ETV Bharat / health

கிராமப்புறப் பெண்களிடம் அதிகரிக்கும் ரத்த அழுத்தம்: அதிர்ச்சி தரும் தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு தரவு!

NFHS-5 உடன் ஒப்பிடும்போது தற்போதைய NFHS-6ல் ஒட்டுமொத்த பாதிப்பு விகிதம் சற்றே குறைந்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : June 2, 2026 at 3:49 PM IST

3 Min Read
Choose ETV Bharat

இந்தியாவில் அமைதியாகப் பரவி வரும் ஒரு முக்கிய உடல்நலம் சார்ந்த எச்சரிக்கையை அண்மையில் வெளியான தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS-6) நம் கண்முன்னே நிறுத்தியுள்ளது. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும் வரை வெளியே எந்தவிதமான அறிகுறியையும் காட்டாததால், ரத்த அழுத்தத்தை 'சைலண்ட் கில்லர்' என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.

மணிப்பூர் மாநிலத்தை தவிர்த்து, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்களின் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் மக்கள் தொகை மாற்றங்களை அடிப்படையாக கொண்டு இந்த விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

மே 29ம் தேதி வெளியான இந்த ஆய்வின் முடிவுகள், நாட்டின் தடுப்பூசி போடுதல், மகப்பேறு மருத்துவம் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டினாலும், ரத்த அழுத்தப் பிரச்சனையில் நாம் இன்னும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் இந்த பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வின் முக்கிய புள்ளிவிவரங்கள்

இந்த ஆய்வின்படி, இந்தியாவில் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் 19.4 சதவீதத்தினரும், ஆண்களில் 22.1 சதவீதத்தினரும் அதிக ரத்த அழுத்த பாதிப்பைக் கொண்டுள்ளனர் அல்லது அதனை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை உட்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாழ்க்கை முறைக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் இந்த ஆய்வு தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

  • பெண்களின் பாதிப்பு: கிராமப்புறங்களில் உள்ள பெண்களில் 17.8 சதவீதத்தினருக்கும், நகர்ப்புறங்களில் வாழும் பெண்களில் 23.5 சதவீதத்தினருக்கும் ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது.
  • ஆண்களின் பாதிப்பு: கிராமப்புற ஆண்களில் 20.4 சதவீதத்தினரும், நகர்ப்புற ஆண்களில் 26.2 சதவீதத்தினரும் இந்த பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

இதன் மூலம் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கே இந்த பாதிப்பு அதிகமாக இருப்பது உறுதியாகிறது.

கடந்த கலாம் Vs தற்போதைய நிலை:

இருப்பினும், ஒரு சிறிய ஆறுதலான விஷயம் என்னவென்றால், இதற்கு முந்தைய கணக்கெடுப்பான NFHS-5 உடன் ஒப்பிடும்போது தற்போதைய NFHS-6 இல் ஒட்டுமொத்த பாதிப்பு விகிதம் சற்றே குறைந்துள்ளது. கடந்த ஆய்வில் பெண்களிடம் 21.3 சதவீதமாக இருந்த பாதிப்பு தற்போது 19.4 சதவீதமாகவும், ஆண்களிடம் 24 சதவீதமாக இருந்த பாதிப்பு தற்போது 22.1 சதவீதமாகவும் குறைந்துள்ளதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

பாதிப்புகள் மற்றும் ஆபத்துகள்

ரத்த நாளம் மற்றும் இதயத்தின் சுவர்கள் மீது ரத்தம் அதிக விசையுடன் மோதும் போது, அது ஒட்டுமொத்த இருதய அமைப்பையும் பலவீனப்படுத்துகிறது. காலப்போக்கில் இது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கு பின்வரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

