''தமிழ்நாட்டு மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் - பிரேமலதா விஜயகாந்த் முன்பு எஸ்.ஏ. சந்திரசேகர் பேச்சு
சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள 'கொம்புசீவி' திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Published : December 15, 2025 at 5:37 PM IST
சென்னை: மக்களும் சரி, இளைஞர்களும் சரி தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் பேசினார்.
பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள 'கொம்புசீவி' திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் படக்குழுவினர் சரத்குமார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர், ''எனது இனிய நண்பர் கேப்டன் (விஜயகாந்த்) இன்று வரை உங்கள் நெஞ்சில் மட்டுமல்ல, என்னுடைய நெஞ்சிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். விஜயகாந்த் கண்ணில் நெருப்பு, வேகம் இருக்கும். அதே நெருப்பு கலந்த பார்வை சண்முக பாண்டியன் கண்ணில் உள்ளது. படத்தின் போஸ்டரே இப்படத்தின் வீரத்தை சிறப்பாக காட்டுகிறது.
பொன்ராமிடம் பிடித்ததே வேகம், நகைச்சுவை தான் ஆனால் இந்தப்படத்தில் வேகம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மாற்றம் என்பது மட்டும் மாறாது. அது எல்லா துறையிலும் இருக்கும். அரசியல், திரையுலகம் என அனைத்திலும் இருக்கும். எம்ஜிஆர், சிவாஜி அடுத்த தலைமுறை ரஜினி, கமல் அதன் பிறகு இன்றைய சூப்பர் ஸ்டார்கள் என மாற்றங்களை மட்டும் யாரும் மாற்ற முடியாது, இது காலத்தின் கட்டாயம். அதே போல தான் தமிழ்நாட்டு மக்களும் சரி, இளைஞர்களும் சரி தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள்'' என விஜயின் அரசியல் குறித்தும் அவர் மறைமுகமாக பேசினார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், ''இந்தப் படத்தின் கதையை கேட்டதும், யார் ஹீரோ என தெரிந்ததும் உடனே ஒப்புக்கொண்டேன். சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் பெரிய இடம் உள்ளது. சண்முக பாண்டியனுக்கு என்னுடைய குடும்பத்தில் இருக்கும் ஒருவரின் படத்திற்கு இசையமைப்பது போல இருந்தது. இப்போது மட்டுமல்ல, எப்போது அழைத்தாலும் நான் வரவேன். இந்த படத்தில் அம்மா பாடல் ஒன்று உள்ளது. அதை நானும், அப்பாவும் (இளையராஜா) சேர்ந்து பாடியுள்ளோம். முதலில் அப்பா மட்டும் தான் பாடுவதாக இருந்தது. சில இடங்களில் 'ஹை பிச்' இருந்தது, அது என்னால் பாட முடியாது என்று அப்பா சொல்லிவிட்டார். அதனால் உடனடியாக அந்த ஹை பிச்சை நான் பாடினேன்'' என்றார்.
'யுவனும் ஒரு மகன் போலத் தான்'
பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''இங்கு இருக்கும் அனைவரையம் நான் கேப்டனை திருமணம் செய்த நாளில் இருந்து எனக்கு தெரியும். யுவன் சங்கர் ராஜா பிறந்ததிலிருந்து எனக்கு தெரியும். பிரபாகரன், சண்முக பாண்டியன் போல எனக்கு யுவனும் ஒரு மகன் போலத் தான். விஜயகாந்த் - சரத்குமார் இடையிலான நட்பு மிக உண்மையானது, நெருக்கமானது. அந்த வகையில், நடிகர் சங்கத்தில் வெற்றி பெற்ற போது விஜயகாந்திற்கு பக்க பலமாக நின்றவர் சரத்குமார்'' என்றார்.
வலியான கதையில் காமெடி
இயக்குநர் பொன்ராம், ''மூன்றாண்டுகளுக்கு முன்னதாக முதல்முறையாக சண்முக பாண்டியனை நேரில் பார்த்தேன். அவரைப் பார்க்கும் வரையில் அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்கின்ற எண்ணம் எனக்கு இல்லை. பார்த்த பிறகாக இவருக்கு ஒரு திரைப்படம் நிச்சயமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவரை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறேன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்காக ஒரு பாடல் காட்சி எடுப்பதற்காக வைகை அணை அருகே சென்ற போது, அங்கு நான் பார்த்த காட்சிகளை வைத்து தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறேன்.
வலியான கதையில் காமெடியை எப்படி பொருத்துவது என்று யோசித்தேன். இருப்பினும் அதுதான் என்னுடைய தனித்துவம். அந்த வகையில் இதில் சிறப்பான முறையில் காமெடியானது இருக்கிறது. படத்தில் பல காட்சிகளில் கதாநாயகன் சண்முகபாண்டியனை அவரது அப்பாவை பார்ப்பது போல உணர்ந்தேன்'' என்றார்.
'நான் பாக்கியசாலி'
படத்தின் நாயகன் சண்முக பாண்டியன், ''அப்பாவோட நெருங்கிய நண்பர் சரத்குமார். இந்த படத்தில் எனக்கும் நெருங்கிய நண்பர் ஆகிவிட்டார்.
இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருடன் பணியாற்றியது என்னை தவிர எந்த நடிகரும் கிடையாது என்று நினைக்கிறேன். அந்த வகையில் நான் பாக்கியசாலி என்று கருதுகிறேன்.'' என்றார்.
'என்றைக்கும் மறக்க மாட்டேன்'
சரத்குமார் பேசுகையில், ''இது ஒரு உணர்வுபூர்வமான நிகழ்ச்சி. என் கலைப்பயணத்தில் முக்கியமான காலகட்டத்தில் உயிர் கொடுத்தவர் விஜயகாந்த். அதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் படத்தின் போதும் அடிபட்டு 6 மாதம் காலம் படுத்த படுக்கையாக இருந்தேன். விஜயகாந்த் நினைத்திருந்தால் என்னை தூக்கி விட்டு வேறு ஒரு நடிகரை வைத்து பன்னிருக்கலாம், ஆனால் 6 மாத காலம் ஆனாலும் சரத் சரியாகி வரட்டும் என்று கூறினார். எந்த ஒரு நடிகரும் இப்படி செய்யமாட்டார்கள். சண்முக பாண்டியன் பெரிய நடிகராக வருவார். இப்படத்தில் இருவரும் உண்மையான மாமா, மச்சான் போல வாழ்ந்துள்ளோம். சண்முக பாண்டியன் மகன், பேர குழந்தைகள் என யார் நடிக்க வந்தாலும் நானே அவர்களோடு நடிக்கிறேன். இந்த உறவு என்றும் நீர்த்துப்போக கூடாது.'' என பேசினார்.

