழுத்தம் மற்றும் குடும்பச் சுமைகளால் தூக்கமின்மைக்கு ஆளாகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.
ஒரு வீட்டில் உள்ள பெண் சரியாக தூங்கவில்லை என்றால், அந்த வீட்டின் ஒட்டுமொத்த இயல்புநிலையே மாறுவதை நாம் கவனிக்க முடியும். காலையில் சீக்கிரம் எழுந்து சமையல் செய்வது முதல், அலுவலக வேலை, குழந்தைகளின் படிப்பு என சுழலும் பெண்களுக்கு தூக்கம் என்பது ஒரு ஆடம்பரப் பொருளாகிவிட்டது.
'கொஞ்சம் நிம்மதியா தூங்கினா போதும்' என்கிற எண்ணம் இன்று பல இந்தியர்களிடம் மேலோங்கி இருக்கிறது. தூக்கம் என்பது வெறும் ஓய்வு மட்டுமல்ல, அது அடுத்த நாளை எதிர்கொள்வதற்கான ஒரு அடிப்படைத் தேவை என்பதை இந்த ஆய்வு நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகிறது.
ஆய்வு கூறுவது என்ன? இந்த ஆய்வானது இந்தியா உட்பட 13 நாடுகளில் நடத்தப்பட்டது. இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 5,000 பேர் பங்கேற்றனர். ஆரோக்கியமான வாழ்விற்கு உணவும் உடற்பயிற்சியும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தூக்கமும் முக்கியம் என்று 44 சதவீத இந்தியர்கள் கருதுகின்றனர். இருப்பினும், 53 சதவீதத்தினர் தரமான தூக்கத்தைப் பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
பெண்களின் நிலை! ஆண்களை விட பெண்களே தூக்கமின்மையால் அதிகம் பாதிக்கப்படுவதை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு.
- தூங்குவதில் சிரமம்: 38 சதவீதப் பெண்கள் தூக்கம் வராமல் தவிக்கின்றனர். ஆண்களில் இது 29 சதவீதமாக உள்ளது.
- மன அழுத்தம்: 42 சதவீதப் பெண்களின் தூக்கத்தைப் பதற்றமும் கவலையும் பாதிக்கிறது. இது ஆண்களை விட (36%) அதிகம்.
- குடும்பப் பொறுப்புகள்: 39 சதவீதப் பெண்கள் குடும்ப சுமைகளால் தூக்கத்தை தொலைக்கின்றனர். ஆண்களில் இது 33 சதவீதம் மட்டுமே.
தூக்கத்தை தடுக்கும் முக்கிய காரணிகள்: 39 சதவீதம் மன அழுத்தம் அல்லது கவலை, 37 சதவீதம் அலுவலக வேலைப்பளு, 31 சதவீதம் வீட்டுப் பொறுப்புகள் தான் இந்தியர்களை பொறுத்தவரை தூக்கத்திற்கு தடையாக இருப்பதாகா ஆய்வு கூறுகிறது.
வேலை மற்றும் உற்பத்தித்திறன்: சரியான தூக்கம் இல்லாததால் 71 சதவீத ஊழியர்கள் தங்களால் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடிவதில்லை என்று கூறியுள்ளனர். மேலும், 77 சதவீதத்தினர் சரியாக தூங்காத காரணத்தால் அலுவலகத்திற்கு 'சிக் லீவ்' எடுக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அதேசமயம், 72 சதவீதத்தினர் Flexible working இருந்தால் தூக்கத்தைச் சீர் செய்ய முடியும் என்று நம்புகின்றனர்.
மனநலமும் தூக்கமும்: தூக்கமின்மை வெறும் உடல் சோர்வை மட்டும் தருவதில்லை. தூக்கம் குறைந்தால் அடுத்த நாள், அதிக மன அழுத்தம், எரிச்சல் உணர்வு, மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ ஆலோசனை: தற்போது 75 சதவீத இந்தியர்கள் ஸ்மார்ட் வாட்ச் போன்ற கருவிகள் மூலம் தங்களது தூக்கத்தை கண்காணித்து வருகின்றனர். இதில் ஏதேனும் குறைபாடுகள் தெரிந்தால் மருத்துவரை அணுக தயாராக இருப்பதாக 66 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.
இருப்பினும், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளின் போது வெறும் 69 சதவீதம் பேரிடம் மட்டுமே மருத்துவர்கள் தூக்கத்தை பற்றி விசாரிப்பதாக தெரிகிறது. இந்த ஆய்வு முடிவுகள், தூக்கம் என்பது தனிநபர் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது ஒரு சமூக மற்றும் பொது சுகாதாரப் பிரச்னை என்பதை உணர்த்துகிறது.
இதையும் படிங்க: ரத்த சோகையை குணப்படுத்த உதவும் பச்சை பயறு! மொத்த நன்மைகளையும் பெற இப்படி தான் சாப்பிடனும்! உலக புரதச்சத்து தினம்: வயதிற்கு ஏற்ப எவ்வளவு தேவை? ICMR வழிகாட்டுதல்! |
பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