  • இதய பாதிப்புகள்: தொடர்ச்சியான அழுத்தத்தால் ரத்த நாளங்கள் தடிமனாகி, சுருங்குவதால் இதயத்திற்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. இதனால் இதயம் கூடுதல் பலத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, இறுதியில் அது செயலிழக்க நேரிடலாம்.
  • மூளை மற்றும் நினைவாற்றல்: மூளையில் உள்ள மென்மையான ரத்த நாளங்கள் வெடிப்பதற்கோ அல்லது அடைப்பு ஏற்படுவதற்கோ அதிக ரத்த அழுத்தம் காரணமாகிறது. இது பக்கவாதத்திற்கு வழிவகுப்பதோடு, பிற்காலத்தில் நினைவாற்றல் இழப்பு (டிமென்ஷியா) நோய்க்கும் காரணமாக அமைகிறது.
  • சிறுநீரக செயலிழப்பு: உடலில் உள்ள கழிவுகளை வடிகட்டும் சிறுநீரகத்தின் ரத்த நாளங்கள் சேதமடைவதால், சிறுநீரகம் செயலிழப்பதோடு அது மீண்டும் ரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் ஒரு நச்சு சுழற்சியை உருவாக்குகிறது.
  • பார்வை குறைபாடு: கண்களின் விழித்திரைக்கு (ரெட்டினா) ரத்தத்தை வழங்கும் சிறிய நாளங்கள் எளிதில் சேதமடைவதால் பார்வை மங்குதல் அல்லது முழுமையான பார்வையின்மை ஏற்பட வாய்ப்புள்ளது.

காரணங்களும் அன்றாட வாழ்வியல் மாற்றங்களும்

மரபணு சார்ந்த காரணங்கள், குடும்ப பின்னணி தவிர நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்களே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. நாம் உண்ணும் உணவில் உப்பின் அளவு அதிகரிப்பது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது, போதிய உடலுழைப்பு இல்லாத வாழ்முறை, உடல் பருமன், புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் போன்றவை ரத்த அழுத்தத்தை நேரடியாக உயர்த்துகின்றன. இது தவிர, சர்க்கரை நோய், நாள்பட்ட சிறுநீரகப் பிரச்சனைகள், தைராய்டு கோளாறுகள் மற்றும் முறையற்ற தூக்கமின்மை போன்ற மருத்துவக் காரணங்களும் இதற்கு பின்னணியில் அமைகின்றன.

தடுப்பது எப்படி?

நமது அன்றாட வாழ்க்கையில் சில எளிய மாற்றங்களை செய்வதன் மூலம் இந்த பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

  • முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் கொழுப்பு குறைந்த புரதச்சத்து உள்ள உணவுகளுக்கு முன்னுரிமை அளித்து, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கும் உணவு முறையை பின்பற்றலாம்.
  • தினசரி உணவில் உப்பின் அளவை 1,500 மில்லிகிராமிற்குள் சுருக்குவது நல்லது. இதற்காக நாம் வாங்கும் உணவுப் பொருட்களின் லேபிள்களை கவனித்து வாங்குவது பயன் தரும்.
  • வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப்பயிற்சி அல்லது சைகிள் ஓட்டுதல் போன்ற எளிய பயிற்சிகளை செய்வது இதயத்தை வலுப்படுத்தும்.
  • உடல் எடையை சீராகப் பராமரிப்பதுடன், மன அழுத்தத்தை குறைக்க ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி, தியானம் மற்றும் தினசரி 7 முதல் 9 மணி நேர நிம்மதியான தூக்கம் அவசியம்.
  • முக்கியமாக, மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவிர்க்காமல் சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை திடீரென நிறுத்துவது ஆபத்தான மருத்துவ அவசர நிலைகளுக்கு வழிவகுக்கும்.

இதையும் படிங்க:

உடலில் எப்போதும் சோர்வா? இந்த வைட்டமின் குறைபாடே முக்கிய காரணம்!

மார்பகப் புற்றுநோய் சிகிச்சை: கீமோதெரபியை தவிர்க்க உதவும் புதிய மரபணு பரிசோதனை!

"ஆயுள் அதிகம், ஆரோக்கியம் குறைவு" - பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் 'லான்செட்' ஆய்வு!